கதிர், கயல், முத்து, மலர், வினோத், ஆகிய அனைவரும் ஒரே தெருவில் குடியிருக்கும் குழந்தைகள். 

கதிரும், மலரும் மூன்றாம் வகுப்பு மாணவர்கள்; மற்ற மூவரும் ஐந்தாம் வகுப்பு..

ஒவ்வொரு ஞாயிறும், அடுத்தத் தெருவிலிருந்த பூங்காவில் எல்லோரும் சேர்ந்து சறுக்குமரம் விளையாடுவார்கள்; ஊஞ்சலில்  ஆடுவார்கள்; தொலைக்காட்சியில் தாங்கள் பார்த்த கார்ட்டூன் குறித்துப் பேசுவார்கள். 

அந்தப் பூங்காவிற்குத் தினமும், தேன் உண்ண வந்தக் குருவிக்கூட்டத்தில், பூஞ்சிட்டு ஒன்றும் இருந்தது. 

சில நாட்களில், அந்தப் பூஞ்சிட்டு அந்தக் குழந்தைகளின் நண்பனாக ஆகிவிட்டது.  ஒவ்வொரு வாரமும், சிட்டுவிடம் கதை கேட்பது அவர்களுக்குப் பிடித்த பொழுதுபோக்கு.

அன்றும் அப்படித்தான். 

“சிட்டு! சிட்டு!  போரடிக்குது! சீக்கிரம் கதை சொல்லு!” என்று நச்சரித்தாள் கயல். 

“இன்னிக்கு, என்ன கதை வேணும்?” என்று கேட்டது சிட்டு.

“டைனோசர் கதை வேணும்” என்று எல்லோருமே, ஒரே குரலில் கத்தினர்.   சிட்டுவிடம் அதைக் கேட்க வேண்டும் என்று ஏற்கெனவே, அவர்கள் முடிவு செய்திருந்தனர். 

“சரி சரி, சொல்றேன்.  எல்லாரும் இப்பிடி வந்து, வட்டமா உட்காருங்க”.

அடுத்த ஐந்து நிமிடங்களில், எல்லாக் குழந்தைகளும், வட்டமாக அமர்ந்து கொண்டு, “ம். சொல்லு சீக்கிரம்!” என்றனர்.

அங்கிருந்த மேடை நடுவில், சிட்டு நின்று கொண்டு, “இப்ப நிலத்துல இருக்குற மிருகத்துலேயே, ரொம்பப் பெரிசு எதுன்னு, சொல்லுங்க பார்ப்போம்?,” என்று கேட்டது…

“ஃபூ! இது தெரியாதா? யானை! இது ஒரு கேள்வின்னு, எங்கக்கிட்ட கேட்க வந்துட்ட!” என்று சொன்னான், வினோத்.

“அந்த யானையை விட, ரொம்ப ரொம்பப் பெரிய மிருகம் ஒன்னு, இலட்சக்கணக்கான ஆண்டுக்கு முன்னாடி, நம்ம பூமியில இருந்துச்சி; அது பேரு தான் டைனோசர்!” என்றது, சிட்டு.

WhatsApp Image 2020 07 12 at 6.57.18 PM

“அது இரத்தக் காட்டேரி மாதிரி, பயங்கரமா இருக்குமா?” என்று கேட்டான் சுட்டிப் பையன் கதிர்.

“நீ  அந்த இரத்தக் காட்டேரியைப் பார்த்திருக்கியா?” என்று சிட்டு கேட்டது.

“இல்ல, கதையில தான் படிச்சிருக்கேன்; கண்ணு முழியெல்லாம் பெருசு பெருசா, பல்லெல்லாம் கோரமா, நாக்கை வெளியில நீட்டிக்கிட்டு இருக்கும்! அதோட படத்தைப் பார்க்கவே, ரொம்பப் பயமாயிருக்கும்!” என்று நடுங்கிக் கொண்டே சொன்னான் கதிர்.

“அது மனுஷங்களோட கழுத்தைக் கடிச்சி, இரத்தத்தை உறிஞ்சிக் குடிக்குமாம்! கதிர் சொல்லியிருக்கான்!” என்றாள் குட்டிப்பெண் மலர்.

“அதெல்லாம் கட்டுக்கதை.  சும்மா பொழுது போக்குக்காக, கற்பனை கலந்து, சொல்ற கதையெல்லாத்தையும், உண்மைன்னு நம்பக் கூடாது” என்றது, சிட்டு.

“இப்ப நீயும், பொழுது போறதுக்காக கதை தானே சொல்ற? இதுவும் கற்பனை தானா? உண்மையில்லையா?” என்று கேட்டான் கதிர்.

“இது வெறும் கற்பனையில்லை!டைனோசர்ங்கிற மிருகம், உண்மையாவே ரொம்ப  காலத்துக்கு முன்னாடி, பூமியில சில காலம்  வாழ்ந்துட்டு, அப்புறமா அழிஞ்சி போயிடுச்சி” என்றது சிட்டு. 

“நீ அதை நேர்ல பார்த்திருக்கியா? அது உண்மையா இருந்துச்சின்னு நாங்க எப்புடி நம்புறது?” என்று மீண்டும் கதிர் கேட்டான்.

“அதோட எலும்புக் கூடெல்லாம், எக்கச்சக்கமாக் கெடைச்சிருக்கு.  அருங்காட்சியகத்துக்குப் போனீங்கன்னா, அதைப் பார்க்கலாம்; மண்ணுக்கு அடியில, புதைஞ்சி கெடந்த புதைபடிவத்தை வைச்சி, அது பத்தி நெறையா அறிவியல் ஆராய்ச்சி பண்ணியிருக்காங்க.  அவங்க சொன்ன ஆராய்ச்சி முடிவை அடிப்படையா வைச்சித் தான், நான் இப்ப உங்களுக்குச் சொல்லிக்கிட்டு இருக்கேன்” என்றது சிட்டு.

“ஓகே.. ‘புதைபடிவம்’ னா என்ன?” என்று முத்து கேட்டான்.

“கோடிக்கணக்கான வருஷம், மண்ணுக்கடியில பொதைஞ்சு கெடக்கிற மரம், செடி, மிருகமெல்லாம், அப்படியே இறுகி, கருங்கல் பாறை மாதிரி ஆயிடும்;  அதைத் தான் புதைபடிவம்னு சொல்றாங்க.  ஆங்கிலத்துல அதை ‘ஃபாசில்’ (FOSSIL) ன்னு சொல்வாங்க; அது மூலமாத் தான் நாம பூமியோட பழைய காலத்தைப் பத்தித் தெரிஞ்சிக்க முடியுது” என்றது சிட்டு.

“சரி. நீ மேல சொல்லு.  சொல்ல விடாம, யாரும் குறுக்குக் கேள்வியெல்லாம் கேட்காதீங்கடா!” என்று அதட்டினாள் கயல். டைனோசரைப் பற்றித் தொடர்ச்சியாகக் கேட்க முடியாமல் பண்ணுகிறார்களே என அவளுக்குக் கோபம்.

“பாம்பு, முதலை, பல்லி மாதிரி தான், டைனோசரும், ஊர்வன இனத்தைச் சேர்ந்தது. அது உடம்புலேயும், பாம்பு, மாதிரி செதில் செதிலா இருக்கும்;.  அதுங்க மாதிரியே முட்டையிட்டுக் குஞ்சு பொரிக்கும்” என்றது சிட்டு.

“அப்பிடியா? ஆச்சரியமா இருக்கே?  இம்மாம் பெரிய மிருகம், முட்டையிட்டுக் குஞ்சு பொரிக்குமா? குட்டி போடாதா?” என்றான் பாபு.

“ம்கூம். யானை மாதிரி குட்டி போடாது; முதலை மாதிரி முட்டையிட்டுத் தான் குஞ்சு பொரிக்கும்.”

“பாபு! ஆரம்பிச்சிட்டியா? கொஞ்ச நேரம் வாயை மூடிக்கிட்டுக் கம்முன்னு இருக்க மாட்டியா? நீ மேல சொல்லு சிட்டு” என்றாள் கயல்.

“ம். சரி”என்று தலையாட்டிவிட்டு, பாபு இரண்டு கைகளாலும் வாயைப் பொத்திக் கொண்டான்.

“பாம்பு, பல்லி, முதலைக்குக் கால், எப்பிடியிருக்கும்னு,  பார்த்திருக்கீங்களா?  இதுவரைக்கும் பார்க்கலேன்னா, உங்க வீட்ல இருக்குற பல்லியை நல்லாக் கவனிச்சிப் பாருங்க.  உடம்போட பக்கவாட்டுல கால் ஒட்டிக்கிட்டு இருக்கும்.  அதனால அதுங்க தரையிலேயோ, சுவத்துலேயோ, உடம்பால ஊர்ந்துக்கிட்டுத் தான் போகும்.  காலை ஊன்றி, உடம்பைத் தூக்கிக்கிட்டு, நிற்கவோ, நடக்கவோ முடியாது.

ஆனா டைனோசரோட உடம்பு, பல்லி, முதலை மாதிரி இருந்தாலும், காலு உடம்புக்கு அடியில, தனியா இருக்கும்.  அதனால அதால, நாலு காலால நடக்கவும் முடியும்; மனுஷன் மாதிரி, ரெண்டு காலை ஊன்றி நேரா நிக்கவும் முடியும்” என்றது சிட்டு.. 

“அது மனுசங்களைக் கொன்னு தின்னும் தானே?” என்று கண்களைச் சுருக்கிப் பயத்துடன் கேட்டாள் மலர்.

“இவ வேற! எப்பப் பார்த்தாலும், இரத்தத்தைக் குடிக்கிறது, கொன்னு திங்கறதுன்னு இதப் பத்தியே பேசிக்கிட்டிருக்கா!” என்று அலுத்துக் கொண்டான் முத்து.

“டைனோசர் காலத்துல, மனுசனே இல்லியே! அப்புறம் அதால எப்பிடிடா மனுசனைக் கொல்ல முடியும்?” என்றாள் கயல்.

“அட ஆமாம்ல.  அது எனக்குத் தோணவே இல்ல,” என்று அசடு வழிந்தான் வினோத்.

“கயல் சொன்னது சரி தான்;  டைனோசர் வாழ்ந்த காலத்துல, மனித இனம், பூமியில தோன்றவே இல்லை,” என்றது சிட்டு. 

“உலகத்துலேயே ரொம்ப ரொம்பப் பெரிய டைனோசர் எது, சிட்டு?” என்று கேட்டான் பாபு.

“இதுவரை கண்டுபிடிச்சிருக்கிறதுலேயே, ரொம்பப் பெரிய டைனோசர் பேரு   அர்ஜெண்டினோசரஸ் (Argentinosaurus) அர்ஜெண்டினாவில இதைக்  கண்டிபிடிச்சிருக்கிறதால, இதுக்கு, இந்தப் பேரு.  இதோட புதைபடிவம் முழுசாக் கிடைக்கலை.  கிடைச்ச உதிரி பாகங்களை வைச்சி, ஆராய்ச்சி பண்ணி, இது 120 அடி நீளம், 70 அடி உயரம் இருந்திருக்கலாம்னு சொல்றாங்க”.  

“அப்படீன்னா, அது ரெண்டு மாடி, உயரம் இருக்குமா சிட்டு?” என்றான் பாபு

“ரெண்டு மாடியா!?  நல்லாக் கேட்டே போ! ஆறு மாடி உயரம் பா! நீங்க பள்ளிக்கூடத்துக்குப் பேருந்துல தானே, தெனமும் போறீங்க? அது மாதிரி, மூணு பேருந்தைச் சேர்த்து நிறுத்தி வைச்சா, எவ்ளோ நீட்டு இருக்குமோ, அவ்ளோ நீட்டு!!!” என்றது சிட்டு     

“ஏ அம்மா! ஆறு மாடியா? என்னா உயரம்?” என்று வாயைப் பிளந்தாள் கயல்.

பக்கத்தில் தெரிந்த ஒரு மாடிக் கட்டிடத்தைப் பார்த்து, அதிலிருந்து ஐந்து  மாடி உயரத்தைக் கூட்டினால், எவ்வளவு இருக்கும் என்று கற்பனை பண்ணி அனைவரும் வியப்பில் மூழ்கினர்..

“ஏ அப்பா! மூனு ஸ்கூல் பஸ்ஸை, சேர்த்து வைக்கிற அளவுக்கு நீளமா? உண்மையிலேயே இராட்சத மிருகம் தான் டைனோசர்!” என்று தன் வியப்பை வெளிப்படுத்தினான் பாபு.

“டைனோசர்ங்கிற சொல்லுக்கு, இரண்டு கிரேக்க சொல்லை இணைச்சு,  ‘பயங்கரமான ராட்சதப் பல்லி’ன்னு, அர்த்தம் சொல்றாங்க,” என்றது சிட்டு..

“டைனோசர் அடை காத்து, குஞ்சு பொரிக்க, ஒரு தடவைக்கு, எத்தினி முட்டை போடும் சிட்டு?”  என்றான், அதுவரை அமைதியாக இருந்த கதிர்.

’20 லேர்ந்து 35 வரை முட்டையிட்டு, அடைகாக்கிற, வெவ்வேறு வகையான டைனோசர் இருந்திருக்குது” என்று பதில் சொன்னது சிட்டு.

“அது என்ன சாப்பிடும்?” என்று கேட்டான் வினோத்.

“பொழுது போயி இருட்ட ஆரம்பிச்சிடுச்சி;  நான் கூட்டுக்குப் போயாகணும்;  என்னைக் காணோம்னு, அம்மா கவலைப்படுவாங்க; உன் கேள்விக்கு, அடுத்த தடவை நாம சந்திக்கிறப்போ பதில் சொல்றேன். 

டைனோசர் சம்பந்தமா இன்னும் என்னென்ன சந்தேகம் வருதோ எல்லாத்தையும் யோசிச்சி வையுங்க.. வரேன்.  டாட்டா, பை பை, சீ யூ” என்று சொல்லிவிட்டுப் பறந்தது சிட்டு. சிட்டுவுக்கு டாட்டா காட்டிவிட்டுக் குழந்தைகளும், அவரவர் வீட்டுக்குக் கிளம்பினார்கள்.

என்ன குழந்தைகளே! சிட்டு சொன்ன டைனோசர் கதை நல்லாயிருந்துச்சா?  உங்களுக்கும் டைனோசர் பத்தி, ஏதாவது கேட்கணும்னு தோணினா, கேள்வியை எங்களுக்கு எழுதியனுப்புங்க..
அடுத்த மாசம் சிட்டு, உங்க எல்லாக் கேள்விகளுக்கும், பதில் சொல்லும்.
உங்கப் பேரு, முகவரி, என்ன படிக்கிறீங்க, அப்படீங்கிற எல்லா விபரத்தையும் மறக்காம எழுதியனுப்புங்க;
உங்கக் கேள்வியை அனுப்ப வேண்டிய மெயில் முகவரி:-
keechkeech@poonchittu.com
What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
Subscribe
Notify of
guest
0 கருத்துகள்
Inline Feedbacks
View all comments