இதுவரை:

 மணல் தேவதை கொடுத்த மூன்று வரங்களை அடுத்தடுத்த நாட்களில் சரியாக பயன்படுத்தாத நான்கு குழந்தைகள், நான்காவது நாளுக்காகக் காத்திருக்கிறார்கள். இனி:

அத்தியாயம் 4

 அன்று ஆண்ட்ரியாவுக்கு மட்டும் சரியாகவே உறக்கம் வரவில்லை. காலை ஐந்து மணிக்கே எழுந்து கொண்டாள். எல்லாருக்கும் முன்பாக வீட்டை விட்டு வெளியேறி கடற்கரைக்குச் சென்றாள். அங்கு மணல் தேவதையைத் தேடி கண்டுபிடித்து, “எங்களுக்கு சரியாவே வரம் கேட்கத் தெரியல.. என்ன வரம் கேட்கலாம் அப்படிங்கறது பத்தி ஏதாவது யோசனை சொல்லேன்?” என்று அதனிடமே கேட்டாள்.

“நான் வழக்கமா வரங்கள் தான் குடுப்பேன், அறிவுரைகள் குடுக்கிற பழக்கம் எனக்கு இல்லை” என்று கூறி விட்டு தன் குழிக்குள் சென்று பதுங்கிக் கொண்டது மணல் தேவதை. வீட்டுக்கு வந்த ஆந்த்தியா, மற்றவர்களையும் எழுப்பி தீவிரமாக ஆலோசித்தாள்.

 இறுதியாக லேம்ப்பை விட்டுவிட்டு அவர்கள் மட்டும் செல்வது என்றும், மணல் தேவதையிடம் தங்களுக்கு சிறகுகள் தருமாறு கேட்பது என்றும் முடிவு செய்தனர். அதன்படியே மணல் தேவதையிடம் சென்று, “எங்களுக்கு பறப்பதற்கு சிறகுகள் வேண்டும்” என்று கேட்டனர்.

“இதோ!” என்று உடனடியாக வரம் அளித்தது மணல் தேவதை. சற்று நேரத்தில் மிகவும் பளபளப்பான, வண்ணமயமான சிறகுகள் அவர்கள் நால்வருக்கும் கிடைத்தன. அவர்களால் மிக எளிதாகப் பறக்கவும் முடிந்தது. உற்சாக மிகுதியில் அங்குமிங்கும் பறந்தனர்.

 திடீரென்று பசி எடுக்கவே, ஒரு பழத் தோட்டத்திற்குள் நுழைந்து மரத்தின் மேல் அமர்ந்து, அதிலிருந்த பழங்களைப் பறித்து உண்ண ஆரம்பித்தனர். ராபர்ட், “இப்படி இந்தத் தோட்டத்து சொந்தக்காரருக்குத் தெரியாம பழம் சாப்பிடுறது திருட்டு இல்லையா?” என்று கேட்டான்.

 அதற்கு சிறில், “சே சே! நாம இப்ப பறவைகள் மாதிரி. பறவைகள் சாப்பிடுறதை யாராவது திருட்டுன்னு சொல்லுவாங்களா?” என்று கூறினான். இருந்தாலும் தங்களிடம் இருந்த சில நாணயங்களைத் தோட்டக்காரர் இருந்த இடத்தை நோக்கிக் கீழே போட்டார்கள்.

அப்போதுதான் மரக்கிளைகளில் ஏதோ சலசலப்பு இருப்பதை கவனித்த தோட்டக்காரர் என்னவென்று உற்றுப் பார்த்தார். நாணயத்தை எறிந்துவிட்டுச் செல்லும் குழந்தைகளைப் பார்த்தவுடன், ‘நான் பார்க்கிறது நிஜம்தானா? இல்ல.. கனவு எதுவும் காணுறேனா.. என்னோட கண்களைப் பரிசோதிக்கணும்னு நான் நினைக்கிறேன்’ என்று யோசித்தார். ஆனால் அவர் முன் கிடைத்த நாணயங்களைப் பார்த்தவர், ‘இதோ காசு இருக்குது.. அப்ப நான் பார்த்தது உண்மையாதான் இருக்கும்’ என்று நினைத்துக் கொண்டார்.

 அப்படியே வெகுதூரம் பறந்த குழந்தைகள் சற்று தூரம் சென்ற பின் ஒரு உயரமான தேவாலயத்தின் கோபுரத்தில் வந்து அமர்ந்தனர்.

“அந்தப் பழங்கள் சாப்பிட்டது எனக்குப் பத்தல.. இன்னும் பசிக்குது” என்று ஜேன் கூற, ‘எனக்கும் தான்’ என்று மற்றவர்களும் கூறினர்.

 அப்போது ராபர்ட், “இந்த சர்ச்சுக்குப் பக்கத்துல பாதிரியாரோட வீடு இருக்குல்ல.. அதுல சமையல் மேடையில் நிறைய சாப்பாடு வச்சிருந்தாங்க. ஒரு ஜன்னலும் திறந்திருந்துச்சு.. இருங்க நான் அதைப் போய் எடுத்துட்டு வரேன்” என்று கூறிவிட்டுப் பறந்து சென்றான். அவன் கூறியபடியே உணவையும் எடுத்து வந்தான்.

 சாப்பிட்டுவிட்டு நான்கு பேரும் அசதியில் உறங்கி விட்டனர். அதற்குள் மாலை மங்கி இருள் கவிந்து விட்டது. மற்ற நாட்களைப் போலவே மணல் தேவதை கொடுத்த வரம் மாலை ஆனதும் அவர்களை விட்டுச் சென்றுவிட, அவர்களது சிறகுகள் காணாமல் போய்விட்டன. வேகு நேரம் கழித்து விழித்த குழந்தைகள் தாங்கள் சர்ச்சின் கோபுரத்தில் மாட்டிக் கொண்டிருப்பதை உணர்ந்தனர்.

“காப்பாத்துங்க காப்பாத்துங்க!” என்று ‌உதவிக்காகக் குரல்கொடுத்து அழைத்தனர். ஏதோ திருடர்கள் புகுந்து விட்டார்கள் என்று நினைத்து கிளம்பி வந்த ஊர் மக்கள் குழந்தைகளைப் பார்த்து ஆச்சரியப்பட்டார்கள். “யார் நீங்க? எப்படி மேல வந்தீங்க?” என்று அவர்கள் கேட்டதற்கு,

“அதை மட்டும் கேட்காதீங்க. நாங்க உண்மையைச் சொன்னாலும் நீங்க நம்ப மாட்டீங்க” என்று ஜேன் கூறினாள். மீண்டும் மீண்டும் கேட்டுப் பார்த்தும் குழந்தைகள் விஷயத்தைச் சொல்ல மறுக்கவே, அந்த சர்ச்சின் பாதிரியார் ஒரு வண்டியைத் தயார் செய்து, ஒரு நபரையும் துணைக்கு அனுப்பி அவர்களது வீட்டில் கொண்டு விடுமாறு கூறினார்.

 அன்றைய தினம் இவர்கள் செய்த சேட்டை எல்லாம் அந்த நபர் மூலமாகக் கேட்டறிந்த மார்த்தா, “உங்க தொல்லை தாங்க முடியலை.. நாளைக்கு எங்கேயும் வெளியே போகக்கூடாது. வீட்டிலேயே இருங்க” என்று கூறிவிட்டாள். சோர்வுடன் அடுத்த நாளை வீட்டிலேயே கழித்தார்கள் குழந்தைகள்.

தொடரும்

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
Subscribe
Notify of
guest
0 கருத்துகள்
Newest
Oldest Most Voted
Inline Feedbacks
View all comments