பூமணி அழுது அழுது ஓய்ந்து போனாள். நீண்ட நேரம் பாயில் படுத்து விம்மிக் கொண்டே இருந்தவள், கன்னத்தில் வழிந்து காய்ந்த கண்ணீருடன் சிறிது நேரத்தில் தன்னையே அறியாமல் தூங்கிப் போனாள்.

தூங்கிக் கொண்டிருந்த மகளின் மீது போர்வையைப் போர்த்தி விட்ட ரங்கன், பெருமூச்சுடன் வேலைக்குக் கிளம்பினான்.

பாவம் ரங்கனாலும் என்ன செய்ய முடியும்?

மகள் அழுகிறாள் என்று வேலைக்குப் போகாமல் இருக்க முடியாதே!

ரங்கன் அருகிலிருந்த தொழிற்சாலையில் நைட் வாட்ச்மேனாக வேலை பார்க்கிறான். பூமணி ரங்கனின் ஒரே மகள். பூமணி சின்னக் குழந்தையாக இருந்தபோது பூமணியின் தாய் விஷக் காய்ச்சல் வந்து இறந்து போனாள். அவள் இறந்த பிறகு, தாயுமாகி நின்று பூமணியை ரங்கன் தன்னால் முடிந்த வரை பாசத்துடன் வளர்த்து வந்தான். பூமணியும் மிகவும் சமர்த்துக் குழந்தை தான். அனாவசியமாக எதுவும் கேட்டு அடம் பிடிக்க மாட்டாள். வீட்டில் நிலவும் ஏழ்மை நிலையை அவள் புரிந்து கொண்டு நடந்தாள்.

அன்று நடந்த விஷயத்தைப் பூமணியால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை. பூமணிக்கு இரண்டு மாதங்களுக்கு முன்பு ஒரு நாய்க்குட்டியைக் கொண்டு வந்து தந்தான் ரங்கன். அவனுடைய நண்பன் வீட்டில் இருந்த நாய் நிறையக் குட்டிகளை ஈன்றிருந்தது. அதில் ஒரு குட்டியை ரங்கனிடம் நண்பன் தர, ரங்கனும் அதைக் கொண்டு வந்து பூமணியிடம் கொடுத்தான்.

அந்தக் குட்டி வந்ததில் இருந்து பூமணிக்கு நன்றாகப் பொழுது போனது. வீட்டில் அவர்கள் சாப்பிடும் உணவையே கொடுத்துப் பழக்கினாள். பூமணி போகும் இடங்களுக்கு எல்லாம் பின்னாலேயே சுற்றிக் கொண்டிருந்தது அந்தக் குட்டி. வெள்ளை வெளேரென்றிருந்த அந்த நாய்க்குட்டிக்கு மேகா என்று பெயர் வைத்துக் கூப்பிட்டாள் பூமணி. சின்னச் சின்ன வேலைகள் கூடச் செய்யப் பழக்கி இருந்தாள்.

இன்று மதியத்தில் இருந்து மேகாவைக் காணவில்லை. அதற்குத் தான் இத்தனை அழுகை. பூமணியின் மனதில் துக்கம் துக்கமாகப் பொங்கி வந்தது. மகள் நன்றாகத் தூங்கியதும், வாசற்கதவை நன்றாக மூடிவிட்டு ரங்கனும் வேலைக்குக் கிளம்பி விட்டான்.

நடு இரவில் பூமணிக்கு திடீரென மேகாவின் குரல் கேட்டது போல இருந்தது. சடக்கென்று முழித்து எழுந்து உட்கார்ந்தாள். நன்றாகத் தூக்கம் கலைந்து விட்டது. வாசற்கதவைத் திறந்து வெளியே வந்து தேடினாள். இருட்டில் ஒன்றும் தெரியவில்லை.

அவர்களுடைய ஊர் மலையடிவாரத்தில் இருந்தது. பூமணியின் வீடு, ஊர்க் கோடியில் அடிவாரத்துக்கு மிகவும் அருகில் இருந்தது. எங்கோ தொலைவில் மேகாவின் குரல் கேட்டது போல் இருந்ததால், அந்தத் திசையை நோக்கி நடந்தாள் பூமணி. தன்னையே அறியாமல் மரங்கள் அடர்ந்த காட்டுப் பகுதிக்குள் வந்து விட்டாள் பூமணி. இருட்டாக வேறு இருந்தது. எந்த இடம் என்றும் புரியவில்லை. திரும்பிப் போகும் வழியும் தெரியவில்லை. அப்படியே ஒரு மரத்தடியில் சாய்ந்து உட்கார்ந்து தூங்கி விட்டாள்.

அடுத்த நாள் காலையில் கண் விழித்து எழுந்த பூமணி மீண்டும் நடக்க ஆரம்பித்தாள். அருகில் இருந்த ஒரு குளத்தில் இருந்த குளிர்ந்த நீரை எடுத்து முகம் கழுவிக் கொண்டாள். அந்தக் குளத்தில் நிறைய தாமரைப் பூக்கள் மலர்ந்து சிரித்துக் கொண்டிருந்த காட்சி பார்க்கவே அழகாக இருந்தது. அதை இரசித்தபடியே அங்கிருந்து நடக்க ஆரம்பித்தாள். வழியில் இரண்டு குரங்குக் குட்டிகள், கையில் ஒரு தாமரைப் பூவை வைத்துக் கொண்டு தூக்கித் தூக்கிப் போட்டு விளையாடிக் கொண்டிருந்தன.

“என்னைக் காப்பாத்துங்க, யாராவது ப்ளீஸ் என்னைக் காப்பாத்துங்க”, என்று பரிதாபமாக ஒரு குரல் கேட்க, பூமணி அங்குமிங்கும் தேடினாள். குரங்குக் குட்டிகளின் கையில் இருந்த தாமரையில் இருந்து அந்தச் சத்தம் வந்ததைக் கேட்டு, பூமணி அந்தக் குட்டிகளிடம் அந்தப் பூவைத் தரும்படி கெஞ்சினாள்.

“எங்களுக்கு விளையாட வேறு ஏதாவது கொடுத்துட்டு இதை வாங்கிக்கொண்டு போ”, என்று அந்தக் குரங்குகள் சொல்ல, பூமணியின் என்ன கொடுப்பது என்று தேடின.

அருகிலிருந்த காட்டுக் கொடிகளைப் பிய்த்துச் சுருட்டி, ஒரு பந்து போலச் சுற்றினாள் பூமணி. தன் தலையில் கட்டியிருந்த ரிப்பனைக் கழற்றி, அந்தப் பந்தை நன்றாகக் கட்டி, அந்தக் குரங்குக் குட்டிகளிடம் கொடுக்க, அந்தக் குட்டிகளும் சந்தோஷமாகப் பந்தை வாங்கிக் கொண்டு அந்தப் பூவை அவளிடம் கொடுத்து விட்டன.

தாமரைப் பூவைக் கையில் வாங்கிப் பார்த்த பூமணிக்கு ஒரே ஆச்சரியம். அந்தப் பூவிற்குள் இருந்து ஒரு குட்டிப்பெண் எட்டிப் பார்த்தாள்.

“ரொம்ப நன்றி. நான் தான் அந்தக் குளத்தில் இருக்கும் குட்டி ராஜ்யத்தோட்ட இளவரசி. கரைக்குப் பக்கத்தில் வந்த என்னை இவங்க தூக்கிட்டு வந்துட்டாங்க. என்னைத் திரும்பக் குளத்தில் விடறீங்களா அக்கா?”, என்று இனிமையான குரலில் பேசினாள் அந்த இளவரசி.

பூமணி, அந்தத் தாமரையை எடுத்துக் கொண்டு அந்தக் குளத்தின் அருகே போனாள்.

“ஆமாம். இந்த அதிகாலை நேரத்தில் நீங்க எப்படி இங்கே வந்தீங்க? மனுஷங்க வராத இடமாச்சே இது?”, என்று கேட்டாள் தாமரை இளவரசி.

“அதுவா? என்னோட மேகா நாய்க்குட்டி தொலைஞ்சு போச்சு. அதைத் தேடிக்கிட்டு இராத்திரி காட்டுக்குள்ள வந்துட்டேன். இருட்டில் வழி தெரியலை. மேகாவும் கிடைக்கலை”, என்று வருத்தத்துடன் பேசினாள் பூமணி.

“மேகாவைப் பத்தி எனக்குத் தெரியலை. ஆனா நான் சொல்லறபடி செஞ்சா உங்களுக்கு இன்னொரு நாய்க்குட்டி கிடைக்கும். இங்கேருந்து நேராப் போனால் ஒரு சின்ன குகைக் கோயில் இருக்கும். அதுக்குள்ள போனா ஒரு பெரிய பாறை இருக்கும். அது பக்கத்திலேயே சின்னச் சின்ன வெள்ளைக்கல் கிடக்கும். அந்த வெள்ளைக் கல்லை எடுத்துப் பாறையில் என்ன வரையறோமோ அது அப்படியே உயிரோடு வந்துடும். நீங்க அந்த குகைக்குப் போயி, வன தேவதையை வேண்டிக்கிட்டு உங்க நாய்க்குட்டியோட படத்தை வரையுங்க”, என்று சொல்லி விட்டு அந்தத் தாமரை இளவரசி குளத்தில் மிதந்தபடி தனது ராஜ்யத்திற்குப் போனாள்.

thaamarai ilavarasi
படம்: அப்புசிவா

தாமரை இளவரசி சொன்னபடியே பூமணி அந்த குகைக் கோயிலுக்குப் போய், வன தேவதையை மனதில் வேண்டிக் கொண்டு,

வெள்ளைக் கல்லால் பாறையில் நாய்க்குட்டியின் படத்தை வரைந்தாள். என்ன அதிசயம்! ஒரு நாய்க்குட்டி பாறையில் இருந்து குதித்து அவள் காலடியில் வந்து நின்றது. பூமணி மகிழ்ச்சியுடன் அந்த நாய்க்குட்டியைத் தூக்கிக் கொஞ்சினாள். அதைக் கையில் தூக்கியபடி வீட்டை நோக்கி நடக்க ஆரம்பித்தாள். நல்ல வெளிச்சம் இருந்ததால் வழியை அவளால் எளிதாகக் கண்டுபிடிக்க முடிந்தது.

வீட்டுக்குப் போனால் அடுத்த அதிசயம். மேகாவும் திரும்பி வந்திருந்தது. ரங்கன் வேறு மகளைக் காணாமல் தவித்துப் போயிருந்தான். கையில் ஒரு புதிய நாய்க்குட்டியுடன் நுழைந்த பூமணியைப் பார்த்து ரங்கனுடைய மனம் குளிர்ந்தது. மேகாவும் வாலை ஆட்டிக் கொண்டு பூமணியிடம் ஓடியது.

மேகாவிற்கு புது ஃப்ரண்டாக, ராகாவும் சேர்ந்து கொள்ள பூமணிக்கு ஒரே கொண்டாட்டம் தான். ரங்கனும் மனநிறைவுடன் மகளைப் பார்த்தான். அவனுக்கும் இனி நிம்மதி தான்.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
Subscribe
Notify of
guest
0 கருத்துகள்
Inline Feedbacks
View all comments