“அம்மா,அம்மா”,
என்று உற்சாகத்துடன் அழைத்துக் கொண்டே வீட்டில் நுழைந்தான் கவின்.
“என்னடா ராஜா? என்ன ஆச்சு ஸ்கூலில இன்னைக்கு?”
“இன்னைக்கு ஸ்கூலில் ஒரு எஸ்ஸே காம்பெடிஷன் அனௌன்ஸ் செஞ்சிருக்காங்கம்மா. தலைப்பு ‘அழகு’ ன்னு வச்சிருக்காங்க “,
என்று கவின், தனது அம்மா பவித்ராவிடம் சந்தோஷமாகச் சொன்னான். கவின், அவர்கள் வீட்டுக்கு அருகில் இருக்கும் பள்ளியில் ஐந்தாம் வகுப்பில் இருக்கிறான்.
“நானும் எழுதறேன்மா. எனக்கு நீ ஹெல்ப் பண்ணறயாம்மா? அழகுன்னா என்னன்னு சொல்லறயாம்மா?”.
” கண்டிப்பா சொல்லறேன். அழகுன்னா எதைப் பாத்தா மனசுக்கு சந்தோஷமாகவும் நிறைவாகவும் தோணுதோ அது தான் அழகு. விடிகாலைப் பொழுது அழகு. அந்திவானச் சிவப்பு அழகு. மழைத்தூறல் அழகு. அருவியின் ஓசை அழகு. நதியின் நீரோட்டம் அழகு. கடலின் அலைகள் அழகு. மலர்கள் அழகு. குழந்தையின் சிரிப்பு அழகு. இசை அழகு. நமது மொழி அழகு. இப்படி நம்மைச் சுற்றி எத்தனையோ அழகான விஷயங்கள் இருக்கு. அழகைப் பார்த்து இரசித்துக் கொண்டாட வேண்டும். நாம் பார்க்கும் பார்வையில் தான் அழகு இருக்கு”, என்று சொன்ன அம்மாவைப் பெருமையுடன் பார்த்தான் கவின்.
“இது போதும்மா. இனி நானே எழுதிடறேன். எனக்கு நல்லாப் புரிஞ்சதும்மா” என்றான் கவின்.
பத்தே வயதான கவின் தனது முயற்சியால் அழகாகக் கட்டுரையை எழுதி முடித்து சமர்ப்பித்து விட்டான். அவனுடைய கட்டுரைக்கு முதல் பரிசும் கிடைத்து விட்டது. அவனுடைய
பள்ளி, சென்னையில் பிரபலமான தனியார் பள்ளி. அன்று பள்ளியின் ஆண்டுவிழாவில் கவினுக்குப் பரிசு கிடைக்க இருந்தது.
பெற்றோரும் கண்டிப்பாக வரவேண்டும் என்று சொன்னதால் தயக்கத்துடன் அவர்களும் வந்தார்கள். சாதாரணமாக எந்த நிகழ்ச்சியிலும் கலந்து கொள்ள மாட்டார்கள். தலைமை தாங்க ஓர் அமைச்சர் வந்திருந்தார்.
கவினுக்குப் பரிசளிப்பதற்கு முன்னால் அவனுடைய கட்டுரையை அவனையே வாசிக்க வைத்தார் பள்ளியின் முதல்வர். அதைக் கேட்ட எல்லோருடைய கண்களில் இருந்தும் கண்ணீர் பெருகியது.
“அழகு என்பது மனம் சம்பந்தப் பட்டது. பார்க்கும் போது மனதிற்கு நிறைவையும் இன்பத்தையும் தருவது எதுவோ அது தான் அழகு என்று என் அம்மா சொன்னார்கள். இந்த உலகத்தில் நம்மைச் சுற்றி நம்மைச் சார்ந்து இருக்கும் ஒவ்வொரு பொருளும் அழகு.நமைச் சுற்றி நடக்கும் நல்ல விஷயங்கள் அழகு. என்னைக் கேட்டால் இந்த உலகிலேயே மிகவும் அழகானவர்கள் என்னுடைய அம்மாவும் அப்பாவும் தான்.
அப்பா இராணுவத்தில் பணி புரியும் போது தேச சேவையில் ஒரு. கையையும் ஒரு காலையும் இழந்தார். மண்ணில் ஒளித்து வைக்கப்பட்டிருந்த கண்ணிவெடியை இடறியதால் ஏற்பட்ட பாதிப்பு.
என்னுடைய அம்மா ஒரு டாக்டர்.ஒரு கிரிமினலிடம் சிக்கி அவனுடைய கொடுமைகளால் பாதிக்கப் பட்டு உயிருக்குப் போராடிய ஏழைப் பெண்ணைக் காப்பாற்றியதால் அந்த கிரிமினலின் பகையைச் சம்பாதித்தார்.
அவரை ஆஸிட் எறிந்து தாக்கி விட்டார்கள். முகத்தில் சதையெல்லாம் கருகித் தீவிர சிகிச்சையால் என் அம்மா உயிர் பிழைத்தார். ஆனால் அவருடைய முகம் விகாரமாகி விட்டதால் வெளியே அதிகமாக வர மாட்டார்.ஆனால் எனக்கு அந்த முகம்தான் உலகத்திலேயே மிக அழகாகத் தெரிகிறது. எனது பெற்றோர் இருவரும் மிகவும் அழகானவர்கள். அழகின் இலக்கணம் வகித்தவர்கள் அவர்களே. ஆகையால் இன்று இந்தப் பரிசையும் நான் எனது பெற்றோரின் கையால் வாங்க ஆசைப் படுகிறேன்”,
என்று அவன் பேசி முடித்ததும் வயதில் முதிர்ந்த அந்த அமைச்சர் எழுந்து நின்று கைகளைத் தட்டினார்.
கவினுடைய அப்பா ஊன்றுகோலின் உதவியுடன் மேடை ஏற, அவனுடைய அம்மா தன்னுடைய முகத் திரையைத் தூக்கி எறிந்து விட்டு மேடையில் ஏறிப் பெருமையுடன் மகனின் அருகில் நின்றார்.
அரங்கமே எழுந்து நின்று கைகளைத் தட்டி அவர்களை வாழ்த்தியது.
இருபத்தைந்து ஆண்டுகள் கழித்துக் கவின் இப்போது இராணுவத்தில் மருத்துவராக நாட்டிற்கு சேவை செய்கிறான்.
அப்பாவைப் போல இராணுவ வீரராக நாட்டிற்கு சேவை. அம்மாவைப் போல மருத்துவராக மக்களுக்கு சேவை. இரண்டு ஆசைகளையும் இணைத்துத் தன் இலக்கை நிர்ணயித்துக் கொண்டான்.
மனத்தூய்மையும் நல்ல எண்ணங்களுமே பெரும் அழகு என்பதை கவின் நன்றாகப் புரிந்து கொண்டான். அதுவும் சிறிய வயதிலேயே!
வங்கி வேலை, கணித ஆசிரியை அவதாரங்களுக்குப் பிறகு இப்போது எழுத்தாளர். அதுவும் சிறுவர் கதைகள் எழுத மனதிற்குப் பிடிக்கிறது. மாயாஜாலங்கள், மந்திரவாதி கதைகள் எழுத ஆசை. பூஞ்சிட்டு இதழ் மூலமாக உங்களுடன் உரையாடத் தொடர்ந்து வரப் போகிறேன். மகிழ்ச்சியுடன் நன்றி.