முன்னொரு காலத்தில் ஒரு பச்சைப் பசேல் தோட்டம் இருந்தது. அதில் ஒரு குளம் இருந்தது. அதில் ஒரு அழகான வெள்ளை அல்லி பூத்து இருந்தது. போதுமான சூரிய ஒளியும், பனித்துளியும் அதற்குக் கிடைத்தது; எனவே அது மகிழ்ச்சியாக இருந்தது. 

அதற்கு ஒரே ஒரு வருத்தம் தான். அது என்னவென்றால், தோட்டக்காரர் அவ்வப்போது வருவார்; அதனுடன் பூத்திருந்த மற்ற அல்லிப்பூக்களைப் பறித்துக் கொண்டு போய் விடுவார். அதற்குப் பிறகு, அவற்றைப் பார்க்கவே முடியாது.

ஒரு நாள் அவர் கூர்மையான கத்தியுடன் வந்தார். அந்த வெள்ளை அல்லிப் பூவையும் தண்டிலிருந்து நறுக்கி எடுத்துத் தன் கையில் கொண்டு சென்றார். வழி எங்கும், பூ அழுது கொண்டே சென்றது. “இந்தப் பூவில் மட்டும், நிறைய பனித்துளி இருக்கிறது!” என்றார் அவர். 

அவர் வீட்டுக்குத் திரும்பிய பிறகு, அந்தப் பூவை ஒரு உயரமான பச்சைப் பூச்சாடியில் செருகி வைத்தார். அதற்குப் பக்கத்தில், உடம்பு சரியில்லாத ஒரு குட்டிக் குழந்தை படுத்திருந்தான். பூவின் அழகைப் பார்த்தவுடன், குழந்தையின் கண்கள், மகிழ்ச்சியில் பளீரென ஒளி வீசின.  

“ஓ! என் அருமை அல்லிப்பூ! அம்மா! நான் எப்ப போயி, பூத்திருக்கிற மத்த அல்லிகளைப் பார்க்க முடியும்?”, என்றான் அவன். அந்த நிமிடத்திலிருந்து, அவனுடைய நோய் குறைந்து, உடம்பு தேற ஆரம்பித்தது.

அதைக் கேட்டவுடன், அவன் அம்மாவுக்கு ஆனந்தக் கண்ணீர் வந்தது. “இந்த அல்லிப்பூ தான், என் மகனைக் குணப்படுத்தியது”, என்று மகிழ்ச்சியுடன் சொன்னார் அம்மா. 

“இந்த அல்லிப்பூ மட்டும் வந்து, அவனுக்கு உற்சாகம் கொடுக்கவில்லை என்றால், அவன் பிழைத்து எழுவது சந்தேகம் தான்”, என்றார் அம்மா.

அல்லிப்பூ வாடித் தொங்காமல் இருக்க மிகவும் முயன்றது.  தைரியத்துடன் நேராக நிமிர்ந்து நின்றது. ஒவ்வொரு நாளும் அந்த பூவைப் பார்த்துக் கொண்டு, குட்டிப்பையன் நோய் குணமாகி, நன்றாக உடம்பு தேறி வந்தான்.

ஒரு நாள் நன்றாகக் குணமான பிறகு, பூத்திருந்த அல்லிப் பூக்களைப் பார்க்க, அவனைத் தோட்டத்துக்கு அழைத்துச் சென்றனர்.

அவன் போன பிறகு, அல்லிப்பூ வாடித் துவண்டு தொங்கியது. அத்துடன் தன் வாழ்வு முடிந்து விட்டது என்று அது நினைத்தது.  அதற்கு வருத்தம் இருந்தாலும், அதற்காகக் கவலைப்படவில்லை. தன் வாழ்வில் நல்ல காரியம் ஒன்றைச் செய்ய முடிந்ததை நினைத்து அதற்குத் திருப்தி.

அது கீழே தொங்கிய போது, தன் சிறகுகளைப் படபடத்து அசைத்தபடி ஒரு வெள்ளை வண்ணத்துப்பூச்சி அங்கே வந்தது. “ஓ! மகிழ்ச்சியான அல்லிப்பூவே!”, என்றது வண்ணத்துப்பூச்சி.

alli poo

அல்லிப்பூ மகிழ்ச்சியின்றி, வருத்தத்துடன் பூச்சியைப் பார்த்தது. “எனக்கு வருத்தம் இருந்தாலும், அதற்காக நான் கவலைப்படவில்லை”, என்றது அல்லிப்பூ.

“வருத்தமா? உனக்கு ஒன்று தெரியுமா? குழந்தைக்கு மகிழ்ச்சி தந்து உதவுகிற பூக்கள், முடிவில் என்னவாக மாறும் தெரியுமா? அவை வாடிக் காய்ந்தவுடன், தேவதை ஆகிவிடும். உலகத்தில் உள்ள பசுமையான தோட்டங்களில், அவை எப்போதும் பறந்து கொண்டிருக்கும். மற்றவை அடுத்த ஆண்டு பூக்களாக மலரும். நீ ஒரு தேவதை ஆகி விடுவாய்”, என்றது வண்ணத்துப்பூச்சி.

வண்ணத்துப்பூச்சி சொல்லி முடிப்பதற்குள், அல்லிப்பூ ஒரு தேவதையாக மாறியது. அதன் வெள்ளைச் சிறகுகளை விரித்தது.

தேவதையாக மாறிய அல்லிப்பூவும், வண்ணத்துப்பூச்சியும் வானில் மின்னுகிற சூரிய ஒளியில், ஒன்றாகப் பறந்து சென்றன.

(ஆங்கிலம் – ஈ.நெஸ்பிட்)

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
Subscribe
Notify of
guest
0 கருத்துகள்
Newest
Oldest Most Voted
Inline Feedbacks
View all comments