செம்போத்து, செண்பகப் பறவை என்று மேலும் சில பெயர்களால் அழைக்கப்படும் இப்பறவை ஆங்கிலத்தில் “ Greater coucal/ Southern coucal” என்று அறியப்படுகிறது. இருசொற் பெயறீடு (அறிவியற்பெயர்) Centropus sinensis.

shenbaga 1
படம்: Dr. S. வேலாயுதம்

பரவலாக இந்திய துணைக்கண்டத்திலும் அண்டை நாடுகளிலும் காணப்படுகிறது. வீட்டின் கொல்லைப்புறத்தில் சுலபமாகப் பார்க்கலாம். இது குயில் இனத்தை சேர்ந்தது. ஆனால் மற்ற குயில்கள் போல் திருட்டுத்தனமாக பிற பறவைகளின் கூட்டில் முட்டையிடும் பழக்கம் இதற்கு கிடையாது. தனது கூட்டைத் தானே கட்டி முட்டையிட்டுக் குஞ்சு பொறிக்கும்.  ஆண், பெண் பறவைகளுக்கு இடையே பெரிய வித்தியாசம் இருக்காது.  தலை, வயிறு மற்றும் வால் நல்ல கருமை நிறத்திலும், இறக்கைகள் அடர் பழுப்பு நிறத்திலும் இருக்கும். மாணிக்க சிவப்பு கண்கள் தனி அடையாளம்.

கொல்லைப்புறங்களில் உள்ள சிறு மரங்கள், தென்னை மற்றும் சிறு புதர்கள் போன்றவற்றில் காணலாம். சிறிது தூரம் மட்டுமே பறக்கும். பெரும்பாலும் தரையில் தத்தித் தாவி இரை தேடும். மதில் சுவர்களில் சாவகாச கம்பீர நடை போடும். சிறு பூச்சிகள், ஊர்வன, முட்டைகள் முதலியவற்றை உணவாக கொள்ளும். நம்மூரில் தரைவாழ் நத்தைகளை உண்ணும். நச்சுத்தன்மை கொண்ட அரளிக் காய்களையும் உண்ணும். அடித்தொண்டையில் ….க்கும்….க்கும் என்று ஒலி எழுப்பும். இதைக் கெட்ட சகுனமாக சிலர் கருதினாலும் பொரும்மாலானோர் செம்போத்தை அதிர்ஷ்டத்தின் அடையாளமாகவே பார்க்கின்றனர். ஆனால் இவை மூடநம்பிக்கையே.

shenbaga 2
படம்: Dr. S. வேலாயுதம்

 பின் காலை வேளைகளில் சுறுசுறுப்பாக இருக்கும். முன் காலைகளில் தனியாகவோ இணையோடோ உயர்ந்த கிளைகளில் அமர்ந்து சூரியக்குளியல் எடுக்கும். அப்போது இறக்கைகள் இரண்டையும் நன்கு விரித்து வைத்து அமர்ந்திருக்கும். பொதுவாக அமைதியான குணம் கொண்டது. தமிழ் சங்க இலக்கியங்களில் செம்போத்து பற்றிய குறிப்புகள் உள்ளன.

குழந்தைகளே! அடுத்த முறை வீட்டுத் தோட்டத்தில்  கருப்பும் பழுப்பும் கலந்த நிறத்தில் பறவை ஒன்று கம்பீர நடை போட்டுக் கொண்டிருந்தால், அது செண்பகப்பறவை என்று எளிதில் அடையாளம் கண்டு கொள்வீர்கள்தானே?

What’s your Reaction?
+1
1
+1
3
+1
0
+1
0
+1
1
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *