வணக்கம் செல்லங்களே..
உங்களிடம் முதல் முறையாகப் பேசும்போதே, மிகவும் முக்கியமான செய்தி ஒன்று சொல்லப்போகிறேன்..
முக்கியமான செய்தியா? அப்போ நீங்களும் கொரோனாவைப் பற்றி பேசப் போறீங்களா?
அலுத்துக்கொள்ளாதீங்கப்பா! அளவிற்கு மிஞ்சினால் அமுதமும் நஞ்சு என்பதாய், விடுமுறையே கசந்து விட்டது இல்லையா? என்ன செய்வது? மனித குலம் இந்தப பெரும் கொள்ளை நோயோடு போராடிக் கொண்டிருக்கிறதே! ஆனால் நான் அதன் பாதிப்பு விவரங்களின் கணக்கு சொல்லப்போவதில்லை. அந்தக் கொடிய அரக்கனை அழிப்பதற்காக, உங்களைக் குழந்தைகள் படையொன்றில் சேரச் சொல்கிறேன். அத்தோடு அந்தப் போருக்கு, உங்களுக்கு இரண்டு வலிமையான ஆயுதங்களும், இரண்டு கேடயங்களும் தரப் போகிறேன்.
என்ன கொரோனாவை எதிர்த்து, குழந்தைகள் படையா? அதற்கு இரண்டு வலிமையான ஆயுதங்களும், இரண்டு கேடயங்களுமா?
ஆம்.. அதற்கு முன்னால் ஒரு சின்ன வரலாறு சொல்கிறேன். கொரோனா போன்ற கொள்ளை நோய்கள் நமக்குப் புதியதல்ல. இதற்கெல்லாம் பெரிய அண்ணன் ஒருவன் இருந்தான்; அவன் பெயர் பெரியம்மை. இப்போது பெரியம்மை நோயைத் தடுப்பு மருந்து கொண்டு வீழ்த்தி விட்டோம். ஆனால் தடுப்பு மருந்து கண்டுபிடிக்கப்படுவதற்கு முன், மனித குலம் பெரியம்மை நோயோடு, இந்த இரண்டு ஆயுதங்கள் கொண்டு தான் போராடியது.
என்ன அந்த இரண்டு ஆயுதங்கள்?
அன்று பெரியம்மைக்கு மருந்து, தடுப்பு மருந்து இல்லையென்று சொன்னேனே? நோய் வந்து விட்டால் கடவுளே துணை; அப்போ பெரியம்மை ஒரு குடும்பத்திற்கு வராமல் காப்பது எப்படி என்று அன்று இருந்த பெரியவர்கள் கூடி யோசித்தார்கள்; பெரியம்மை எப்படி வருகிறது என்று ஆராய்ந்தார்கள். உடலில் கொப்புளம் உள்ள மனிதன், ஆரோக்கியமான மனிதனிடம் தொடர்பு கொள்ளும்போது பரவுகிறது என்று கவனித்தார்கள். அப்போது அந்த சங்கிலியை நாம் உடைக்க வேண்டும். என்ன செய்யலாம்?
**நோயுள்ள மனிதன் மருத்துவ காரணங்கள் தவிர பிற காரணங்களுக்காக வெளியில் வரக்கூடாது..
** நோயற்ற மனிதன் அத்தியாவசிய காரணங்கள் தவிர பிற காரணங்களுக்காக வெளியே வரக் கூடாது.
அப்படி இருந்தால் இந்த இரு சாராரும் நேருக்கு நேர் வருவது அரிதாகி விடும் இல்லையா? நோய் தொற்றுச் சங்கிலியும் உடைந்துவிடும். அவ்வளவுதான் வேலை முடிந்தது.
ஆனால் சேட்டை பசங்க இருப்பது போல சில சேட்டை பெரியவர்கள் இருப்பார்களே!! அந்த காலத்திலும் இருந்தாங்க! எனக்கு தான் காய்ச்சல் சரியாகி விட்டதே! கொப்பளம் உதிரும் வரை நான் என் வீட்டில் இருக்க வேண்டும் என்று வெளியில் சுற்றினார்கள்..அவர்களை எப்படி கட்டுப்படுத்துவது? அடுத்தவர்களைப் பாதிக்கக் கூடாது என்ற பொதுநல எண்ணம் இல்லையென்றாலும், ‘நான், என் குடும்பம்’ என்ற சுயநலம் இருக்கும் இல்லையா? அவர்களுக்காக நம் பெரியவர்கள், வெளியே வந்தால் ‘சாமி குத்தம்’ என்று சொன்னாங்க. “சாமி உங்க குடும்பத்தின் மேல் கோபமா இருக்கிறாங்க. நீங்க வெளியே போனால் தப்பு; உங்க வீட்டுக்கு யாரும் வந்தால் தப்பு; யாரும் அங்கு நீர் குடிக்கவும் உணவு உண்ணவும் கூடாது”.. என்றெல்லாம் சொன்னார்கள். “கொப்புளம் எல்லாம் விழுந்து, மூன்று நாள் வேப்பிலை, மஞ்சள் கலந்த நீர் ஊற்றியதும் அம்மன் கோபம் வடிந்து விட்டது, இனி வெளியே வரலாம்”, என்றார்கள். அப்படியென்றால் அந்த வைரஸ் அவனோடு அழிந்து விட்டது. இனி அவனால் மற்றவருக்குப் பரவாது.
ஓ.. அப்போ கொரோனாவும், பெரியம்மை போல ஒரு வைரஸ் தொற்று தானே?
கரெக்ட்.. உங்கள் கையில் எவ்வளவு வலிமையான ஆயுதங்கள் இருக்கின்றன என்று புரிகிறதா? வீரர்களாக மாறுங்கள்! உங்கள் வீட்டில், உங்கள் உறவினர் வீட்டில், நண்பர்கள் வீட்டில் என அனைவரிடமும் வலியுறுத்துங்கள்.. தெரிந்த அண்ணா வெளியே சுற்றினால், அவர்களிடமும் சொல்லுங்கள்..
**காய்ச்சல் இருமல் உள்ளவர்களின் குடும்பத்தினர் மருத்துவ காரணங்கள் தவிர பிற காரணங்களுக்காக வெளியே வரக்கூடாது.
**உடல் நலம் உள்ளவர்கள், அத்தியாவசிய காரணங்கள் தவிர பிற காரணங்களுக்காக வெளியே வரக்கூடாது.
அந்த கேடயங்கள் என்ன என்று எங்களுக்குத் தெரியுமே!
சரிதான்.. அப்படி, மருத்துவ காரணங்களுக்காக வெளியே வரும்போதும், அத்தியாவசிய காரணங்களுக்காக வெளியே வரும்போதும் கொரோனாவிலிருந்து நம்மைப் பாதுகாக்க, நமக்கிருக்கும் கேடயங்கள் தான் முககவசமும், சமூக இடைவெளியும். முகக் கவசம் அணியும் போதோ தனி மனித இடைவெளி பின்பற்றும் போதோ, உங்களை யாரேனும் கேலி செய்தால் தயங்காமல் இவை இரண்டும் ஏன் மிகவும் முக்கியம் என்று அவர்களுக்கு எடுத்துச் சொல்லுங்கள்!
வாருங்கள் குட்டிகளே! வாய்வீரர்களாய் மாறுவோம்!! நம் படை திரட்டுவோம்!! அனைவரிடமும் விழிப்புணர்வை ஏற்படுத்துவோம்!! எப்போதும் போல் இப்போதும் நிச்சயம் வெல்வோம்!!
நான்அனிதா செல்வம். தென் தமிழகத்தில் சிறு ஊரில் பள்ளிப்படிப்பு, சென்னையில் கல்லூரிப் படிப்பு, மருத்துவராகப் பணி.. எழுத்துப்பணியில் அனுபவம்: சில சிறுகதைகள், ஒரு குழந்தைகளுக்கான கதைத்தொகுப்பு, இரண்டு நாவல்கள். இவற்றை விட இந்த மின்னிதழின் ஆசிரியர் குழுவில் இருப்பதற்கு எனக்கிருக்கும் பெரிய தகுதியாக நான் கருதுவது, எனது வாசித்தல் பயணம்தான். ஆறு வயதில் எழுத்துக்கூட்டி படிக்கத் தெரிந்த நாள்முதல் வாழ்வின் எல்லா சூழ்நிலையிலும் என் உற்ற துணையாய் இருப்பது புத்தகங்களே.. ‘யான் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம்’ என்ற எண்ணத்தில் விழுந்த வித்துதான் இந்த மின்னிதழ். இது தளிராய் வளர்ந்து விருட்சமாய் மாறி, நம்தமிழ் குழந்தைகள் ஒவ்வொருவரையும் சென்றடைய வேண்டும்.