கிரெட்டா துன்பர்க் (Greta Thunberg) ஸ்வீடன் நாட்டு மாணவி. இளம் வயது முதலே தம் செயல்பாடுகளின் மூலம், உலகின் ஒட்டுமொத்த கவனத்தையும் தம் பக்கம் ஈர்த்த சூழலியல் செயல்பாட்டாளர்,
20/08/2018 அன்று பரபரப்புடன் இயங்கிக் கொண்டிருந்த ஸ்வீடன் பாராளுமன்ற வளாகத்தின் முன்பு, அன்று 15 வயதேயான இவர், கையில் ஒரு பதாகையுடன் நின்றிருந்தார். ‘காலநிலை காக்கப் பள்ளி வேலை நிறுத்தம்’ (School strike for the climate) என்று அதில் எழுதப்பட்டிருந்தது. ‘பள்ளியிலிருக்க வேண்டிய பெண், இங்கு என்ன செய்கிறாள்?’, என்று கடந்து போனவர்களுக்கு வியப்பும், குழப்பமும் ஏற்பட்டது.
காலநிலை மாற்றத்தின் விளைவாக ஏற்படும் பேரழிவிலிருந்து இப்புவியைக் காக்க வேண்டும் என்று தனியாளாகப் போராடத் துவங்கிய இவரது ‘எதிர்காலத்துக்கான வெள்ளிக்கிழமைகள்’ (“Fridays For Future”) என்ற போராட்டம், உலகம் முழுக்க மாணவர்களால் முன்னெடுக்கப்பட்டது.
இன்றைய உலகின் அதி தீவிரப் பிரச்சினையாகக் கால நிலைப் பேரழிவைக் கருத்தில் கொள்ள அரசியல்வாதிகள் தவறிவிட்டார்கள் என்று கருதும் கிரெட்டா துன்பர்க், அது பற்றிய விழிப்புணர்வை மக்களிடம் ஏற்படுத்தி, அதன் மூலம் உலக நாடுகளின் தலைவர்களுக்கு நெருக்கடி ஏற்படுத்துவதை நோக்கமாகக் கொண்டு செயல்படுகிறார்.
ஆட்டிசத்தின் ஒரு வகையான ‘அஸ்பெர்கர் குறைபாட்டால்’ பாதிக்கப்பட்டிருக்கும் இவர், நினைத்தவற்றைச் சரியாகப் பேச முடியாமலும், சமூக வயப்படாமலும் ஒதுங்கியே இருந்தார்.
அவர் தம்மைப் பற்றிக் கூறுவது இது:-
“நான் அதிக நேரம் யோசிப்பேன். சிலரைப் போல் என்னால் எல்லா விஷயங்களையும், அவ்வளவு எளிதாகக் கடந்துவிட முடியாது. அவை என்னைக் கவலையிலும், சோகத்திலும் ஆழ்த்தும். என்னுடைய சிறுவயதில் ஞெகிழியால் கடல் மாசு படும் படங்கள், பனிக்கரடிகள் உணவில்லாமல் பசியால் வாடுவது போன்றவற்றை, என் ஆசிரியர்கள் காண்பித்தார்கள். அவற்றையெல்லாம் பார்த்து நான் அழுதேன்….அவை என் மனதை விட்டு அகலவில்லை”, என்கிறார்.
“மக்கள் செத்துக் கொண்டிருக்கிறார்கள். ஒட்டு மொத்த சூழலியல் தொகுதிகளும் சிதைந்து கொண்டிருக்கின்றன. நாம் பெரும் பேரழிவின் தொடக்கத்தில் இப்போது இருக்கிறோம். இந்த நிலையில் தான் நீங்கள் எல்லாரும் பணத்தைப் பற்றியும், நீடித்த பொருளாதார வளர்ச்சி பற்றிய கற்பனைக் கதைகளையும் பேசிக் கொண்டிருக்கிறீர்கள். எவ்வளவு தைரியம் உங்களுக்கு?”, என்று உலக வல்லரசு நாடுகளின் தலைவர்களைப் பார்த்து, இவர் கேட்பது ஒவ்வொன்றும் நெத்தியடிக் கேள்வி!
நம் புவியைக் காக்கப் போராடும் நம்பிக்கை நட்சத்திரம் கிரெட்டா துன்பர்க்கை வாழ்த்துவோம்!
பெயர் ஞா.கலையரசி. ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியாவில் வேலை செய்து ஓய்வு. புதுவையில் வாசம். ஊஞ்சல் unjal.blogspot.com என் வலைப்பூ. புதிய வேர்கள் எனும் சிறுகதைத் தொகுப்பு வெளியிட்டுள்ளேன்.