ஒரு ஞாயிற்றுக்கிழமை சாயங்காலம் தன் வகுப்பு நண்பன் யஸ்வந்தோடு வீட்டில் விளையாடிக் கொண்டிருந்த நான்காம் வகுப்பு படிக்கும் ப்ரியா அழுதுகொண்டே, தன் அம்மாவிடம் வந்து முறையிட்டாள்.

“அம்மா..  யஸ்வந்த் என்னை ஹிந்திலயே திட்றான் மா! திட்டிட்டு என்னப் பாத்துப் பாத்து சிரிக்கிறான் வேற மா!”, என்று விசும்பினாள் ப்ரியா.

மடிக்கணினியில் ஏதோ வேலையாயிருந்த ப்ரியாவின் அம்மா திவ்யா,

“நீ முதல்ல  அழாதே. எதுக்கு உன்ன திட்டினான்? யஸ்வந்தும் நீயும் நல்ல நண்பர்கள் தான?!” என்று தன் மடிக்கணினியைத் தற்போதைக்கு மூடி வைத்து விட்டு ப்ரியாவிடம் கேட்டார் திவ்யா.

ஆமாம்மா. ரெண்டு பேரும் நல்லா தான் பிஸ்னஸ்  விளையாடிட்டு இருந்தோம். அப்போ நடுவுல எதுக்கோ திடீர்ன்னு சண்டை வந்துருச்சா…ரெண்டு பேருக்கும் கோவம் வந்து நான் அவனை ‘எரும’ன்னுத் திட்டினேன். அதுக்கு அவன் பதிலுக்கு ஹிந்தி’ல ஏதோ திட்டிட்டான்மா..!! எனக்கு ஒண்ணுமே புரியல”, என்று மீண்டும் விசும்பினாள் ப்ரியா.

உடனே, “பாத்தியா ப்ரியா, நான் எப்பவும் சொல்றது தான்! நாம நல்லது பண்ணா நமக்கு நல்லது வரும், நாம கெட்டது பண்ணா திரும்ப அதே  தான வரும் ?!” என்று ப்ரியாவிடம் கேட்டார் அம்மா.

மெதுவாக தலை ஆட்டியபடியே அம்மா சொன்னதை ஆமோதித்த ப்ரியாவைச் செல்லமாக அணைத்து அவளது அழுத கண்களைத் துடைத்துவிட்டு ,உள் அறையில் விளையாடிக்கொண்டிருந்த யஸ்வந்த்தை அழைத்தார் அம்மா. ஓடி வந்தான் யஸ்வந்த் .

அவனிடம் திவ்யா, “ப்ரியாவ திட்டினியாப்பா  யஸ்வந்த்?”என்று கேட்கவும்,

தமிழ்ல திட்டினதும் எனக்கும் கோவம் வந்திருச்சு அதான் பதிலுக்கு  நான், அவளுக்குப் புரியாத  ஹிந்தில திட்டினேன்.” என்று ஒரே மூச்சில் சொன்னான்.

யஸ்வந்த் சொன்னதைக் கேட்டு ப்ரியாவைச் செல்லமாக முறைத்த அம்மா பின் இருவரையும் தன் அருகில் சேர்த்துக்கொண்டு,

“முதல்ல உங்க கிட்ட ஒன்னு கேக்கப் போறேன். உங்க ரெண்டு பேர் முன்னாடியும் ப்ரெஷான  மாம்பழம் ஒரு தட்டுலயும், இன்னொரு தட்டுல கெட்டுப்போன மாம்பழத்தையும் கொடுத்தா எதை எடுத்து சாப்பிடணும்ன்னு நினைப்பீங்க ?” என்றுக் கேட்டார்.

Mango

ஒரு நொடிகூட தாமதிக்காமல் இருவரும்,

“பிரெஷ் மாம்பழம் தான் எடுப்போம்” என்றார்கள்.

“கரெக்ட். உங்கள மாதிரியே நானும் அதைத் தான் செய்வேன், சரி இப்போ ரெண்டு பேரும் ரொம்ப கோவமா இருக்கீங்கன்னு வெச்சுப்போம். இப்போ எந்த மாம்பழம் சாப்பிடணும்ன்னு நினைப்பீங்க ?”

என்று அம்மா கேட்கவும், மறுபடியும் இருவரும் கோரஸாக ,

 “அதே பிரெஷ் மாம்பழம் தான் எடுப்போம்..” என்று அம்மா எதற்காக இப்படிக் கேட்கிறார் எனத் தெரியாமல் இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்துக்கொண்டு திருதிருவென முழித்தார்கள். அவர்கள் முழிப்பதைப் பார்த்துத் தாமதிக்காமல் தான் சொல்ல வந்ததைத் தொடர்ந்தார் அம்மா.

குட்டீஸ்..நாம பயன்படுத்துற எல்லா வார்த்தைகளும் இந்த நல்ல மாம்பழம் மாதிரி தான். சந்தோஷமோ, கோவமோ எந்த மனநிலைல  நாம இருந்தாலும், சாப்பிட்றதுக்கு எப்படி நல்ல மாம்பழத்த எடுக்கிறமோ அதே மாதிரி நமக்குள்ள எவ்வளவு சந்தோஷம்னாலும் சரி, எவ்வளவு பிரச்சினைகள்  வந்தாலும் சரி அவரவர்   மொழில இருக்கிற  நல்ல வார்த்தைகள் பேசி நம்ம எண்ணங்களைப் பகிர்ந்துக்கறது தான் சரி. அது தான் நல்ல பழக்கமும் கூட! நல்ல வார்த்தைகள் இருக்கும் போது கோவத்துல பயன்படுத்துற  வார்த்தைகள், பூச்சி மாம்பழம் சாப்பிட்ட மாதிரி.” என்று அம்மா சொல்லி முடிக்கவும்,

“உவ்வே!!! பூச்சி மாம்பழம் எனக்கு வேணாம்‘மா!!” என்று ப்ரியா தன் முகத்தைச் சுளித்துக்கொள்வதைப் பார்த்து யஸ்வந்த்தும் அம்மாவும் சிரித்தார்கள்.

பிறகு ப்ரியா  யஸ்வந்த்திடம், “ சாரிடா  யஸ், விளையாடும் போது இனிமே கோவம்  வந்தா திட்ட மாட்டேன்.. !”, என்றதும்  யஸ்வந்த்தும் சிரித்துக்கொண்டே

“அப்போ  நானும் திட்டமாட்டேன் , பிரெண்ட்ஸ் ?” என்று கேட்கவும்,

“எப்பவுமே!” என்று உற்சாகமானாள் ப்ரியா.

இருவரையும்  பார்த்து  வாஞ்சையாக சிரித்த அம்மா இருவரிடமும்,

சிறப்பு!! சரி, இப்போ ரெண்டு பேரும் நான் சொல்றத கேளுங்க. ஹிந்தியோ தமிழோ இங்கிலிஷோ , எந்த மொழியானாலும் சரி ,அதை ஒருத்தர ஒருத்தர் திட்டிக்க பயன்படுத்தக்கூடாது . ஒவ்வொரு ஊரிலும் ஒவ்வொரு மொழி பேசுறாங்க.ஒவ்வொரு மொழியையும் நாம கத்துக்கிட்டா அந்த ஊருக்கு நாம டூர் போனாலோ ,இல்ல அந்த ஊர்க்காரங்க நம்ம ஊருக்குவந்தாலோ, நாம அவங்களுக்கு உதவறது எளிமையா இருக்கும் . நமக்கு எவ்வளவு பிரெண்ட்ஸ் கிடைப்பாங்க தெரியுமா ?,”! என்று சொல்லிவிட்டு ப்ரியாவைப் பார்த்து,

ப்ரியாக்குட்டி, நீ சின்னச்சின்ன எளிமையான வார்த்தைகளை யஸ்வந்த் கிட்ட கத்துக்கணும்”,

யஸ்வந்த்திடம், “யஸ்வந்த், நீயும் ப்ரியா கிட்ட இருந்து முக்கியமான தமிழ் வார்த்தைகளோட அர்த்தத்தைப் புரிஞ்சுக்கணும்” என்று சொல்லவும்,

அப்போ   நானும்  ரெண்டு பேருக்கும் மலையாளம் கத்துத்தருவேன்” என்று பின்னால் இருந்து ஒரு குரல் கேட்கவும் மூன்று பேரும் திரும்பிப் பார்த்தார்கள்.

எதிர்வீட்டு நரேஷ் சிரித்துக்கொண்டே, “சரி தானே ஆண்ட்டி?  ” என்றான்.

ரொம்ப சரி நரேஷ்” என்ற அம்மா, குழந்தைகள் மூவரும் மீண்டும் உற்சாகமாக விளையாடச் செல்வதைப் பார்த்துக்கொண்டே, மன நிறைவோடு தன் மடிக்கணியை மீண்டும் திறந்தார்.

நண்பர்களே, மொழிகள் நம் எண்ணங்களை வெளிப்படுத்தவே தவிர மற்றவர் உணர்வுகளை காயப்படுத்தவோ நகைக்கவோ அல்ல. மேலும், எப்போதும் நாம் ஒருவரோடோ அல்லது ஒன்றுக்கு மேற்பட்டவரோடோ, குழுவிலோ பேசும் பொழுது அனைவருக்கும் தெரிந்த பொதுவான மொழியை பயன்படுத்துவதே நாகரிகம். ஒரு மொழி தெரியாமல் இருப்பதற்கான காரணம் அந்த மொழியின் தற்காலிக  தேவையின்மையே தவிர என்றைக்கும் அது அறிவீனம் அல்ல!

தாய் மொழி காப்போம்!! பிற மொழி மதிப்போம்!!

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
Subscribe
Notify of
guest
4 கருத்துகள்
Newest
Oldest Most Voted
Inline Feedbacks
View all comments