வ.உ.சிதம்பரம் (1872–1936)
இம்மாதம் 5 ஆம் தேதி (05/09/2021) கப்பலோட்டிய தமிழன் வ.உ.சிதம்பரம் அவர்களின் 150 ஆவது பிறந்த நாள்.
ஆங்கிலேயரின் கப்பல் போக்குவரத்துக்கு எதிராக உள்நாட்டுக் கப்பல் கம்பெனியைத் துவங்கி, இந்திய நாட்டின் விடுதலைக்காகப் பாடுபட்ட போராளி. தூத்துக்குடிக்கும், கொழும்புவுக்கும் இடையே இரண்டு சுதேசி கப்பல்களை ஓட்டி, வரலாற்றுச் சாதனை படைத்தவர்.
தூத்துக்குடி ஒட்டப்பிடாரம் கிராமத்தில் பணக்கார குடும்பத்தில் பிறந்த இவர், வக்கீல் தொழிலைச் செய்து கொண்டு ஆடம்பரமாக வாழ்க்கையை அனுபவித்திருக்கலாம். ஆனால் இவர் தம் சொத்து சுகங்களை நாட்டின் விடுதலைக்காக இழந்து, சிறைத்தண்டனையை அனுபவித்தவர். சிறையில் இவர் செக்கிழுத்துத் துன்பம் அனுபவித்தமையால் ‘செக்கிழுத்த செம்மல்’ என்றும் போற்றப்படுகின்றார்.
இவருடைய வக்கீல் உரிமத்தையும் ஆங்கில அரசு பறித்தமையால், விடுதலையாகி வெளிவந்த பின்னர், குடும்பம் நடத்த போதுமான பணம் இல்லாமல் வறுமையில் வாடினார். அரிசிக்கடையும், மண்ணெண்ணெய் கடையும் நடத்திப் பார்த்தார். திலகர் மாதம் 50 ரூபாய் இவருக்கு அனுப்பி வைத்தாராம். பாரதியார் இவர் நெருங்கிய நண்பர்.
இந்திய வரலாற்றில் முதல் சுதேசி கப்பல், முதல் தொழிலாளர் உரிமைக்கான வேலை நிறுத்தம், முதல் தொழிற்சங்கம் எனச் சாதனைகள் படைத்து வரலாற்றில் அழியாப்புகழைப் பெற்றிருக்கும் வ.உ.சி ஒரு தமிழர் என்பதில் பெருமை கொள்வோம். இவருடைய வாழ்க்கை வரலாற்றை நம் குழந்தைகள் அவசியம் தெரிந்து கொள்ள வேண்டும்.
பெயர் ஞா.கலையரசி. ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியாவில் வேலை செய்து ஓய்வு. புதுவையில் வாசம். ஊஞ்சல் unjal.blogspot.com என் வலைப்பூ. புதிய வேர்கள் எனும் சிறுகதைத் தொகுப்பு வெளியிட்டுள்ளேன்.