ஸ்வாதி சின்னப்பெண். அவளுக்கு எட்டு வயதுதான் ஆகிறது. ஊரில் இருந்து வந்த அவளது தாத்தா, அவளுக்கு களிமண்ணால் ஆன சின்னச் சின்ன சமையல் பொம்மைகளை வாங்கிவந்து கொடுத்திருந்தார்.
அதில் அடுப்பு, சாதம் வடிக்கும் பானை, சின்னச் சின்ன தட்டுகள் எல்லாம் இருந்தன. அத்துடன் வீட்டில் ஏற்கனவே இருந்த பிளாஸ்டிக் பொம்மைகளையும் எடுத்து வந்து பால்கனியில் அமர்ந்தாள் ஸ்வாதி. அம்மா உள்ளே சமையல் வேலையாக இருப்பதால் அவர்களை தொந்தரவு செய்யாமல் விளையாட நினைத்தாள் ஸ்வாதி.
அங்கிருந்த ஸ்கேல், பென்சில்களை எடுத்து வந்து சதுரமாக ஒரு அறைபோல் அமைத்தாள். அதுதான் அவளது சமையல் அறை. அதற்குள் கையில் இருந்த பொருட்களை அழகாக சமையல் அறையில் இருப்பதைப் போல் அடுக்கினாள். மண் அடுப்பு தண்ணீர் சுட வைக்க, பிளாஸ்டிக் கேஸ் அடுப்பு சமைக்க, அத்துடன் குளிர் சாதன பெட்டி, ஓவன் போன்ற பொம்மைகளையும் அங்கங்கே அடுக்கினாள்.
அடுப்பில் குக்கர் பொம்மையை வைத்து அடுப்பை பற்ற வைப்பதாக பாவித்துக்கொண்டாள். இன்னொரு அடுப்பில் வாணலியை வைத்து அதில் தண்ணீர் ஊற்றுவதாய் செய்து குழம்பு வைக்க தயார் செய்தாள்.
உள்ளிருந்து வந்த அம்மா அதைப் பார்த்து மிகவும் ஆச்சரியப்பட்டார்கள்.
“ஸ்வாதி தங்கம், இங்க என்ன செய்றீங்க?” என்றார் அம்மா.
“அம்மா, நான் உங்கலைப்போல சமைக்கிறேன்” என்றாள் ஸ்வாதி.
“அட அழகே… ஆனா இங்க பாத்திரங்களில் ஒண்ணும் இல்லியே… எப்படி சமைப்பீங்க?” என்றார் அம்மா.
திருதிருவென்று விழித்து, அத்துடன் அழகாக சிரித்தாள் ஸ்வாதி. அவளுக்கு சட்டென்று என்ன சொல்வதென்று தெரியவில்லை. அதை பார்த்த அம்மா உள்ளே சென்று கொஞ்சம் பொட்டுக்கடலையும், அரிசியும், அதோடு சில முந்திரிகளையும் கொண்டு வந்து கொடுத்தார்.
“அம்மா, எனக்கு சமைக்க தண்ணி வேணும்” என்றாள் ஸ்வாதி. ஒரு டம்ளரில் தண்ணீரும் கொண்டு வந்து கொடுத்தார் அம்மா.
அரிசியை குக்கர் பொம்மையில் போட்டாள் ஸ்வாதி. தண்ணீர் கொஞ்சம் ஊற்றினாள். வாணலியில் கடலையை போட்டு கொஞ்சம் தண்ணீர் ஊற்றினாள். முந்திரியை உடைத்து ஓவன் பொம்மையில் வைத்தாள். கொஞ்சம் நேரம் சமைப்பதாக விளையாடிவிட்டு அரிசிய மூன்று ப்ளாஸ்டிக் தட்டுகளில் எடுத்து கொஞ்ச கொஞ்சமாக வைத்தாள். அது சாதம். கடலையை தண்ணீருடன் பொம்மை கரண்டியில் எடுத்து குழம்பு போல ஊற்றினாள். முந்திரியை சின்ன தட்டுகளில் வைத்தாள்.
வெளியில் விளையாடிவிட்டு அவளது அண்ணன் பாலாஜி வந்தான். அவனுக்கு பத்து வயது.
“ஹை …. பாப்பா என்ன பண்றீங்க?”
“நான் சமைச்சேன்… இதோ இது சாதம் குழம்பு… இது பிஸ்கட்” என்று சிரித்தபடி சொன்னாள் ஸ்வாதி.
“அட சூப்பர்… சாப்பிடலாமா” என்றான் பாலாஜி.
“அம்மாவும் வரணுமில்ல”
“அம்மா வெளிய பேசிட்டு இருக்காங்களே…” என்றான் பாலாஜி.
“இதோ… நான் போய் கூட்டி வரேன்” என்று வேகமாக எழுந்து ஓடினாள் ஸ்வாதி. அவள் வேகமாக ஓட, அவளது கால்சட்டையின் நுனி பட்டு அங்கிருந்த டம்ளர் தண்ணீர் முழுவதுமாக அந்த தட்டுகளின் மேல் கொட்டி அனைத்தும் நனைந்து சிதறின. அதை அவள் கவனிக்கவில்லை.
கவலையாக பார்த்த பாலாஜி சட்டென்று எழுந்து உள்ளே ஓடி சிறிது சாதம் எடுத்து வந்து அந்த தட்டுகளில் நிரப்பினான். அதோடு பிஸ்கட்டுகளை எடுத்து உடைத்து சின்ன தட்டுகளில் போட்டான். அழகாக அடுக்கி வைத்தான்.
அம்மாவும், ஸ்வாதியும் வந்தார்கள். ஸ்வாதிக்கு ஆச்சரியம் தாங்கவில்லை.
“அண்ணா…இதென்ன நிஜமாவே சாதம், பிஸ்கட் ஆகிடுச்சு..” என்றாள் ஸ்வாதி.
“அது நீ செஞ்சது அழகா அம்மா செய்ற போலவே மாறிடுச்சு ” என்றான் பாலாஜி.
அதை சிரித்தபடி பார்த்த அம்மாவும் அவர்களுடன் அமர்ந்து சாப்பிடுவதாக விளையாடினார்கள்.
காமிக்ஸ்..இலக்கியங்களை படிக்க ஆர்வம். தற்போது கதைகளும் எழுதிவருகிறேன். ஓவிய ஆர்வமுண்டு. மூன்று குழந்தை புத்தகங்கள் உட்பட ஆறு புத்தகங்கள் kindle ல் வெளியாகியுள்ளது. தற்போது குழந்தைகள் நாவல் ஒன்று எழுதி வருகிறேன்.