ஹாய் சுட்டீஸ்! எல்லாரும் எப்டி இருக்கீங்க? ஸ்கூல் திரும்பவும் மூடிட்டாங்க! 1திரும்பவும் ஆன்லைன் கிளாஸ் ஆரம்பிச்சுட்டாங்க! கொஞ்சம் வருத்தமா தான் இருக்கு. ஆனா கவலப்படாதீங்க. சீக்கிரமே இந்த கொரோனா பாதிப்பு எல்லாம் சரியாகும். நீங்களும் ஜாலியா ஸ்கூல் போவீங்க.
அது வரைக்கும் நீங்கல்லாம் அம்மா அப்பா சொல்ற பேச்சைக் கேட்டுக்கிட்டு சமத்தா இருக்கணும். சரியா?
சரி! இப்ப நாம கதை படிக்கலாமா?
நம்ம குட்டி பையன் சச்சின் புதுசா என்ன கத்துக்கிட்டான்னு பாக்கலாமா?
அவன் அவங்கம்மா கூட கடைக்கு எல்லாம் போயிருந்தான்ல? அப்போ அவன் அந்த பெரிய மரத்துக்கு கீழ நின்னு அணில் குட்டிங்க மரத்துக்கு மரத்துக்கு குடுகுடுன்னு ஓடிட்டிருக்கறதப் பார்த்து சுறுசுறுப்பா இருக்கக் கத்துகிட்டான்ல?
அதே மாதிரி அந்த மரத்தில நிறைய காக்கா, குருவி, புறா எல்லாம் பார்த்தான். அதப் பார்த்து நிறைய புது விஷயம் கத்துக்கிட்டான்.
என்ன கத்துக்கிட்டான்னு பார்க்கலாமா?
மரத்து மேல ரெண்டு காக்கா ஒரு மிளகாய்ப்பழத்தை வெச்சிக்கிட்டுக் கொத்திக்கிட்டு இருந்துச்சு.
ஆனா அது ரெண்டும் அந்த ஒரு மிளகாய்ப்பழத்துக்காக சண்டை எதும் போடவேயில்ல.
இதப் பார்த்ததும் சச்சினுக்கு ரொம்பவே ஆச்சர்யமா இருந்தது.
அவன் தன் அம்மாகிட்ட,
“அம்மா! அம்மா! அந்த காக்கா ரெண்டும் ஒரே ஒரு முளகாய் வச்சிக்கிட்டு சாப்பிடுது.. ஆனா ரெண்டும் சண்டையே போட்டுக்கலம்மா! எப்டிம்மா?”, அப்டீன்னு கேட்டான். அதுக்கு அவங்கம்மா, அவனோட தலையை அன்பாக் கோதி விட்டுக்கிட்டே,
“ஆமாம்டா செல்லம்! காக்கா எப்பவும் தனக்குக் கிடைக்கக் கொஞ்சம் உணவைக் கூட தன்னோட குடும்பத்தோடவும் நண்பர்களோடவும் ஷேர் பண்ணி சாப்பிடும்டா!”, அப்டீன்னு சொன்னாங்க.
அதக் கேட்டுக்கிட்டே அவன் அன்னிக்கு தூங்கிட்டான்.
மறுநாள் அவன் சாப்பிடறதுக்கு அவங்கம்மா நெய்யில முறுக்கு சுட்டு குடுத்தாங்க.
அவங்கம்மா நெய் முறுக்கு ரொம்ப சூப்பரா செய்வாங்க. அம்மா செய்யற நெய் முறுக்கு சச்சினுக்கு ரொம்ப ரொம்பப் பிடிக்கும். அதனால அவங்கம்மா எப்ப நெய் முறுக்கு செய்தாலும் அவனுக்கு ரொம்ப குஷியா இருக்கும்.
யாருக்கும் குடுக்காம தன்னுடைய வீட்டுக்குள்ளயே வெச்சி வெச்சி சாப்பிடுவான்.
இன்னிக்கும் அதே மாதிரி நெய் முறுக்கை வீட்டுக்குள்ளயே வெச்சி தான் மட்டும் தின்ன ஆரம்பிச்சான்.
அப்ப ஜன்னல் வழியா வெளிய கறிவேப்பிலை மரத்தில ரெண்டு காக்கா உக்கார்ந்துகிட்டு காக்கா கா கான்னு கூவிக்கிட்டே எதையோ தின்னுட்டு இருந்துச்சு. இதப் பாத்ததும் சச்சினுக்கு அம்மா காக்காய பத்தி சொல்லி குடுத்தது ஞாபகம் வந்திடுச்சு.
வீட்டுக்கு வெளிய அவனோட பக்கத்து வீட்டு ஃப்ரண்ட்ஸ் எல்லாம் கும்பலா விளையாடிட்டு இருக்கறதப் பார்த்தான்.
உடனே சமையலறைக்கு ஓடிப் போய் அம்மா கிட்ட இன்னும் ரெண்டு முறுக்கு கேட்டு வாங்கிட்டு வீட்டுக்கு வெளிய ஓடினான்.
“டேய்! வருண்! பார்கவி! வனிதா! இந்தாங்க! நெய் முறுக்கு! எங்கம்மா செஞ்சது. சூப்பரா இருக்கும். சாப்பிடுங்கடா!”, அப்டீன்னு சொல்லி குடுத்தான்.
அவங்களும் ஆச்சயர்த்தோட வாங்கி சாப்பிட்டாங்க.
இத உள்ளயிருந்து பார்த்த அம்மாவுக்கு ரொம்ப ஆச்சர்யமா இருந்துச்சி.
சச்சின் காக்காய்களைப் பார்த்து ஷேர் செய்ய கத்துகிட்டான்.
அதே மாதிரி நீங்களும உங்க சாப்பாட்டை உங்க ஃப்ரண்ஸோட சமத்தா ஷேர் பண்ணி சாப்பிடணும்.. சரியா?
கதை பிடிச்சிருக்கா?.சரி! எதுனாலும் கமெண்ட் பண்ணுங்க. சமத்தா இருங்க!
நாம அடுத்த இதழ்ல பாக்கலாம்.
பை! பை! டாட்டா!
👋👋👋👋👋👋👋👋👋👋
நான் ஒரு இல்லத்தரசி. என் மனவுளைச்சலையும் இறுக்கத்தையும் விரட்டும் முயற்சியாக என் எழுத்தார்வத்தைக் கெட்டியாகப் பிடித்துக் கொண்டிருக்கும் சராசரிப் பெண். இணையத்தில் சிறுகதைகளும் தொடர்கதைகளும் எழுதி வருகிறேன். இரண்டு தொடர்கதைகள் புத்தகமாக வெளி வந்துள்ளன. தினமலர் வாரமலரில் என் சிறுகதைகள் வெளி வந்துள்ளன. பல இணையதளங்கள் நடத்திய பல சிறுகதைப் போட்டி, கவிதை, கட்டுரை, செய்யுள் எழுதும் போட்டிகளில் பங்கு கொண்டு முதல் பரிசினை வென்றிருக்கிறேன்.