காட்டின் நடுவில் பெரிய அரசமரமொன்று இருந்தது. அதன் அடியில் எறும்புகள் சாரை சாரையாகச் சென்று கொண்டிருந்தன. மழைக் காலத்திற்காக
உணவு சேர்த்துக் கொண்டிருந்தன. சுறுசுறுப்பிற்கும் கடின உழைப்பிற்கும் பெயர் போனவை அல்லவா எறும்புகள் என்றும்?
அந்த சமயம் அங்கு ஒரு வண்ணத்துப் பூச்சி வந்து தனது அழகான சிறகுகளைப் படபடவென்று அடித்தது. சிறகுகள் அசைந்ததால் வந்த காற்றில் எறும்புகள் தடுமாறின.
எறும்புகளைப் பார்த்து வண்ணத்துப் பூச்சி கேலி செய்தது.
“எப்போது பார்த்தாலும் வேலை செய்து கொண்டிருக்கிறீர்களே! என்னைப் போல்
சந்தோஷமாக அங்கும் இங்கும் போய் ரசித்து விளையாடிப் பொழுது போக்கத் தெரியாதா உங்களுக்கு?”
என்றல்லாம் சொல்லிப் பார்த்தது. அதன் சொற்களைக் காதில் வாங்காமல் எறும்புகள் தங்களது வேலையைத் தொடர்ந்து செய்து கொண்டிருந்தன.
கருமமே கண்ணாயினார் என்று தங்களது வேலையில் ஆழ்ந்திருந்தன.
உடனே வண்ணத்துப் பூச்சி எரிச்சலுடன் எறும்புகளுக்கு அருகில் சென்று தனது இறகுகளைப் படபடவென்று அடித்தும் வேகமாகப் பறந்தும் சென்று தொந்தரவு செய்தது. இறகுகளை அடிப்பதால் உருவாக்கப் பட்ட காற்றில் எறும்புகளின் வரிசைகள் கலைந்தன. சில எறும்புகள் தடுமாறி விழுந்தன. அவை தூக்கிச் சென்ற உணவுப் பொருட்கள் கீழே விழுந்தன. உடனே எறும்புகள் வருத்தமுற்றுத் தங்களது ராணியிடம் சென்று முறையிட்டன.
ராணி எறும்பு புற்றிலிருந்து வெளியே வந்து வண்ணத்துப் பூச்சியிடம் பணிவுடன் வேண்டியது.
“வண்ணத்துப் பூச்சி அக்கா. நீ மிகவும் அழகாக இருக்கிறாய். நீ வேறு இடத்திற்குச்
சென்று விளையாடினால் எங்களால் எங்களது வேலையைத் தொடர்ந்து செய்ய முடியும். தயவு செய்து இங்கிருந்து நகர்ந்து செல்வாயா?”
என்று வேண்டிக் கேட்டும் ஒரு பயனுமில்லை. வண்ணத்துப் பூச்சி அதன் வேண்டுகோளை மதிக்காமல் திரும்பவும் அதே போல் அங்குமிங்கும் பறந்தும் இறக்கைகளை அடித்துக் கொண்டும் அவர்களைத் தொந்தரவு செய்து கொண்டே இருந்தது.
அதனால் ராணி எறும்பு மற்ற எறும்புகளிடம்
“நீங்கள் எல்லோரும் வேலையை நிறுத்தி விட்டு சற்று நேரம் ஓய்வெடுத்துக் கொள்ளுங்களேன். உள்ளே சென்று விடுங்கள்” என்று சொல்ல எறும்புகளும் தங்களது வேலையை நிறுத்தி விட்டுப் புற்றுக்குள் சென்று ஓய்வெடுக்கத் தொடங்கின.
வண்ணத்துப் பூச்சி தொடர்ந்து அங்குமிங்கும் பறந்து கொண்டிருந்தது சிரிப்புடன். உற்சாகத்துடன் பறந்த வண்ணத்துப் பூச்சி எதிரில் தனது இரையை நோக்கி வேகமாகப் பறந்து வந்த ஒரு பெரிய வண்டை கவனிக்காமல் அதன் மேல் மோதத் தனது இறக்கைகள் பிய்ந்து போய்க்
கீழே விழுந்தது. அதிக அடி பட்டதால் வலியில் துடித்துக் கொண்டிருந்தது.
புற்றுக்கு வெளியே இருந்த எறும்புகள் சென்று தங்களது ராணியிடம் சொல்ல ராணி எறும்பு உடனே வெளியே வந்தது.
வண்ணத்துப் பூச்சியின் நிலையைப் பார்த்து வருத்தப் பட்டு அதற்கு ஏதாவது உதவி செய்ய முடியுமா என்று முனைந்தது.
அப்போது தான் வண்ணத்துப் பூச்சிக்குத் தனது தவறு புரிந்தது.
“சகோதரியே, நான் தவறு செய்து உங்களுக்குத் துன்பம் விளவித்த போதிலும் அதைப் பொருட்படுத்தாமல் எனக்கு உதவி செய்ய முன் வந்த நீங்கள் அனைவரும் எவ்வளவு நல்லவர்கள்! நான் தான் தீய எண்ணங்கள் மனதில் கொண்டு தவறு செய்தேன்.என்னை மன்னித்து எனக்காக ஓர் உதவி செய்ய வேண்டும். நான் இறந்து விட்டால் எனது உடலை நீங்களே தூக்கிச் சென்று அடக்கம் செய்து விடுங்கள்”
என்று வேண்டிக் கொண்டது. சிறிது நேரத்தில் இறந்தும் போனது.வண்ணத்துப் பூச்சி வேண்டிக் கொண்ட படி எறும்புகள் அதன் உடலைத் தூக்கிச் சென்றன.
அதனால் தான் இன்று வரை எந்தப் பூச்சி இறந்தாலும் எறும்புகள் பூச்சிகளின் உடலை இழுத்துச் சென்று இறுதி மரியாதை செய்கின்றன.
இன்னா செய்தாரை ஒறுத்தல்அவர் நாண
நன்னயம் செய்து விடல்.
(திருக்குறள்)
நம்மை யாரும் துன்புறுத்தினாலும் பழிக்குப் பழி வாங்காமல் பொறுப்புடன் செயல்பட வேண்டும். பழிக்குப் பழி வாங்குகையில் அது தொடர் சங்கிலியாகத் தொடர்ந்து கொண்டே இருக்கும்.
வங்கி வேலை, கணித ஆசிரியை அவதாரங்களுக்குப் பிறகு இப்போது எழுத்தாளர். அதுவும் சிறுவர் கதைகள் எழுத மனதிற்குப் பிடிக்கிறது. மாயாஜாலங்கள், மந்திரவாதி கதைகள் எழுத ஆசை. பூஞ்சிட்டு இதழ் மூலமாக உங்களுடன் உரையாடத் தொடர்ந்து வரப் போகிறேன். மகிழ்ச்சியுடன் நன்றி.