விளையாட்டை முடித்துக் கொண்டு அண்ணா அக்கா உடன் சந்தோசமாக வீட்டிற்கு வந்த ஸ்ருதி, பெரியம்மாவை கட்டிக்கொண்டு, “பெரியம்மா இங்கே அண்ணா, அக்கா எல்லாரும் என்கூட ஜாலியா விளையாடறாங்க. எல்லாரும் நல்லா பழகுவாங்க, எனக்கு இங்கே ரொம்ப பிடிச்சிருக்கு பெரியம்மா, எல்லாருமே விளையாட வந்தாங்க” என்று கண்களில் ஆர்வம் மின்ன சொல்லிக்கொண்டிருந்தாள்.
“அப்படியா? ஸ்ருதிகுட்டி, இதுக்குப் போய் நீ காலைல அவ்ளோ வருத்தப்பட்டு ஊருக்கு போறேன்னு சொன்ன, உனக்கு என்ன தேவையோ அதை நீதான் கேட்டு வாங்கணும். உனக்கு விளையாட பிடிச்சிருக்கா? உடனே அதற்கான முயற்சியை நீதான் பண்ணனும், அதை விட்டுட்டு நான் ஊருக்கு போறேன் பெரியம்மா அப்படின்னு சொல்லக் கூடாதுமா. அப்படி சொன்னால் கேட்பவர் மனது கஷ்டப்படும் இல்லையா?” என்று சொல்லவும்.
“சரி பெரியம்மா, இனிமே நான் அப்படியெல்லாம் சொல்ல மாட்டேன். நான் இங்கேயே இருந்து ஜாலியா அண்ணா அக்கா கூட விளையாடுவேன், இன்னும் நிறைய விளையாட்டு எல்லாம் சொல்லித்தரச் சொன்னாங்க. நான் அவங்களுக்கு எல்லா விளையாட்டையும் சொல்லித்தரப் போகிறேன்” என்று சந்தோஷத்துடன் சொன்னாள்.
“உனக்குத் தெரிஞ்ச விளையாட்டை எல்லாம் அவங்களுக்கும் சொல்லிக் கொடு, இப்ப நீயும் போய் குளிச்சிட்டு வர்றியா?”என்றாள் பிரகதி. “எனக்கு பசிக்குது பெரிமா, நான் போய் சீக்கிரமா குளிச்சிட்டு வரேன்” என்று சொல்லிவிட்டு ஓடினாள் ஸ்ருதி.
தன் குழந்தைகளைப் பார்க்க உள்ளே சென்ற பிரகதி, அவர்கள் போனில் விளையாடிக் கொண்டிருக்கவும், “ஸ்ருதிகுட்டி இங்கிருக்கும் வரையில், நீங்க அவ கூட விளையாடுங்க, இந்த போனில் விளையாட வேண்டாம்” என்ற அவர்களிடம் இருந்து போனை வாங்கி கொண்டாள். “இன்னைக்கு மட்டும் விளையாடறோம் அம்மா” என்று கேட்டார்கள் அபிநவ்வும் அபிநயாவும்.
” சரி நான் சொல்றதுக்கு பதில் சொல்லுங்க, இப்ப ஸ்ருதி குட்டி உங்கள கூட்டிட்டு போய் விளையாடியது உங்களுக்கு புடிச்சு இருந்துச்சா? இல்லையா?” என்று கேட்கவும். இருவரும் ஒரே குரலில், “எங்களுக்கு பிடித்து இருந்துச்சும்மா”/ என்று சொன்னார்கள். “அப்ப ஸ்ருதி குட்டி குட்டியுடன் விளையாடுங்க, இன்னும் வேறு ஏதாவது விளையாட்டு சொல்லிக் கொடுப்பாள். உங்களோடு சேர்ந்து விளையாடின மாதிரி இருக்கும்” என்று சொல்லவும், போனில் விளையாட ஆசையிருந்தாலும், அம்மா சொல்லை கேட்க வேண்டும் என்று நினைத்தார்கள்.
“சரி நான் போய் டிபன் செய்கிறேன் ஸாருதிகுட்டி பசிக்குதுன்னு சொன்னாள். நீங்க ரெண்டு பேரும் குளிச்சிட்டு வாங்க” என்று சொல்லிவிட்டு சமையலறைக்குச் சென்றாள் பிரகதி. மூன்று பேரும் சாப்பிட வரும் போது, “இன்னும் கொஞ்ச நேரம் வெயிட் பண்ணுங்க டா குட்டிகளா, இதோ செஞ்சு முடிச்சுட்டு கூப்பிடுறேன்” என்று குரல் கொடுக்கவும்.
” சரி நாம அது வரை கார்ட்ரூன் பார்ப்போம்” என்று சொன்னான் அபினவ். “இல்லை வேண்டாம். ஸ்ருதி நம்ம மூனு பேரும் விளையாடுற மாதிரி ஏதாவது விளையாட்டு இருந்தால் சொல்லிக் கொடேன், இங்கேயே விளையாடலாம்” என்றாள் அபிநயா.
“பச்சைகுதிரை விளையாடலாமா?, ஆனால் இதுக்கு நிறைப் பேர் இருந்தாள் விளையாட ஜாலியாக இருக்கும்” என்றாள் ஸ்ருதி. “சரி இப்ப நம்ம மூன்று பேரும் விளையாண்டு பார்க்கலாம். இதே விளையாட்டை நாளைக்கு நாம க்ரவுண்டில், எல்லாருடனும் விளையாடலாம். எங்களுக்கும் இந்த விளையாட்டு தெரிந்தால், நீ ஒருத்தி மட்டும் சிரமப்பட்டு அவங்களுக்குச் சொல்லிக் கொடுக்க வேண்டியதில்லை. நாங்களும் உனக்குத் துணையாக எங்களுக்கு தெரிந்ததைச் சொல்லிக் கொடுப்போம். உனக்கும் ஈசியா இருக்கும்” என்றாள் அபிநயா.
“சரி” என்ற ஸ்ருதி, “இந்த விளையாட்டில் டாஸ் போட்டு பார்த்து அவுட் ஆனவங்க, முதலில் முட்டிங்கால் போட வேண்டும். மற்றவர்கள் வரிசையில் நின்று, ஒவ்வொருவராக முட்டிங்கால் போட்டிருப்பவர் முதுகில் இரண்டு கையையும் வைத்து அழுத்தி, அப்படியே அந்த பக்கம் குதிக்க வேண்டும். கால்கள் இரண்டும் இரண்டு பக்கமும் விரிந்து வரவேண்டும். அப்படி குதிக்கும் போது கீழே விழக்கூடாது, விழுந்தால் அவங்க அவுட்.
இது மாதிரி எல்லாரும் தாண்டனும், அடுத்த ரவுண்டில், இரண்டு கையும் பாதத்தின் பெருவிரலை பிடித்தபடி குனிய வேண்டும். இப்பொழுதும் அதே மாதிரி தாண்ட வேண்டும். அடுத்த ரவுண்ட் குனிந்திருப்பவர் இரண்டு கைகளையும் முழங்காலில் வைத்துக் கொள்ள வேண்டும். இப்பொழுது உயரம் கொஞ்சம் கூடுதலாக இருக்கும். இப்பவும் அதே மாதிரி கீழே விழாமல் குதிக்க வேண்டும். அடுத்த ரவுண்டில் இன்னும் கொஞ்சம் கையை, முழங்காலுக்கு மேலே உயர்த்தி வைத்துக் கொள்ள வேண்டும்.
இப்ப தாண்டுவது கொஞ்சம் கஷ்டம் தான், நாம டாஸ்க் போட்டுப் பார்த்து விளையாடலாமா?” என்று கேட்டாள் ஸ்ருதி. இருவரும் சரி என்று சொன்னார்கள். டாஸ்க் போட்டதில் அபிநவ் அவுட் ஆனதால், அவன் குனிந்து நின்றான். முதலில் ஸ்ருதியை தாண்டச் சொன்னாள் அபிநயா. ஸ்ருதி கொஞ்ச தூரம் தள்ளிப் போய் நின்று, அங்கிருந்து ஓடிவந்து அசால்டாக தாண்டினாள்.
அபியா ஒடிவந்து தாண்டும் போது, அவளும் விழுந்து அவனையும் விழ வைத்தாள். அபிநவ் எழுந்து, “ஸ்ருதி தாண்டும் போது தாண்டினதே தெரியாமல் ஈசியா செய்தா, நீ ஏன் என்னைப் பிடித்து தள்ளி விட்டாய் இப்ப நீ தான் அவுட்” என்றான். அபிநயா இப்ப குனிந்து நிற்கவும், ஸ்ருதி முதலில் செய்து காட்டினாள். அபிநவ் ஸ்ருதியப் போலவே ஈசியாக தாண்டினான். “அப்போ எனக்கு மட்டும் தான் வரவில்லை” என்று அபிநயா வருத்தப்பட்டாள்.
இருவரும் சேர்ந்து அவளுக்கு நிறைய முறை சொல்லிக் கொடுக்கவும், நன்றாக கற்றுக் கொண்டாள். “ஸ்ருதிகுட்டி வாங்க சாப்பிடலாம்” என்று பெரியமாவின் சத்தத்தைக் கேட்டவர்கள், சாப்பிடச் சென்றார்கள். அடுத்த நாள் மாலையில் க்ரௌண்டில், அனைவருடனும் விளையாடும் போது, ஸ்ருதிக் உதவியாகச் சொல்லித் தந்த அபிநவ்வும் அபிநயாவும், வேகமாகத் தாண்டுவதைப் பார்த்த அவர்களுடைய நண்பர்களுக்கும், அதே மாதிரி தாண்ட வேண்டும் என்ற ஆசை வந்தது.
அடுத்த ஒரு வாரம் வேறு எதுவும் விளையாடாமல் இதையே விளையாண்டார்கள். இப்பொழுது அவங்க நண்பர் குழுவில் அனைவருக்கும் பச்சைகுதிரை தாண்டத் தெரியும். “குழந்தைகளா? உங்களுக்கு பச்சைகுதிரை தாண்டத் தெரியுமா?, யார் யாருக்குத் தெரியும்” என்று கமெண்டில் சொல்லுங்க. தெரியாதவங்க விளையாண்டு பார்த்து கமெண்டில் சொல்லுங்க செல்லக் குழந்தைகளா.