முன்னொரு காலத்தில், ‘அட்டா’ என்றொரு மிகப்பெரிய நாடு இருந்தது. அந்த நாட்டின்‌ மன்னன், பானன். அவன் மகன், கட்டன். சிறு வயதில் இருந்தே கட்டிடங்கள் கட்டுவதில் கட்டனுக்கு கொள்ளைப் பிரியம்.

ஆங்காங்கே தூண் அமைத்து, அது தாங்கும் விதமாக விதம் விதமாக கோபுரம் கட்டி, அந்த கோபுரத்திற்குக் கீழே, அழகழகாய் அறைகள் அமைத்து என்று கனவிலும் நினைவிலும் கட்டிடங்களைத் தன்னோடு கட்டிக் கொண்டிருந்தான் நம் கட்டன்.

பானனுக்கு தன் மகனின் திறமையில் அலாதி பெருமை. அவனுக்காகதா தன் அரண்மனைக்கு அருகில் உள்ள இடத்தைக் கொடுத்தான். ஒரு வருடத்திலேயே பல நூறு அறைகள் கொண்ட அழகான கட்டிடம் ஒன்றைக்  கட்டிக் கொடுத்தான் கட்டன்.

கட்டிடங்கள் கட்ட முடியாத நேரத்தில் மிகவும் சோர்வாக இருந்தான் கட்டன். வேறு எந்த வேலையிலும் அவனுக்கு அத்தனை ஆர்வம் இல்லை.

அடுத்து என்ன செய்வது? தனது அரண்மனையை மாற்றிக் கட்டச் சொன்னான் பானன். அது ஆறு மாதங்களில் முடிந்து விட்டது.

மக்கள் அனைவரின் வீட்டையும் ஒவ்வொன்றாக இடித்து கட்டனை வீடு கட்டச் சொன்னான். மக்கள் அனைவருக்கும் தாங்கள் ஆசையாகக் கட்டிய வீட்டை இடிப்பதா என்று கொஞ்சம் வருத்தம்தான். ஆனால் அரச ஆணையை மீற முடியுமா? அதுவுமன்றி கட்டன் கட்டிக் கொடுக்கும் வீடும் அழகாக இருக்கவே அமைதியாயிருந்தார்கள்.

அட்டா நாட்டின் அனைத்து கட்டிடங்களும் நம் கட்டனின் கைவண்ணத்தில் அட்டகாசமாக மின்னின. அடுத்த நாளே, “அடுத்து என்ன செய்வது?” என்ற கேள்வியோடு கட்டன் பானனின் முன்‌நின்றான்.

என்ன செய்வது? ‘அரண்மனை கட்டித் தருகிறோம்!’ என்று பக்கத்து நாடுகளுக்கு ஓலையனுப்பினான் பானன். அரசனின் அரண்மனை என்றால் வெறும் தூணும் சுவரும் மட்டுமா? ரகசிய அறைகள், அவற்றை இணைக்கப் பாதைகள் எல்லாம் உண்டே.. அதையெல்லாம் கட்டுவதற்கு இன்னொரு நாட்டிற்கு எப்படி உரிமை வழங்குவது?

குழம்பிய பக்கத்து நாட்டு மன்னர்கள் மறுக்க, பானனுக்குக் கோபம் வந்தது. பக்கத்து நாடுகளின்‌மீது போர் அறிவித்தான் பானன்.

பக்கத்து நாட்டு மன்னர்கள்‌ அதிர்ந்தனர். அட்டா நாட்டு மக்களும் தான். கட்டனோடு‌ சேர்ந்து கட்டிடம் கட்டிக் கட்டி அட்டா நாட்டு இளைஞர்கள் ரொம்பவே சோர்ந்து போயிருந்தனர். கட்டிடங்கள் கட்ட உடைக்கப்பட்டு குன்றுகள் தொலைந்து போயிருந்தன. ஆற்று மணல் அள்ளப்பட்டிருந்தன. மரங்கள் மரித்திருந்தன.‌ இதற்கு மேலும் இதைப் பொறுத்துக் கொள்ள முடியாது என்று முடிவு செய்தனர்.

 பக்கத்து நாட்டு மன்னர்கள், அட்டா நாட்டு மக்கள் அனைவரும் அவர்களைக் காக்கும் காவல் தெய்வத்திடம் சென்று முறையிட்டனர்.  காவல் தெய்வமும் பானனைப் பேச்சுவார்த்தைக்கு அழைத்தது.

“ஏனப்பா இந்த போர்?” என்று தன் அகன்ற விழிகளில் கருணை பொங்கக் கேட்டார் அந்த காவல் தெய்வம்.

“எங்கள்‌ நாட்டு நிலத்தில் இவர்கள் கட்டிடம் கட்ட நாங்கள் நிலம் தர வேண்டும் என்று கேட்கிறார் இந்தப் பேரரசர். தாயே! நாங்கள் என்ன செய்வது?” என்று அரசர்களில் ஒருவர் முன்வந்து பேசினார்.

‘நீ என்ன சொல்கிறாய்?’ என்பது போல பானனைப் பார்த்தார்.

தயங்கியபடி பேச ஆரம்பித்த பானன், “தாயே! என் மகன் கட்டன் என்றால் எனக்குக் கொள்ளைப் பிரியம்.. அவன் கட்டிடக்கலையில் பெரும்‌வித்தகனாயிருக்கிறான். அளவுக்கு மிஞ்சினால் அமுதமும் நஞ்சு என்பது போல, அவன் திறமையே அவனுக்குத் தொல்லையாகிவிட்டது. இரவும்‌பகலும் கட்டிடம் கட்டுவதிலேயே கழிக்கிறான். கட்டிடம் கட்ட முடியாத நேரத்தில் எதுவுமே செய்யாமல் சோர்ந்து போகிறான். அவனுக்குக் கட்டிடம்‌ கட்ட, இடம், பொருட்கள் அமைத்துக் கொடுப்பது என் கடமையல்லவா?”

என்று கண்ணீரோடு கேட்டார் பானன்.

இதற்கு என்ன‌ செய்வது? காவல் தெய்வம் ஆழ்ந்து யோசித்தார். அவர் மூளைக்குள் ஐடியா ஒன்று‌‌ பளிச்சிட்டது.

“கட்டிடம் கட்ட இடம், பொருட்கள், உதவிக்கு ஆட்கள் இவைதானே பிரச்சனை?”

“ஆம் அம்மா!” ஒன்றாகச் சொன்னர் அனைவரும்.

“சரி.. கட்டனை நான் குட்டியாய் மாற்றி விடுகிறேன். அவன் எத்தனை கட்டிடங்கள் கட்டினாலும் ஓர் அறைக்குள்ளேயே முடித்துக் கொள்ளலாம். கட்டிடம் கட்ட கல் மண்ணிற்கு மலையையும் ஆறையும் அழிக்க வேண்டாம். அவன் உடலிலிருந்தே கட்டிடம் கட்டும்‌பொருள் சுரக்கும் படி செய்கிறேன். வேலைக்கு ஆட்களுக்குப் பதிலாக அவனுக்கு எட்டுக் கால்கள் தருகிறேன். அவனே அவன் விருப்பப்படி கட்டிடம் கட்டிக் கொள்ளட்டும்” என்றார் அந்த தெய்வம்.

கட்டனுக்கு வாழ்நாள் முழுவதும்‌ தன் கட்டிடக் கலையோடு வாழலாம்‌ என்பதில் அளவில்லா மகிழ்ச்சி.. பானனுக்கோ தன் மகனின் ஆசை தன் மக்களையும் மற்றோரையும் பாதிக்காமல் நிறைவோறும் என்பதில் திருப்தி. பக்கத்து நாட்டு மன்னர்கள், “ஆஹா.. போர் தேவையில்லை!” என ஆனந்தப்பட்டுக் கொண்டனர். அட்டா நாட்டு மக்களோ, “விடுதலை!விடுதலை!” என்று ஆடவே ஆரம்பித்து விட்டனர்.

காவல் தெய்வம் தன் சக்தி கொண்டு தான் சொன்ன படியே கட்டனை மாற்ற, அன்று பிறந்தது தான்‌ நம் ,’எட்டுக்கால் பூச்சி என்ற சிலந்தி!’🙂🙂

IMG 20210615 WA0055

ஹாஹா.. கற்பனைக் கதை கலக்கலாக இருக்கிறதா? ‌சரி.. சிலந்தி வலை பற்றி சில உண்மைகள் சொல்லட்டுமா?

சிலந்தி வலை கட்ட பயன்படுத்தும் நூல் அதன் வயிற்றில் உள்ள மூன்று சுரப்பிகளில் உருவாகிறது. பசைத்தன்மை உள்ள நூல், பசைத்தன்மை இல்லாத நூல் என்று பல வகைகளில் சிலந்திகள் நூல்களை உருவாக்குகின்றன. தங்கள் உடலின் நீளத்தை அளவாகச் கொண்டு வலையின் ஒரு பின்னலுக்கும் அடுத்த பின்னலுக்குமான இடைவெளியை முடிவு செய்கின்றன. எத்தனை சாமர்த்தியம் பார்த்தீர்களா?

சிலந்திகள் ஏன் இவ்வாறு நூல் கொண்டு வலை பின்னுகின்றன?

ஓரிடம் பயங்கரமானது என்று காட்ட அங்கே எங்கும் சிலந்தி வலை பின்னப்பட்டிருப்பதைப் போல காட்டுவார்கள். இந்த சின்னப் பூச்சிக்கு இத்தனை பில்டப்பா என்று தோன்றும் தானே? உண்மையில், சிங்கம், புலி போல சிலந்தி ஒரு பக்கா ஊன் உண்ணி. அதுவும் மிகவும் தந்திரமான ஊன் உண்ணி. அதற்கு தன் இரையைக்  பிடிக்க, பிடித்த இரையைச் சேமிக்க என்று வலையின் பயன்கள் பல. வலையில் தன் இரை மாட்டி விட்டது என்பதை வலையின் அதிர்வுகள் கொண்டு அறியும் சிலந்தி கண்ணிமைக்கும் நேரத்தில் தன் இரையைக் தாக்கி விடும். வலையில் தான் நடிப்பதற்காகத் தான் மட்டும் அறியும்படி பசையில்லா நூல் கொண்டு ஆங்காங்கே பின்னலிருக்கும்.

உண்மையைச் சொல்வதென்றால், டைனோசர்கள் பூமியை ஆண்ட காலத்திற்கு பல கோடி வருடங்கள் முன்னதான காலத்திலிருந்து நம் பூமியில் வாழ்ந்து வரும் எட்டுக்கால் பூச்சிகள் சிறியதாக இருப்பதற்கு இயற்கைக்கு நாம் நன்றி சொல்ல வேண்டும். இல்லையென்றால்😳😳

What’s your Reaction?
+1
1
+1
1
+1
0
+1
0
+1
0
+1
0
Subscribe
Notify of
guest
0 கருத்துகள்
Inline Feedbacks
View all comments