“கலர் கோழிக்குஞ்சு, கலர் கோழிக்குஞ்சு, சிவப்பு மஞ்சள் பச்சைங்க வாங்க வாங்க!” என வாடிக்கையாய் வரும் வியாபாரியின் குரல் கேட்டதும் சௌதாமினிக்கு அடிவயிறு கலங்கியது.

வீட்டின் வரவேற்பறையில் அமர்ந்து வீட்டுப் பாடம் செய்து கொண்டிருந்த எட்டு வயது மகன் குகனை சமையலறையில் இருந்து பார்த்தவள் தன் மாமியார் மரகதத்திடம் திரும்பி, “அத்தை, குகன் கவனிக்கலை போல, கதவையும் ஜன்னலையும் நல்லா சாத்தி வையுங்க!” என்றாள்.

மரகதமும் அவ்வாறே செய்துவிட்டு, “இது எங்க போய் முடியப் போகுதோ தாமினி!” என சில நாட்கள் முன்பு நிகழ்ந்ததை நினைத்துப் பார்த்தார்.

குகன் அடம்பிடித்து நிறத்திற்கு ஒன்று என நாலு கோழிக்குஞ்சுகள் வாங்கி வளர்க்க, அவை நாலும் ஒவ்வொன்றாய் அடுத்த ஒரு வாரத்திலேயே சீக்கு வந்து மாண்டு போனது.

அடுத்த வாரம் சின்ன இரும்பு வெங்காயக் கூடையில் எங்கிருந்தோ ஒரு சிறு சேய் பறவையை கொண்டு வந்தான். பறவைக்கு ரங்க ராட்டினம் சுற்றி காட்டிகிறேன் பேர்வழியென்று அந்த வெங்காயக் கூடையை அவன் வேகமாக சுழற்ற, அது மயக்கம் வந்து மயக்கத்திலேயே இறந்தும் போனது.

அடுத்து பாதையில் கண்டெடுத்த புத்தம் புதிய கண் திறவாத நாய்க்குட்டி.

“டேய் குகா! அது பாவம்டா அம்மாக்கிட்ட பால் குடிக்கணும்டா. அது குழந்தைடா நம்ம அது பெருசானதும் வளர்த்துக்கலாம்!” என பாட்டி மரகதம் எவ்வளவு கெஞ்சியும் அவன் கேட்கவில்லை.

குட்டியைத் தொலைத்த தாய் நாயின் பரிதவிப்பை தாளாமல் அவன் பள்ளி சென்ற வேளையில், தாயிடம் குட்டியை சென்று சேர்த்துவிட்டார் மரகதம்.

“பாட்டி எனக்கு செல்லப்பிராணி வேணும். என் ஃப்ரெண்ட்ஸ் எல்லாம் ஏதாவது ஒண்ணு வெச்சு வளர்க்குறாங்க. எனக்கும் வேணும். அந்த நாயை ஏன் கொண்டு போய் விட்டீங்க!” என தரையில் படுத்துக் கை கால்களை உதைத்து அழத் தொடங்கினான்.

“கண்ணா! சின்ன மிருகம் எல்லாம் அம்மாக்கிட்ட தான்டா வளரணும். அதுங்களுக்கே ஆயுட்காலம் கம்மிடா. அதுல நம்ம வேற இம்சை செய்யக்கூடாது. நீ பெரியவனா வளர்ந்ததும் உனக்கு பிடிச்ச விலங்கை வளர்க்கலாம்!” என தாத்தா சீனிவாசன் அறிவுரை கூறினார்.

அதை நினைவு கூர்ந்த சௌதாமினி, “அத்தை! மாமா சொன்ன அறிவுரையைப் புரிஞ்சுக்கிட்டான் போல, அப்பாடா இப்பத்தான் எனக்கு நிம்மதி” என்று கூறி பெருமூச்சுவிடுவதற்குள்,

“பாட்டி, தாத்தா எங்க பாட்டி?” என்று கேட்டபடி அவர்கள் அருகே ஓடி வந்தான் குகன்.

“தாத்தா மார்க்கெட்டுக்கு போயிருக்கார்பா என்ன விஷயம்?” என்றார் மரகதம்.

“இல்ல பாட்டி, நாளைக்கு எனக்கு பிறந்தநாள்ல அதுக்கு தாத்தாக்கிட்ட கிஃப்ட் கேட்கணும்” என்றான் குகன்.

சௌதாமினி, “என்ன கிஃப்ட் குகா?”

“தாத்தா தானே நான் பெரியவனா ஆனதும், வளர்ப்பு பிராணி வாங்கித்தரேன்னு சொன்னாரு. நாளைக்கு நான் பெரியவன் ஆயிடுவேன். அதுனால எனக்கு வளர்ப்பு பிராணி வேணும்” என பிடிவாதத்துடன் கூறினான்.

சௌதாமினி, “குகன், அன்னிக்கே தாத்தா சொன்னாருல்ல சின்ன சின்ன‌ பிராணியை எல்லாம் தொல்லை செய்யக்கூடாது அது பாவம்னு”.

“ஆமாம் அம்மா, அதுனால தான் இந்த முறை நான் கேட்கப் போறது சூப்பரான விலங்கு!” என்றான் கண்களை சிமிட்டி,

‘ஆஹா! அடுத்து என்ன கேட்கப் போறானோ!’ என்று நெஞ்சைப் பிடித்துக் கொண்ட பாட்டி, “என்ன விலங்கு டா கண்ணா? எங்கிட்ட மட்டும் சொல்லுடா!” என அவனைத் தாஜா செய்யத் தொடங்கினார்.

“ம்மஹும் பாட்டி, தாத்தாக்கிட்ட தான் சொல்லுவேன், அவர் வரட்டும்” என வாயிலைப் பார்த்தபடி தாத்தாவிற்காகக் காத்திருந்தான் குகன்‌.

அரைமணி நேரம் கழித்து தாத்தா காய்கறிகள் மற்றும் பழங்கள் நிறைந்த பையுடன் வீடு வந்து சேர்ந்தார். அவர் வீட்டிற்குள் நுழையும் போதே, மரகதம் அவரிடம் குகனைக் காண்பித்து சமிக்ஞை செய்தார் ஆனால் அதை தாத்தா சீனிவாசன் கவனிக்கத் தவறிவிட்டார்.

“குகன், என்னப்பா வாசல்லயே உட்கார்ந்திருக்க?” என அவனைப் பார்த்து கரிசனத்தோடு கேட்டார்.

“தாத்தா  நாளைக்கு எனக்குப் பிறந்தநாள் தானே!”

“ஆமாம்டா தங்கம் அதான் தாத்தா உனக்கு பழம், கடலை மிட்டாய் எல்லாம் வாங்கிட்டு வந்திருக்கேனே”.

“நான் பெரிய பையனா ஆயிட்டேனா தாத்தா?”.

“ஆமாம் நாளைக்கு நீ இன்னும் கொஞ்சம் பெரிய பையனா ஆயிடுவ!”

“ஹே! ஜாலி ஜாலி நான் பெரிய பையனா ஆகப்போறேன். அதுனால எனக்கு சூப்பரா அழகா… க்யூட்டா..கருப்பா.‌‌.. ஒரு யானைக்குட்டி வாங்கித் தாங்க தாத்தா. அதை நான் செல்லப்பிராணியா வளர்க்குறேன்” என்றபடி துள்ளிக் குதித்தான்.

‘என்னது!’ என அதைக் கேட்டுக் கொண்டிருந்த சௌதாமினியும், மரகதமும் அதிர்ந்து நின்றனர்.

“குகன், யானைக்குட்டி பாவம்லப்பா!” என தாத்தா சமாதானம் செய்ய விழையும் முன், “நோ தாத்தா, நீங்க தானே சொன்னீங்க கோழிக்குட்டி, மீன்குட்டி எல்லாம் சின்னதுன்னு, யானைக்குட்டி பெருசு தானே அதை வாங்கித் தாங்க. யானைக்கு தான் மனுஷனை விட ஆயுசு அதிகமாக இருக்கும்னு எங்க மிஸ் சொன்னாங்க தாத்தா. அதுனால எனக்கு குட்டியா கருப்பா அழகா ஒரு யானைக்குட்டி வேணும் தாத்தா” என அழத் தொடங்கினான்.

அவனை எப்படி சமாதானம் செய்வது எனத் தெரியாமல் அன்னையும், பாட்டியும் விழிக்க,

“சரி குகன், நான் கேட்குற கேள்விக்கு பதில் சொன்னா உனக்கு பெட் கிடைக்கும்” என்றார் தாத்தா அவனை மடியில் அமர்த்திக் கொண்டபடி,

“கேளுங்க தாத்தா, நான் தான் பெருசாயிட்டேனே எனக்கு பதில் தெரியும்” என்றான் பெருமிதத்துடன் குகன்‌.

“உன்னோட வளர்ப்பு பிராணி பெருசா இருக்கணுமா?”

“ஆமாம் தாத்தா, பெருசா இருக்கணும் அதைக் கட்டிப்பிடிக்கவே முடியாம பெருசா இருக்கணும்”.

“ரொம்ப நாள் உயிர் வாழணுமா?”

“ஆமாம் தாத்தா!”

“ம்ம்,  சரி இப்ப உன்னைக் கொண்டு போய் அடுத்த தெருவுல உள்ள வீட்டுல விட்டுட்டா நீ என்ன செய்வ?”

“நான் ஏன் தாத்தா அங்க போகணும். எங்க அம்மா இங்க தானே இருக்காங்க. நீங்க எல்லாரும் இங்க தானே இருக்கீங்க! நீங்க எல்லாம் இல்லாம தனியா இருந்தா நான் அழுவேன்” என்றான் குகன்.

“ரொம்ப சரி, அப்ப யானைக்குட்டியை அதோட அம்மாக்கிட்டேர்ந்து பிரிச்சு கூட்டிக்கிட்டு வந்தா அது அழும்ல. அம்மா யானையும் ரொம்ப வருத்தப்படுமே. அதோட இடம் காடு தானே குகன்” என்று கேள்வி கேட்டுவிட்டு அவனையேக் கூர்ந்து பார்த்தார் தாத்தா.

“ஆமாம்ல ,ஆனா தாத்தா நான் என் ப்ரெண்ட்ஸ்கிட்ட பெருசா ரொம்ப நாள் உயிர் வாழ்ற பெட் அனிமல் வளர்க்கப் போறேன்னு சொல்லிட்டேனே. இப்ப என்ன செய்யறது?” என ஓவென்று அழுதான் குகன்.

“அவ்வளவு தானே! நாளைக்கு உன் ப்ரெண்ட்ஸை வீட்டுக்குக் கூட்டீட்டு வா அவங்களுக்கு இனிப்பு குடுத்து, ஒரு சர்ப்ரைஸும் குடுப்போம்!” என்றார் சீனிவாசன் தாத்தா.

அவர் சொன்னதன் பெயரில் மறுநாள் மாலை பள்ளி முடிந்ததும் அவனின் மூன்று நண்பர்களை வீட்டிற்கு அழைத்து வந்தான். அவர்களுக்கு இனிப்பும் பழமும் கொடுத்த பின், அனைவரையும் தோட்டத்திற்கு அழைத்துச் சென்றார் தாத்தா.

“பசங்களா, இப்ப ஆளுக்கு ஒரு பெட் தரப் போறேன். அதை நீங்க தான் பத்திரமா பார்த்துக்கணும். நீங்க எவ்வளவு நல்லா பாத்துக்கறீங்களோ அவங்க எல்லாரும் அவ்வளவு பெருசா வளருவாங்க, ரொம்ப நாள் உயிரோடவும் இருப்பாங்க சரியா!” என்றதும் நண்பர்களோடு சேர்ந்து குகனும் உற்சாகமாகக் கை தட்டினான்.

“தம்பி, அதை எடுத்துட்டு வாப்பா!” என குகனின் அப்பாவிடம் தாத்தா சொன்னதும் அவன் நான்கு தென்னங்கண்ணுடன் வந்தார்.

“என்ன பசங்களா! நான் சொன்ன பெட் இது தான். ஆளுக்கு ஒரு மரத்தை எடுத்துக்கிட்டு போய் அவங்கவங்க வீட்டுல வையுங்க, தினமும் அதுக்கு தண்ணீர் ஊத்தி நல்லா பாத்துக்கோங்க சரியா!” என்றார்.

pasumaram

“தாத்தா ஆனா பெட் அனிமல்னா அதுக்கு உயிர் இருக்கணுமே. அது எங்ககூட விளையாடணுமே!” என்றான் குகனின் நண்பன் ஒருவன்.

“மரத்துக்கும் உயிர் இருக்குடா தம்பி. நீங்க கேட்டா மாதிரி உயிருள்ள செல்லப்பிராணி. ரொம்ப பெருசா வளரும், நமக்கு அப்புறமும் ரொம்ப நாள் உயிரோட இருக்கும், சுத்தமான காத்து தரும், இளநீர், தேங்காய், மட்டை, கீற்று எல்லாம் தரும். மரத்தோட ஓலை, சின்ன தேங்காய் குறும்பை எல்லாம் வெச்சு நாம விளையாடலாம்” என மரங்களின் நன்மையை விளக்கினார்.

குகன் அமைதியாக இருக்கவே, “குகன் இப்போதைக்கு இந்த மரத்தை வளர்த்துக்கோ, உனக்கு பக்குவம் வந்ததும் வேற ஏதாவது செல்லப்பிராணியை வாங்கி வளர்த்துக்கலாம்” என்று சமாதானம் செய்தார்.

“எனக்கு எப்ப தாத்தா பக்குவம் வரும்” என தொலைத்திருந்த ஆர்வத்தை மீட்டெடுத்தவன் கேட்க, “இந்த மரம் வளர்ந்து, பெருசாகி, பூ பூத்து, காய் காய்ச்சதும் உனக்கு பக்குவம் வந்துடும்பா!” என்றார்.

“அப்படியா தாத்தா! அப்ப சூப்பர், நான் இந்த மரத்தை நல்லா வளர்க்கிறேன், சீக்கிரமா பூ பூக்க, காய் காய்க்க வைக்குறேன். அதுக்கு அப்புறம் நிறைய செல்லப்பிராணிகள் வாங்கி வளர்ப்பேன்” என்று சொல்லிவிட்டு நண்பர்களோடு ஓடிவிட்டான்.

“அப்பாடா இன்னும் நாலைஞ்சு வருஷத்துக்கு கவலையில்லை தாமினி. அதுக்கு அப்புறம் இவனுக்கு பக்குவம் வந்துடும்!” என நிம்மதி பெருமூச்சுவிட்டார் மரகதம்.

What’s your Reaction?
+1
0
+1
1
+1
0
+1
0
+1
0
+1
0
Subscribe
Notify of
guest
0 கருத்துகள்
Inline Feedbacks
View all comments