நான்கு நண்பர்கள் சேர்ந்து ஒரு குருவிடம் கல்வி கற்கச் சென்றனர். சில ஆண்டுகளுக்குப் பின் அந்த குரு அவர்களிடம்,
“உங்களுடைய கல்வி நிறைவுற்றது. இனி நீங்கள் சென்று வெளியுலகைச் சந்திக்கச் செல்லலாம்”
என்று சொல்லி அவர்களை அனுப்பும் சமயம் நால்வரிடமும் நான்கு இறகுகளை அளித்தார்.
“நீங்கள் போகும் வழியில் உங்கள் கையில் உள்ள இறகு எந்த இடத்தில் விழுகிறதோ அங்கு உங்களுக்கு செல்வம் கிட்டும். அதை வைத்து நீங்கள் பிழைத்துக் கொள்ளலாம்.”
என்று சொன்னார்.
நான்கு சீடர்களும் குருவை வணங்கி அவருக்கு நன்றி தெரிவித்து விட்டுப்
பிழைப்புத் தேடி நகரத்தை நோக்கிக் காடு மற்றும் மலை இருந்த வழியில் நடக்க ஆரம்பித்தனர்.
சிறிது தூரம் நடந்ததும் முதல் சீடனின் கையில் இருந்த இறகு கீழே விழுந்தது.
உடனே அந்த இடத்தைத் தோண்டிப் பார்த்ததும் அங்கு நிறையப் பித்தளையால் ஆன பொருட்கள் கிடைத்தன.
அவன் அவற்றை எடுத்துக் கொண்டு அருகில் இருந்த ஊரில் தங்கித் தொழில் செய்து பிழைப்பதாகச் சொல்லி விடை பெற்றான்.
இன்னும் கொஞ்ச தூரம் சென்றதும் இரண்டாவது சீடனின் கையில் இருந்த இறகு விழ அங்கு தோண்டிப் பார்த்தனர். வெள்ளியால் ஆன பொருட்கள் கிடைத்தன. அவனும் சந்தோஷத்துடன் அவற்றை எடுத்துக் கொண்டு அருகில் இருந்த ஊரில் தங்கிப் பிழைத்துக் கொள்வதாகச் சொல்லி விடைபெற்றான்.
மீதி இருவரும் தொடர்ந்து நடந்தார்கள். இன்னும் கொஞ்ச தூரம் நடந்து சென்றதும் மூன்றாவது சீடன் கையில் இருந்த இறகு விழ அந்த இடத்தில் நிறையத் தங்கம் கிடைத்தது.
அவன் தனது நண்பனிடம் சொன்னான்.
“நண்பா, இந்தத் தங்கத்தை நாம் இருவரும் பகிர்ந்து கொண்டு ஏதாவது தொழில் செய்து பிழைத்துக் கொள்ளலாம். திரும்பலாம் வா.”
என்று சொல்ல நான்காவது சீடன் மறுத்து விட்டான்.
“இல்லை. நான் இன்னும் கொஞ்ச தூரம் நடந்தால் எனக்கு இன்னும் விலைமதிப்பற்ற நவரத்தினங்களும் மணிகளும் கிடைக்கலாம். நான் வரவில்லை.”
என்று சொல்லி விட்டுத் தனியே மேலே நடக்க ஆரம்பித்தான். மூன்றாவது சீடனுக்கு மனது கேட்காமல் தனது நண்பனுக்காக அங்கேயே காத்துக் கொண்டிருந்தான்.
நான்காவது சீடன் இன்னும் சிறிது தூரம் நடந்ததும் தலையில் சக்கரத்துடன் ஒரு மனிதனைப் பார்த்தான். சக்கரத்தில் இருந்த முட்களால் காயங்கள் ஏற்பட்டு முகத்தில் இரத்தம் வடிந்து கொண்டிருந்தது.
காயங்களால் ஏற்பட்ட வலியிலும் துடித்துக் கொண்டிருந்தான்.
அவனைப் பார்த்து நான்காவது சீடன்,
“நீ யார்? ஏன் இப்படி நின்று கொண்டிருக்கிறாய்?”
என்று கேட்டான்.
“செல்வங்களின் தேவதை என்னை இப்படி நிறுத்தி வைத்திருக்கிறாள். உன்னை விடப் பேராசைக்காரன் வந்ததும் உனக்கு விடுதலை கிடைக்கும் என்று சொல்லி இருக்கிறாள். அது வரை எனக்குப் பசியும் தாகமும் கூடக் கிடையாது.”
என்று பதில் சொன்னான்.
இருவரும் பேசிக் கொண்டிருந்த போது மூன்றாவது சீடன் அங்கே வந்தான். தனது நண்பனுக்காக நீண்ட நேரமாகக் காத்திருந்தும் அவன் வராததால் அவனைத் தேடிக் கொண்டு வந்தான்.
“நண்பா, வா நாம் திரும்பி விடலாம். என்னிடம் இருக்கும் தங்கமே இருவருக்கும் போதுமானது. இதை வைத்து ஏதாவது தொழில் செய்து பிழைத்துக் கொள்ளலாம், வா”
என்று மீண்டும் அழைத்தான்.
“இல்லை. இல்லை. நான் வர மாட்டேன். எனக்கு உன்னை விட உயர்ந்த பரிசு கிடைக்கும். நீ போகலாம்.”
என்று அவன் சொல்லி முடித்ததும் அந்தச் சக்கரம் நான்காம் சீடன் தலையில் மாறி விட்டது.
மூன்றாவது சீடன்,
“பேராசையால் வந்த கஷ்டத்தை நன்றாக நீயே அனுபவி!”
என்று அவனைத் திட்டி விட்டுத் திரும்பிச்
சென்றான்.
தனது தவறான செயலுக்கு வருத்தப் பட்டுக் கொண்டு நான்காவது சீடன் தன்னை விட அதிகப் பேராசைக் காரனுக்காகக் காத்திருந்தான்.
பேராசை பெரும் நஷ்டம்.
கிடைக்கும் வாழ்வில் மனநிறைவு அடைவது நிம்மதி தரும்.
வங்கி வேலை, கணித ஆசிரியை அவதாரங்களுக்குப் பிறகு இப்போது எழுத்தாளர். அதுவும் சிறுவர் கதைகள் எழுத மனதிற்குப் பிடிக்கிறது. மாயாஜாலங்கள், மந்திரவாதி கதைகள் எழுத ஆசை. பூஞ்சிட்டு இதழ் மூலமாக உங்களுடன் உரையாடத் தொடர்ந்து வரப் போகிறேன். மகிழ்ச்சியுடன் நன்றி.