மலையாள எழுத்தாளர் பி.வி.சுகுமாரன் எழுதி, யூமா வாசுகி அவர்களால் மொழிபெயர்க்கப்பட்ட இந்நாவல், 2016ல் கேரள பாயல்புக்ஸ் சிறார் இலக்கிய விருது பெற்றது.
ஆறு வயது சிறுமி தியா தான், இந்நாவலின் நாயகி. தியாவின் ஆசை அனுபவம், மகிழ்ச்சி, துன்பம், ஏமாற்றம் ஆகிய அனைத்தும் அவள் கோணத்திலிருந்தே அழகாகச் சொல்லப்படுகின்றது. பெற்றோர் தாம் குழந்தைகளின் முன்மாதிரி. குழந்தைகளுக்குச் சொல்லும் அறிவுரையை பெற்றோர் முதலில் கடைபிடிக்க வேண்டும் என்பது இந்நாவலிலிருந்து பெரியவர்கள் பெற வேண்டிய படிப்பினை.
‘அப்பா வீட்டில் இருக்கும் போது, யாராவது வந்து கேட்டால் இல்லையென்று அம்மா பொய் சொல்கிறார்; ஆனால் பொய் சொன்னால், கடவுள் தண்டிப்பார் என்று எனக்குச் சொல்லிக் கொடுக்கிறார். அம்மா பொய் சொன்னால், கடவுள் தண்டிக்கமாட்டாரா? குழந்தைகள் பொய் சொன்னால் மட்டும் தான், கடவுள் தண்டிப்பாரா?’ என்று தியாவின் மனவோட்டத்தைக் குழந்தையின் கண்ணோட்டத்தில், அருமையாகப் பதிவு செய்திருக்கிறார் ஆசிரியர்.
தனியார் பள்ளிகளின் வகுப்புக்குள், தாய்மொழியில் பேசத் தடை; சந்தேகம் கேட்கத் தடை என ஏகப்பட்ட கட்டுப்பாடுகள்! இறுக்கமான சூழ்நிலை பள்ளியை ஒரு சிறையாக மாற்றி, குழந்தைகளின் உற்சாகத்தையும், அறிவுத் தேடலையும் மழுங்கச் செய்வதால், இன்றைய கல்வி குழந்தைகளுக்குச் சுமையாக மட்டுமே இருக்கின்றது என்பதை நாவல் வாசிப்போர் மனதில் அழுத்தமாகப் பதிவு செய்கின்றது. மொழிபெயர்ப்பாக இருந்தாலும், நம் தமிழ்க் கல்விச்சூழலுக்கும் கச்சிதமாகப் பொருந்துகிறது.
12+ சிறுவர் முதல் பெரியவர் வரை, அனைவரும் வாசிக்க வேண்டிய நாவல்..
தியா – மலையாள சிறுவர் நாவல் (மொழிபெயர்ப்பு)
ஆசிரியர் – பி.வி.சுகுமாரன்
தமிழாக்கம் – யூமா வாசுகி.
புக்ஸ் ஃபார் சில்ரன், சென்னை. (+91-8778073949)
விலை ₹100/-
பெயர் ஞா.கலையரசி. ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியாவில் வேலை செய்து ஓய்வு. புதுவையில் வாசம். ஊஞ்சல் unjal.blogspot.com என் வலைப்பூ. புதிய வேர்கள் எனும் சிறுகதைத் தொகுப்பு வெளியிட்டுள்ளேன்.