மலையடிவாரத்தில் நீண்ட நாட்களாக குரங்குக் கூட்டங்கள் வசித்து வந்தன.
நிஷ்,அனீஷ்,வர்ஷ்.. மூவருமே நெருக்கமான நண்பர்கள். ஒவ்வொருவருக்கு ஒவ்வொன்று பிடிக்கும்.. அதிலும் அனீஷிற்கு தக்காளி என்றால் உயிர்.
எப்போதுமே மூன்று பேருமே விளையாடிக்கொண்டு மட்டும் தான் இருப்பார்கள்.
நிஷ்ஷிற்கு. எப்போதும் சாப்பாட்டின் மேல் கவனம் இருக்காது எப்போதுமே விளையாட்டு அது மட்டும்..குறும்புக்காரக் குரங்கு அது.
அனீஷ் குரங்கு அப்படியே நேர் எதிர்.. சரியான நேரத்திற்கு உணவு உண்ணும் .. விளையாட்டு குணம் அதிகம்.. எதையாவது செய்து பிரச்சனையில் சிக்கிக் கொள்வது இதனுடைய வாடிக்கை…
வர்ஷ் கொஞ்சம் நிதானமான குரங்குக் குட்டி.. சிலநேரம் சொன்ன பேச்சைக் கேட்கும் பல நேரத்துல கேட்கவே கேட்காது. அனீஷிடம் சேர்ந்து விட்டால் அவ்வளவு தான். என்ன செய்கிறது என்றே தெரியாது.
காலையில் எழுந்து கிடைப்பதை உண்டு விட்டு மூன்று குரங்குகளும் விளையாடச் சென்று விடும். அவர்கள் வழக்கமாக விளையாடுவது அங்கிருந்த ஒரு சின்ன பள்ளத்தாக்கில்…பெரிய ஆலமரம் இருக்க அதனுடைய விழுது வழியாகக் கீழே இறங்கி விடும்.
அங்கே நிறைய தக்காளிச் செடிகள் உண்டு.. கூடவே வெள்ளரிப் பிஞ்சுகளும் இருக்கும். அங்கே இருந்த செடியில் நிறைய காய்த்து இருக்கும். அங்கே சென்றால் விளையாடி விட்டு அங்கு கிடைக்கும் தக்காளி, வெள்ளரிப் பிஞ்சுகளை சாப்பிட்டு விட்டு மாலையில் தான் வீட்டுக்கு வரும்.
அன்றும் வழக்கம் போல முதலில் நிஷ் குரங்கு இறங்கிவிட்டது. அடுத்ததாக அனீஷ், வர்ஷ் இருவரும் கீழே இறங்கியது. நேரம் செல்வது தெரியாமல் நீண்ட நேரம் விளையாடுவது வாடிக்கை.. பாதுகாப்பான பகுதி தான் சிறிய சம அளவில் சதுரமாக இருந்தது அந்தப் பள்ளத்தாக்கு… தினமுமே விளையாண்டு விட்டு மேலே ஏறிச் சென்று விடுவார்கள்.
நிஷ் எப்போதும் பொறுமையாகச் செல்கிறவன்…
ஆனால் அனீஷ், வர்ஷ் அப்படி கிடையாது..நன்றாக,ஒற்றுமையாக விளையாடுவதாக தோன்றினாலும் எப்போதுமே இருவருக்கும் சண்டை தீரவே தீராது.
இவர்களுடைய நட்பு வட்டத்திற்குள் சமீபமாக இணைந்து கொண்டது சிபு குரங்கு.. நாலு பேருமே மகிழ்ச்சியாக எப்போதுமே விளையாடிக்கொண்டு இருந்தனர்.
சிபு குரங்கு வந்த பிறகு நிஷ் குரங்குவிடம் நிறைய மாற்றம் தென்பட்டது. நிறைய குறும்புகளைக் குறைத்துக் கொண்டது. எப்போதுமே இருவரும் இணைந்து சுற்ற ஆரம்பித்து இருந்தனர்.
நாட்கள் செல்லச் செல்ல நால்வருமே நல்ல நண்பர்களாக மாறி இருந்தது.
இப்போது நால்வர் மட்டுமே எங்கே சென்றாலும் சேர்ந்து செல்வது..
வசந்த காலம் தொடங்கி இருந்தது அந்த காட்டில்..மழை அடிக்கடி வர ஆரம்பித்தது.
அனீஷின் தாயார் அனீஷிடம்.. “தனியா எங்கேயும் விளையாடப் போகக்கூடாது. எங்க போனாலும் சொல்லிவிட்டுப் போகனும்..”.
சரி மா.. அருகில் இருந்த சிபுவிடம்..”நீதான் பெரியவன் பத்திரமா விளையாட அழைச்சிட்டுப் போகனும்.” சிபு வந்த பிறகு நிறைய பயம் குறைந்து இருந்தது அனீஷின் தாயாருக்கு..
“சரி மா நான் பார்த்துக்கறேன்.”
அனீஷ், வர்ஷ் விளையாட்டு எப்போதுமே அதிகமாக இருந்தது. பயம் துளிகூட கிடையாது.அனீஷ் சொல்வதை வர்ஷ் கேட்காது. அது போலத் தான் வர்ஷ் ஏதாவது சொன்னால் அனீஷ் கேட்காது.
இணக்கம் என்பது இருவருக்கும் துளி கூட கிடையாது.
அந்தக் குணம் எந்த அளவிற்கு அவர்களை இழுத்துச் சென்றது என்றால் அன்றைக்கு வழக்கம்போல அந்த பள்ளத்தாக்கிற்கு விளையாட நால்வருமே சென்றனர்.
அன்றைக்கு ஏனோ காற்று சற்றே பலமாக வீசியது. மழை கூட லேசாகத் தூர ஆரம்பித்தது. பள்ளத்தாக்கில் தண்ணீர் மெல்ல மெல்ல சற்று உயர்வது போலத் தோன்ற சிபு குரங்கு வேகமாக மூவரையுமே மேலே வரச்சொல்லி அழைத்தது.
ஆனால் அனீஷ், வர்ஷிற்கு விபரீதம் புரியவில்லை. வழக்கம் போல குறும்பு அதிகம் ஆக ஆரம்பித்தது.
பள்ளத்தாக்கில் நீர் தேக்கி உயர்வது தெரியவில்லை. எங்கே. அனீஷ் விழுதைப் பிடித்து ஏறினால் வர்ஷ் கீழே இழுத்து விட்டது.. வர்ஷ் ஏறினால் அனீஷ் அதனுடைய வாலை இழுத்து கீழே விட்டது. இதையே மாறி மாறிச் செய்தனர்.
ஆக இருவருமே மாறி மாறி இழுத்துக்கொண்டே இருந்தார்களே தவிர வெளியேறுவதற்கான வழி தெரியவில்லை சற்று நேரம் மேலிருந்து பார்த்துகொண்டிருந்த சிபு, நிஷ் இருவரும் வேகமாக அனீஷின் தாயாரை அழைத்து வரச் சென்றது.
வேகமாக இருவரும் ஓடி அங்கே அனீஷின் தாயாரிடம் விவரத்தைச் சொல்ல சற்று வேகமாகப் பதறியபடி, பள்ளதாக்கை நோக்கி மூவரும் ஓடி வந்தனர்..
கீழே பார்க்க அப்போது இரண்டு அடிக்குத் தண்ணீர் தேங்கியிருந்தது. இன்னும் கூட இரண்டு குரங்குகளும் மேலே வரவில்லை மாறி மாறி இழுத்து விட்டுக் கொண்டு தான் இருந்தது.
வேகமாகக் கீழே இறங்கிய அனீஷின் தாயார் இரண்டு பேரின் முதுகிலும் ஆளுக்கு ஒரு அடியை வைத்து இரண்டு பேரையும் தன்னுடைய முதுகில் தூக்கிக் கொண்டு வேகமாக வெளியேறியது.
பிறகு நேராக வீட்டுக்குச் சென்ற உடனேயே இருவரையும் அமரவைத்துத் திட்ட ஆரம்பித்தது
“என்ன சொல்லியிருக்கறேன்.. சொல்லற எதையுமே கேட்கவில்லை. உனக்குத் தெரியாதா.. தண்ணீர் வேகமாகக் கீழே இறங்குவது…ஏதாவது ஆகி இருந்தா..மண் சரிஞ்சா..என்ன ஆகியிருக்கும்”.
“சாரி மா இனி அது போல செய்ய மாட்டோம்…”, மன்னிப்பு கேட்டார்கள் இருவருமே..
அப்போது ஏற்கனவே வந்து அமர்ந்திருந்த சிபு குரங்கு கூறியது. இருவரையும் பார்த்து,
“இணக்கம் இல்லாத நட்பு துன்பம் தரும்..இது உங்களுக்குத் தெரியாதா. இரண்டு பேருமே இனியாவது ஒற்றுமையாய், இணக்கமாக இருங்க இல்லாட்டிப் பிரச்சினையில் சிக்க வேண்டியதா இருக்கும்.”, சொல்லி விட்டு தன்னுடைய வீட்டிற்குப் புறப்பட்டது.
என்ன குழந்தைகளே சிபு சொன்னது உண்மை தானே…இணக்கம் இல்லாத நட்பு எப்போதுமே பிரச்சனை தானே.
நான் ராஜேஸ்வரி.d (கவிசெளமி),கோவையில் வசிக்கிறேன். இரண்டு வருடமாக கதைகள் எழுதுகிறேன். புதினம்2020 போட்டியில் மூன்றாவது பரிசு வாங்கி புத்தகமாக வெளிவந்தது மறக்கமுடியாத அனுபவம்