நல்லதை விதைத்தால் நாடு செழிக்கும்!
அல்லதை விடுத்தால் வீடு செழிக்கும்!
உள்ளதை விரும்பினால் மனம் செழிக்கும்!
ஊக்கம் தழைத்திட உழைப்பு உதவும்..
வீழ்வதைப் பொறுத்தே வெற்றியும் நிலைக்கும்!
கற்றதைப் பின் தொடர்ந்தால் அறம் வலுக்கும்..
பெற்றதைப் பகிர்ந்தால் உறவு பெருகும்..
செய்ததை உணர்ந்தால் நிம்மதி நிலைக்கும்!
நட்டதைப் பேணினால் இயற்கை வாழ்த்தும்..
பருவத்தைக் காத்தால் சந்ததி பிழைக்கும்..
தருவதைத் தொடர்ந்தால் தன்னிறைவு பெருகிடும்!
கடந்ததை வருந்தினால் கவலையே மிஞ்சிடும்..
வருவதை அஞ்சினால் வாழ்வதே சங்கடம்..
இன்றதை வாழ்ந்தால் இன்பம் அது நிச்சயம்!
சொன்னதைச் செய்தால் அரசியல் தழைக்கும்..
கேட்டதைக் கொடுத்தால் உழவு செழிக்கும்..
நல்லதை நினைத்தால் நன்மையே பெருகும்..
இன்பத்தைப் பகிர்ந்தால் அனைத்தும் வசமாகும்!
தை பிறந்தால் வழி பிறக்கும்!
நல்ல தை பிறந்தாள்!
வல்லமை தந்திடுவாள்!
இனி நல்ல வழி பிறந்திடும்!
இன்பமே நிலைக்கும்!
தரணியெங்கும் தமிழ் இன்பமே நிலைக்கும்!