காட்டில் ஒரு கிழட்டுப் புலி வசித்து வந்தது. வயதான காரணத்தால் அதனால் சுறுசுறுப்பாக ஓடியாடி இரை தேட முடிவதில்லை. கண்களும் சரியாகத் தெரிவதில்லை அதற்கு.
ஆற்றங்கரையோரமாக அமர்ந்து கொண்டு இரைக்காகக் காத்துக் கொண்டிருந்தது அந்தப் புலி. பசியில் துடித்துக் கொண்டிருந்தது.
அந்தப் பக்கம் ஏழை ஒருவன் நடந்து வந்து கொண்டிருந்தான். பிழைப்பு தேடிக் காட்டு வழியாக நகரத்திற்குச் சென்று கொண்டு இருந்தான்.
புலிக்கு மனிதனைக் கண்டதும் நாவில் எச்சில் ஊறத் தொடங்கியது. அவனை எப்படியாவது ஏமாற்றித் தன்னருகில் வர வைத்துக் கொன்று தின்னத் திட்டம் தீட்டியது.
அங்கே கீழே கிடந்த ஒரு தர்ப்பைப் புல்லை எடுத்து வளைத்துக் கையில் வைத்துக் கொண்டது.
அந்த ஏழையை நோக்கி,
“மனிதா! என்னருகே வா. இந்தப் பொற்காப்பை உனக்குப் பரிசாகத் தர வேண்டும்.” என்று தேன் சிந்தும் குரலில் சொன்னது.
அந்த ஏழை மனிதனால் புலியின் சொற்களை நம்ப முடியவில்லை. புலியின் கையில் இருந்த புல் காய்ந்து இருந்ததால் மஞ்சளாக இருந்தது. தூரத்தில் இருந்து பார்க்கும் போது அவனுக்குப் பொற்காப்பாகவே தெரிந்தது. ஆசை என்ற காமாலை, கண்களை மறைக்க, பார்ப்பதெல்லாம் மஞ்சளாகப் பொன்னாகத் தானே தெரியும்!
“உன்னருகில் நான் எப்படி வருவேன்? புலி மனிதரை அடித்துக் கொன்று விடும் என்று ஜனங்கள் சொல்கிறார்களே! உன்னை நான் எப்படி நம்புவது?” என்று கொஞ்சம் புத்திசாலித் தனமாகப் பேசினான். ஆனாலும் பொன் மேலிருந்த ஆசை அவன் அறிவுக் கண்களை மறைத்தது.
“என்ன இப்படிச் சொல்கிறாய்? நானோ கிழட்டுப் புலி. எனக்கு நகங்களும் பற்களும் வலிமை இழந்து போயின. என்னால் யாரையும் தாக்கிக் கொல்ல முடியாது. நான்
தவம் செய்தல்,
யாகம் செய்தல்,
சத்திய நெறிப்படி வாழ்தல்,
வேதம் ஓதுதல்,
தானம் செய்தல்,
பொறுமை காத்தல்,
உறுதியான தெய்வ நம்பிக்கை ,
ஆசையின்மை
ஆகிய எட்டு தர்மங்களை விடாமல் கைப்பிடித்து ஒழுகுபவன்.
கையில் பொற்காப்புடன் இதைப் பரம ஏழைக்குத்தான் தரவேண்டும் என்று நீண்ட நாட்களாகக் காத்துக் கொண்டிருக்கிறேன். உன்னைப் பார்த்தால் பரம ஏழையாக இருக்கிறாய். உனக்கு தானம் கொடுத்தால்தான் எனக்கு தக்க பலன் கிடைக்கும்.
நோயுள்ளவனுக்குத் தானே மருந்து தர வேண்டும்? அது போல, பரம ஏழைக்குத் தருவதால்தானே எனக்குப் பலன் கிடைக்கும். அருகில் வா. உனக்கு தானம்
அளித்து நான் புண்ணியம் தேடிக் கொள்கிறேன்.” என்றது புலி.
புலியின் வார்த்தைகளில் மயங்கிய ஏழை மனிதன், புலியின் அருகில் சென்றான்.
“ஆற்றில் கை கால்களைச் சுத்தம் செய்து கொண்டு வந்து தானத்தை வாங்கிக் கொள். அது தான் சரியான முறை.” என்று சொல்ல அந்த மனிதன் ஆற்றில் இறங்கினான். கால்கள் சேறும் சகதியுமாக இருந்த இடத்தில் நன்றாக மாட்டிக் கொண்டன. ஓட முடியாமல் நன்றாக சிக்கிக் கொண்டான் அவன்.
புலி தனது இரையை அடித்துக் கொன்று தனது பசியைத் தீர்த்துக் கொண்டது.
கொடியவரை நெருங்குகையில் கவனம் தேவை.
வங்கி வேலை, கணித ஆசிரியை அவதாரங்களுக்குப் பிறகு இப்போது எழுத்தாளர். அதுவும் சிறுவர் கதைகள் எழுத மனதிற்குப் பிடிக்கிறது. மாயாஜாலங்கள், மந்திரவாதி கதைகள் எழுத ஆசை. பூஞ்சிட்டு இதழ் மூலமாக உங்களுடன் உரையாடத் தொடர்ந்து வரப் போகிறேன். மகிழ்ச்சியுடன் நன்றி.