முன்னொரு காலத்தில் ஓர் ஏழை மீனவன் கடற்கரையின் அருகில் இருந்த கிராமத்தில் வசித்துவந்தான். தினமும் காலையில் தனது வலையுடன் கடற்கரைக்கு வந்து வலையை வீசித் தன்னால் முடிந்தவரை மீன்களை சேகரித்துக் கொண்டு செல்லும் வழக்கத்தைக் கொண்டிருந்தான்.
அவனுடைய தேவைக்கு அதிகமான மீன்களைப் பக்கத்து ஊர்ச் சந்தையில் விற்று வீட்டுக்குத் தேவையான சாமான்களை வாங்கி வந்து பிழைப்பை நடத்திக் கொண்டிருந்தான்.
ஒருநாள் காலையில் இருந்து சாயந்தரம் வரை வலையை மீண்டும் மீண்டும் வீசியும் ஒரு மீன் கூட அவனுக்குக் கிடைக்கவில்லை. சூரியன் மறைந்து இருள் பரவ ஆரம்பித்து விட்டது. மீனவனுக்கோ அன்று சோதனையாக ஒரு மீன் கூடக் கிடைக்கவில்லை.
இறுதியாக ஒரு முறை வலையை வீசி முயற்சி செய்து பார்த்துவிட்டு வீட்டுக்குத் திரும்பலாம் என்று முடிவு செய்து விட்டு வலையை வீசினான். வலையில் ஏதோ சிக்கியது போல அவனுக்குத் தோன்றியது.
வலையை ஆர்வத்துடன் வெளியே இழுத்துக் கரையில் போட்டான். அவனுடைய வலையில் ஒரு சிறிய மீன் சிக்கியிருந்தது.
‘ ஏதோ இந்தச் சின்ன மீனாவது கிடைத்ததே! வீட்டுக்கு வெறுங்கையாகப் போகாமல் இதை வைத்து திருப்தி அடைய வேண்டியது தான்’ என்று நினைத்துக் கொண்டே மீனை எடுக்கப் போனான். திடீரென அந்த மீன் பேச ஆரம்பித்தது. மீனவனுக்கோ ஒரே ஆச்சரியம்!
“ மீனவரே, மீனவரே, தயவு செஞ்சு என்னைத் திரும்பவும் கடலுக்குள் விட்டுருங்களேன். நானோ ரொம்பச் சின்ன மீன். என்னைக் கொன்று சமைத்து சாப்பிட்டாலும் உங்க பசி அடங்காது. அதுனால என்மீது இரக்கம் காட்டுங்க. என்னைத் தப்பிக்க விட்டுருங்க” என்று அந்த மீன், மீனவனைக் கெஞ்சியது.
. “ ஒண்ணுமே இன்னைக்கு எனக்குக் கெடைக்கலை. ஒரு சின்ன மீனாவது கெடைச்சுருக்கேன்னு நானே சந்தோஷமா இருக்கேன். வெறுங்கையோடு வீட்டுக்குப் போனா என் மனைவி என்னைக் கோவிச்சுக்குவாளே! உன்ன என்னால விடமுடியாது ” என்று திட்டவட்டமாகக் கூறி விட்டான் அந்த மீனவன்.
“ என்ன நீங்க விட்டுட்டீங்கன்னா நான் உங்களுக்கு மூணு வரங்கள் தருவேன். நீங்க வீட்டுக்குப் போனதும் நீங்களும் உங்க மனைவியும் முதலில் ஆசைப்படற மூணு விஷயங்கள் உடனுக்குடன் நிறைவேறும்” என்று மீன் சொன்னதும், மீனவன் யோசிக்க ஆரம்பித்தான்.
’ எப்படி இருந்தாலும் இந்தச் சின்ன மீன் நமக்கு உபயோகமேயில்லை. அதுக்கு பதிலா மூணு வரங்களை வாங்கிக்கிட்டா அதை வச்சு நிறையப் பொருள் சம்பாதிக்கலாம். நிம்மதியா வாழலாம்’ என்று தீவிரமாகச் சிந்திக்க ஆரம்பித்தான் மீனவன்.
“ நல்லா யோசிச்சு முடிவெடுங்க. என்னைக் கொல்லாமல் விடறதுனால உங்களுக்கு நன்மைகள் அதிகம்” என்று மீன் தன்னுடைய வாதத்தை மீண்டும் எடுத்து வைத்தது.
மீனவன் மனதிற்குள் யோசித்து மீனை விட்டுவிட முடிவு செய்தான். வலையில் இருந்து விடுவித்துத் தண்ணீரில் விட்டான். உயிர் பிழைத்த மீன் அவனுக்கு நன்றி தெரிவித்து விட்டுப் போகும்போது ஓர் எச்சரிக்கை செய்து விட்டுப் போனது.
“ மூன்றே வரங்கள் தான் உனக்குக் கிடைத்திருக்கின்றன. நன்றாக யோசித்துக் கேள். நாம் கேட்கும் எல்லா வரங்களும் சந்தோஷம் தருமா என்பது சந்தேகமே! அதனால் நன்றாக யோசித்து வாய்ப்பை உபயோகப்படுத்திக் கொள்” என்று எச்சரித்து விட்டுப் போனது.
“ அதெல்லாம் எனக்குத் தெரியும். நான் நல்ல புத்திசாலி” என்று பெருமையடித்துக் கொண்ட மீனவன் வீட்டை நோக்கி நடந்தான்.
வலையில் மீன் எதுவும் இல்லாமல் வீட்டை அடைந்த மீனவனைப் பார்த்து அவனுடைய மனைவி கடிந்து கொண்டாள்.
“ நாள் பூரா மீன் பிடிக்க வலை வீசியும் ஒரு மீன் கூடவா உங்களுக்குச் சிக்கவில்லை? ” என்று எரிச்சலுடன் அவனைக் கடிந்து கொண்டாள் அவள். மீனவனோ அமைதியாகத் தன்னுடைய அனுபவத்தைச் சொன்னான். தனக்குக் கிடைத்த சின்ன மீன், மூன்று வரங்கள் தந்ததால் அதைத் தண்ணீரில் விட்டுவிட்டதை அவன் சொன்னதும் மீனவனின் மனைவிக்கு பயங்கரக் கோபம் வந்தது.
“ முட்டாள்தனமான முடிவு இது. மீன் எங்கேயாவது பேசுமா? பேசினாலும் வரம் தரும் அளவுக்கு அதுக்கு சக்தி இருக்குமா? அது என்ன தேவதையா? ” என்று கத்தினாள்.
“ நான் உன்னை நம்ப வைக்கிறேன். இந்த நிமிஷம் உனக்கு என்ன வேணும் சொல்லு? ”
என்று கேட்டான்.
“ வேறென்ன வேணும்? வயிறு நிறையச் சாப்பிட்டு நாளாச்சு. விதவிதமான உணவுப் பண்டங்கள். இனிப்பு, பலகாரங்கள் எல்லாம் தான் “ என்றாள்.
“அப்படியே நடக்கட்டும்” என்று அவன் சொல்ல, ஒரு பெரிய தட்டு நிறைய விதவிதமான, மணம் கமழும் உணவுப் பண்டங்கள் அவர்கள் எதிரே வந்தன. முதலில் மகிழ்ச்சி அடைந்த மீனவனின் மனைவி உடனே வருத்தமடைந்தாள்.
“ நிறையப் பணமும், தங்கமும் கேட்டிருக்கலாம் இல்லையா? ஒரு நல்ல வாய்ப்பை வீணாக்கிட்டீங்களே இப்படி? இந்தப் பலகாரங்களை உங்க வாயைச் சுத்தி நல்லா ஒட்டி வைச்சுக்கங்க” என்று அவள் கூறி முடிப்பதற்குள் அனைத்துப் பலகாரங்களும் மீனவனின் வாயைச் சுற்றி ஒட்டிக்கொண்டு விட்டன. இழுத்து இழுத்துப் பார்த்தும் எடுக்கவே முடியவில்லை.
“ எப்படியாவது இந்த உணவுப்பொருட்களை வாயிலிருந்து எடுக்க முடிந்தால் நல்லது” என்று இரண்டு பேரும் சொல்ல, எல்லாம் உதிர்ந்தன. அப்போது தான் மீனவனுக்கு மீன் சொன்ன எச்சரிக்கை நினைவுக்கு வந்தது. மூன்று வரங்களும் முடிந்தன.
அவசரப்பட்டு வரங்களை வீணாக்கியதை எண்ணி வருந்தி நின்றான்.
வங்கி வேலை, கணித ஆசிரியை அவதாரங்களுக்குப் பிறகு இப்போது எழுத்தாளர். அதுவும் சிறுவர் கதைகள் எழுத மனதிற்குப் பிடிக்கிறது. மாயாஜாலங்கள், மந்திரவாதி கதைகள் எழுத ஆசை. பூஞ்சிட்டு இதழ் மூலமாக உங்களுடன் உரையாடத் தொடர்ந்து வரப் போகிறேன். மகிழ்ச்சியுடன் நன்றி.