ஒரு அரசர் தம் பிள்ளைகள் விளையாடுவதற்காக அரண்மனைக்கு வெளியே ஏரி ஒன்றை கட்டினார். இளவரசர்கள் நீரில் நீந்தியும், படகில் சவாரி செய்தும் விளையாடினர். தம் வேலையாட்களிடம் அந்த ஏரியில் சில மீன்களை விடச் சொல்லியிருப்பதாக அரசர் இளவரசர்களிடம் தெரிவித்தார்..
அவர்கள் மீன்களைப் பார்ப்பதற்காக ஆர்வத்துடன் ஏரிக்கு ஓடினார்கள். அந்த மீன்களுடன் ஒரு ஆமையும் இருந்தது. சிறுவர்கள் மீன்களைப் பார்த்து மிகவும் மகிழ்ச்சியடைந்தார்கள். அவர்கள் ஏற்கெனவே ஆமையைப் பார்த்தது இல்லையென்பதால், அதைப் பார்த்தவுடன் பேய் எனப் பயந்துவிட்டார்கள். அரசரிடம் ஓடிவந்து அழுது கொண்டே ஏரியில் ஒரு பேய் இருப்பதாகத் தெரிவித்தார்கள்.
அரசர் உடனே ஆட்களைக் கூப்பிட்டு, அந்தப் பேயைப் பிடித்து அரண்மனைக்குக் கொண்டு வருமாறு சொன்னார். அதன்படி அவர்கள் ஆமையைக் கொண்டு வரவே, சிறுவர்கள் பயந்து அழுதவாறு, அங்கிருந்து ஓடிவிட்டனர்.
அரசருக்குத் தம் பிள்ளைகள் மீது மிகவும் பாசம். எனவே அந்த ஆமையைக் கொன்று விடுமாறு, அந்த ஆட்களுக்கு ஆணை பிறப்பித்தார் அரசர்.
“நாங்கள் இதை எப்படிக் கொல்வது?” என்று அவர்கள் கேட்டனர்.
“நசுக்கிப் பொடியாக்கிவிடலாம்” என்றார் ஒருவர். “தீயில் வறுத்து விடலாம்” என்றார் இன்னொருவர்.
இப்படி ஆளாளுக்கு ஒரு யோசனை சொல்லிக்கொண்டிருந்தனர். எப்போதுமே நீர் என்றால் பயந்து சாகும் முதியவர் ஒருவர்,
“ஏரி நீர் பாறையின் மீது பாய்ந்து, ஆற்றில் கலக்கும் இடமாகப் பார்த்து, ஏரியில் போட்டுவிடுங்கள்; நிச்சயமாக இது செத்துவிடும்” என்றார்

ஆமை அதைக் கேட்டவுடன் தன் தலையை உயர்த்தி,
“நண்பரே! இப்படிப் பயங்கரமான தண்டனை கொடுப்பதற்கு, நான் உங்களுக்கு என்ன கெடுதல் செய்தேன்? மற்ற திட்டங்களும் கெட்டவை தாம்; ஆனால் ஏரியில் தூக்கிப் போடுவது போல அவ்வளவு கெட்டதில்லை. இப்படிக் கொடுமையாகப் பேசாதீர்” என்றது.
அரசர் ஆமை பேசுவதைக் கேட்டவுடன், “உடனே அதை எடுத்துச் சென்று ஏரியில் வீசுங்கள்” என்றார்.
ஆற்றில் நீந்திச் சென்று, தன் பழைய வீட்டையடைந்த ஆமை தனக்குள் சிரித்துக் கொண்டது. ‘நல்ல வேளை! நீரில் நான் எவ்வளவு பாதுகாப்பாக இருப்பேன் என்று இந்த மனிதர்களுக்குத் தெரியவில்லை’ என்று சொன்னது.
(JATAKA STORY)
ஆங்கிலத்திலிருந்து தமிழில்:- ஞா.கலையரசி