“ஹலோ குழந்தைகளே! எல்லாரும் எப்படி இருக்கீங்க? வீட்டுக்குள்ளேயே இருந்து போர் அடிக்குதா?” என பிண்டு கேட்க, “ஆமாம் பிண்டு, எனக்கும் செம்ம போர் அடிக்குது, வரியா நம்ம இன்ட்ரெஸ்டா ஏதாவது எக்ஸ்பிரிமெண்ட் செய்யலாமா?” என்று கேட்டாள் அனு.

“ஓ செய்யலாமே! இந்த முறை செய்யப் போற ஆராய்ச்சி, எல்லா வயசு குழந்தைகளும் செய்யலாம். ஈசியாவும் இருக்கும் சூப்பராவும் இருக்கும் அதோட பெயர் கண்ணாடி வானவில்” என்றது பிண்டு ரோபோட்‌.

அனு, “ஹைய்யோ ஜாலி ஜாலி, அதுக்கு என்னல்லாம் பொருட்கள் வேணும்னு சொல்லு பிண்டு நான் எடுத்து வைக்கிறேன்”.

தேவையான பொருட்கள்:

  1. கண்ணாடி அல்லது ட்ரான்ஸ்பெரண்ட் டம்ளர்கள் – 5
  2. வெதுவெதுப்பான தண்ணீர்
  3. சர்க்கரை
  4. ஃபுட் கலர்ஸ் அல்லது அக்ரிலிக் பெயிண்ட் – சிவப்பு, நீலம், பச்சை மற்றும் மஞ்சள் வண்ணங்கள்
  5. ஸ்பூன் – 1
  6. இங்க ஃபில்லர் அல்லது ஊசியில்லாத ப்ளாஸ்டிக் சிரென்ஜ் – 1

அனு, “நீ சொன்ன எல்லா பொருளும் எடுத்து வெச்சுட்டேன் பிண்டு, அடுத்து என்ன செய்யணும்!”

செய்முறை:

1. முதலில் நான்கு டம்ளர்களில் சம அளவு (கால் பங்கு) தண்ணீரை நிரப்பிக் கொள்ளவும்.

2. பிறகு முதல் டம்ளரில் ஒரு ஸ்பூன் சர்க்கரை, இரண்டாவதில் இரண்டு ஸ்பூன், மூன்றாவதில் மூன்று ஸ்பூன் மற்றும் நான்காவதில் நான்கு ஸ்பூன் சர்க்கரை போட்டு, ஸ்பூனால் நன்கு கலக்கிக் கொள்ளவும்.

3. சர்க்கரை நன்கு கரைந்த பிறகு, முதல் டம்ளரில் சிகப்பு( 1ஸ்பூன் சர்க்கரை இருக்கும் டம்ளர்), இரண்டாவதில் மஞ்சள், மூன்றாவதில் பச்சை மற்றும் நான்காவதில் நீல நிற பெயிண்டை முறையே கொஞ்சமாக ஊற்றி நன்கு கலக்கவும்.

4. இந்த சோதனை சரியாக வர வேண்டுமென்றால், சர்க்கரை நன்றாகக் கலந்திருக்க வேண்டும். எனவே அதை நன்கு உறுதி செய்து கொள்ளுங்கள்.

5. அடுத்து காலியாக உள்ள ஐந்தாவது கோப்பையில், நீல நிறத் தண்ணீரை கால் அளவு இங்க் ஃபில்லர் மூலம் மெதுவாக எடுத்து ஊற்றவும்.

6. பிறகு, பச்சை வண்ணத் தண்ணீரை, நீல நிறத்தின் மேல் ஃபில்லரின் மூலம் டம்ளரின் உட்புற ஓரத்தில் படுமாறு மெதுவாக ஊற்றவும்.

7. அடுத்து மஞ்சள் நிற நீர், இறுதியாக சிவப்பு நிற நீர் என மெதுவாக ஊற்றி முடிக்க, நீங்கள் உருவாக்கிய கண்ணாடி வானவில் அழகாய் தயாராகிவிடும்.

Rainbow Jar

நீலம், பச்சை, மஞ்சள், சிவப்பு என கீழிருந்து மேலாக வண்ணங்கள் அழகாய் அணிவகுத்திருக்கும்.

“பிண்டு, உண்மையிலேயே நீ பெரிய அறிவாளி தான், அது எப்படி ப்ளூ கலர் மேல, பச்ச கலர் உக்காரும்னு நீ கரெக்டா கண்டுபிடிச்ச பிண்டு!” என்று ஆர்வமுடன் கேட்டாள் அனு.

“அனு அது கலரோட மேஜிக் இல்ல, நம்ம கலந்த சர்க்கரையோட மேஜிக் தான்”.

அறிவியல் உண்மைகள்:

சர்க்கரை அதிகமாக உள்ள நீரின் அடர்த்தி அதாவது டென்சிட்டி அதிகமாக இருக்கும். டென்சிட்டி என்பது எடையைப் பொறுத்து மாறும். எடை அதிகமானால் டென்சிட்டி அதிகரித்து, அது கீழே தங்கும். நீல நிறத் தண்ணீரில் நான்கு ஸ்பூன் சர்க்கரையைக் கலந்ததால், அதன் அடர்த்தி அதிகமாகி அது கீழே தங்கிவிட்டது. இதுவே சிவப்பு நிறத் தண்ணீரில் ஒரே ஒரு ஸ்பூன் சர்க்கரையைக் கலந்ததால், அதன் அடர்த்தி குறைந்து மேலேயே தங்கிவிட்டது என்கிற அறிவியல் விளக்கத்தை அழகாய் சொல்லியது பிண்டு.

அன்றாட வாழ்வில் டென்சிட்டி:

அடர்த்தி அதிகமான பொருள் தண்ணீரில் மூழ்கும், அடர்த்தி குறைவான பொருள் தண்ணீரில் மிதக்கும். உதாரணத்திற்கு சிறிய காகிதத்துண்டை தண்ணீரில் போட்டால் அது மிதக்கும். ஆனால் சிறிய இரும்புத் துண்டை தண்ணீரில் போட்டால் அது மூழ்கிவிடும்.

“அடர்த்தியை வைத்து வேறு என்னென்ன அன்றாட விஷயங்கள் நடக்கிறது என்பதை கண்டறியுங்கள் குட்டீஸ். அடுத்த மாதம் வேற ஒரு சூப்பரான விஷயத்தோட வரேன்!” என பிண்டு புறப்பட, “பூஞ்சிட்டுகளே ஸ்டே ஹோம் ஸ்டே சேஃப். சீக்கிரம் வரேன் பை!” என்று சொல்லிவிட்டு தானும் கிளம்பினாள் அனு‌.

What’s your Reaction?
+1
1
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
Subscribe
Notify of
guest
0 கருத்துகள்
Newest
Oldest Most Voted
Inline Feedbacks
View all comments