“ஹலோ பட்டு குட்டீஸ், எல்லாருக்கும் அன்பு வணக்கங்கள். இன்னும் இந்த பிண்டுவைக் காணோமே?” என்று அனு தேடிக் கொண்டிருக்க,
பரபரவென வேகமாக வந்தது பிண்டு. “சாரி ஃப்ரெண்ட்ஸ், எரிமலையைப் பாத்துட்டு வந்தேனா அதுனால கொஞ்சம் லேட்டாயிடுச்சு!” என்றது.
அனு, “எரிமலையா? நம்ம ஊர்ல தான் எரிமலையே இல்லையே பிண்டு! நீ பொய் தானே சொல்ற?”
“எரிமலையை வீட்டுக்குள்ளயே கொண்டு வரலாம் அனு. நான் சொல்ற பொருட்கள் எல்லாம் எடுத்துட்டு வா, நம்ம வீட்டுக்குள்ளயே எரிமலையைக் கொண்டு வரலாம்” என்று பிண்டு சொன்னதும், அனுவும் அவ்வாறே செய்தாள்.
தேவையான பொருட்கள்:
கண்ணாடி ஜாடி – 1
கண்ணாடி ஜாடியை வைப்பதற்கு பெரிய ட்ரே – 1
வீனிகர்
பேகிங் சோடா
ஃபுட் கலரிங்
கைவினைப் பொருட்களுக்கு பயன்படுத்தும் க்ளிட்டர்ஸ்
செய்முறை:
1. கண்ணாடி ஜாடியைப் பெரிய ட்ரேயில் வைத்துக் கொள்ளவும்.
2. இரண்டு அல்லது மூன்று டேபிள் ஸ்பூன் பேக்கிங் சோடாவை ஜாடிக்குள் போட்டுக் கொள்ளவும்.
3. ஆறு அல்லது ஏழு சொட்டு ஃபுட் கலரிங் சேர்த்துக் கொள்ளவும்.
4. மேலும் இரண்டு ஸ்பூன் க்ளிட்டர்ஸ்ஸையும் போட்டுக் கொள்ளவும்.
5. இறுதியாக அரை கப் வினீகரை வேகமாக ஜாடியில் ஊற்றவும். அடுத்த சில நொடிகளில் நுரை ததும்பும் எரிமலை தயார்.
அறிவியல் உண்மைகள்:
“வினீகரில் உள்ள அமிலமும், பேக்கிங் சோடாவில் உள்ள காரமும் சேர்ந்து நுரை ததும்பும் எரிமலையை உண்டாக்குகிறது. இந்த எளிமையான சோதனையை வீட்டில் செய்து பார்த்து மகிழுங்கள் குட்டீஸ். அடுத்த வாரம் மற்றுமொரு வித்தியாசமான செய்முறையோடு வருகிறோம், நண்பர்களே!” என்று அனுவும், பிண்டுவும் விடைபெற்றனர்.
மருத்துவம் சார்ந்த துறையில் இளங்கலை மற்றும் முதுகலை முடித்துள்ளேன். ஒரு மருத்துவ கல்லூரியில் விரிவுரையாளராகப் பணியாற்றுகிறேன்.கடந்த இரண்டு வருடங்களாக சிறுகதைகள் மற்றும் புதினங்கள் எழுதிக் கொண்டிருக்கிறேன். யூ ட்யூப்பில் ஒலி வடிவ கதைக்களுக்கான சானல் ஒன்றையும் நடத்திக் கொண்டு வருகிறேன்.