அடுத்த நாள் காலையில் காட்டில் இருந்து கிளம்பிய துருவன் தலைநகரத்தை அடைந்தான். தலைநகரைச் சுற்றி பிரம்மாண்டமான கோட்டையும், அதைச் சுற்றியிருந்த அகழியும் அவனை வரவேற்றன.

அகழி என்றால் கோட்டையைச் சுற்றித் தண்ணீரைத் தேக்கி அதில் முதலைகளை விட்டிருப்பார்கள். அந்தக் காலத்தில் கோட்டைகளின் பாதுகாப்பிற்காக அமைக்கப் படுவது. எதிரி நாட்டினர் படையெடுத்து வரும்போது நீரில் குதித்து நீந்தி வர முயற்சி செய்தால், முதலைகளுக்கு இரையாக வேண்டியது தான். அகழியைக் கடக்கப் பாலம் பொருத்தப் பட்டிருக்கும். தேவைப் படும் போது உபயோகிப்பார்கள். தேவையில்லை என்றால் பாலத்தை அகற்றி விடுவார்கள்.

காலைப்பொழுது என்பதால் அகழியின் மீது பாலம் இருந்தது. அதன் வழியாக அகழியைக் கடந்து கோட்டைக் கதவுகளின் அருகே சென்றான்.ஆயுதம் தாங்கிய காவல் வீரர்கள்,

“சிறுவா, யார் நீ? தலைநகரத்தில் யாரைச் சந்திக்க வேண்டும்? ஊருக்குப் புதிதாக இருக்கிறாயே?” என்று துருவனிடம் கேட்டார்கள்.

“நான் புதுவயல் கிராமத்தைச் சேர்ந்தவன். என் பெயர் துருவன். எனக்கு அரண்மனைக்குச் சென்று அரசரைச் சந்திக்க வேண்டும்”

என்று துருவன் கூறக் காவலர்கள் துருவனை ஆச்சர்யத்துடன் பார்த்தார்கள்

“இந்தச் சிறுவனுக்கு அரசரிடம் என்ன வேலை இருக்கும்? ” என்று யோசித்துக் கொண்டே அவனைத் தலைநகரத்துக்குள் நுழைய அனுமதித்தார்கள்.

அரண்மனையை அடைந்து வாயிற்காவலர்களிடம் துருவன் தான் அரசரைச் சந்திக்க விரும்புவதைச் சொன்னதும், அவர்களும் மனதிற்குள் வியந்து கொண்டே அரண்மனையின் உள்ளே அவனை அனுமதித்தார்கள்.

அரசவையில் அரசர் அரியணையில் வீற்றிருக்க, அங்கு முதன்மந்திரி, சேனாதிபதி மற்றும் முக்கியமான அரசாங்க அலுவலர்கள் அவரைச் சூழ்ந்து வீற்றிருந்தனர். அரசரைச் சந்தித்துத் தங்களுடைய கோரிக்கைகளைச் சொல்லி, உதவி கேட்க வந்திருந்த பொதுமக்கள்  வரிசையில் ஒவ்வொருவராகச் சென்று அரசரிடம் தங்களது பிரச்சினைகளை முறையிட்டார்கள். அரசரும் மக்களிடம் அன்பாகப் பேசி, அவர்களுக்குத் தேவையான உதவிகளை அளிக்கத் தன்னுடைய அதிகாரிகளிடம் உத்தரவு அளித்தார்.

துருவனின் முறை வந்தது. அரசரை வணங்கினான்.

” நாடாளும் அரசருக்கு இந்த துருவனின் வணக்கம். நான் புதுவயல் கிராமத்தில் இருந்து வருகிறேன். மலைக்கோட்டை மாயாவி பற்றிக் கேள்விப்பட்டேன். நான் மலைக்கோட்டை சென்று, அந்த மாயாவியிடம் இருந்து இளவரசியைக் காப்பாற்றி மீட்டு வர முயற்சி செய்யப் போகிறேன். போவதற்கு முன்னால் உங்களைச் சந்தித்து உங்களுடைய ஆசிகளைப் பெற்றுச் செல்வதற்காக வந்திருக்கிறேன்” என்று சொல்ல, அரசவையில் இருந்த அனைவரும் வாயடைத்துப் போனார்கள்.

அதிர்ச்சியுடன் சிறுவனின் முகத்தைப் பார்த்தார் அரசர்.

“பால் வடியும் முகம் கொண்ட இந்தச் சிறுவன் மாயாவியை எதிர்த்துப் போராடத் துணிந்து கிளம்பி விட்டானா?”

என்ற கேள்வியுடன் அவனைப் பார்த்த அரசர், அவனுடைய துடிப்பான முகத்தையும், குரலில் தெரிந்த தன்னம்பிக்கையையும் கண்டு வியந்தார். அரசர் மனதில் லேசாக ஓர் எதிர்பார்ப்பு துளிர்த்து மகிழ்ச்சியும் தந்தது. அவன் கண்களின் ஒளி, அவர் மனதில் புதிய நம்பிக்கையை உருவாக்கியது.

புல்லாங்குழல் ஒன்றை இடுப்பில் சொருகிக் கொண்டு, முகத்தில் புன்முறுவலுடன் நிற்கும் இந்தச் சிறுவன் ஆயர்பாடிக் கண்ணனைப் போலவே தெய்வீகமாகத் தெரிகிறானே என்று மனதிற்குள் நினைத்துக் கொண்டார்.

அவனைச் சிறிது நேரம் காத்திருக்கச் சொல்லி விட்டு, அரசவையின்  அன்றாடச் செயல்களை முடித்தார். அவனை அழைத்துக் கொண்டு ஒரு தனியறைக்குச் சென்றார். அரசியையும் அங்கு வரவழைத்தார். இளவரசியைப் பிரிந்த சோகத்தால் அரசியின் முகம் ஒளியிழந்து வாட்டத்துடன் காணப்பட்டது.

அரசி எழினியிடம், வீரமகேந்திரர் துருவன் தங்களைச் சந்திக்க வந்திருப்பதன் காரணத்தைக் கூறியவுடன் அரசியின் முகம் மலர்ந்தது.

ஆனால் உடனே மீண்டும் வாடியது.

“துருவா, நீ வந்ததன் நோக்கம் எங்களை மகிழ்விக்கிறது. ஆனால் இந்தச் செயலில் உனக்கு நாங்கள் எந்த உதவியும் செய்ய முடியாது. எங்கள் வாக்குப் படி நாங்கள் விருப்பத்துடன் தான் இளவரசி ஐயையை அந்த மாயாவியிடம் ஒப்படைத்தோம். அவனும் தான் கொடுத்த உறுதிமொழிப்படி நமது நாட்டில் இருந்து மற்ற குழந்தைகளைக் கவர்ந்து செல்வதை நிறுத்தியிருக்கிறான். உனக்கு நாங்கள் உதவி செய்ய முனைந்தால், அவன் சினம் கொண்டு தனது வாக்குறுதியை மீறலாம். இக்கட்டான சூழ்நிலை இது. நீயே சிறுகுழந்தை. மாவீரர்களே எதிர்த்துப் போரிடத் தயங்கும் ஒரு மாயாவியை நீ எப்படியப்பா எதிர்த்துப் போராட முடியும்? உன்னை ஆபத்தின் வாயிலில் நாங்களே எப்படிப் பிடித்துத் தள்ள முடியும்?” என்று அரசி அவனிடம் கவலையுடன் சொன்னாள்.

“கவலை வேண்டாம் அரசியாரே! அவனை எதிர்க்க முடியும் என்ற துணிவு என் மனதில் இருக்கிறது. எவ்வளவு பலசாலியாக இருந்தாலும் அவனுக்கு ஏதாவது குறையோ பலவீனமோ நிச்சயமாக இருக்கும். அதை அறிந்து கொண்டு எனது தாக்குதலை நான் தொடங்குவேன். எனக்கு ஆசி கொடுத்து விடையளியுங்கள். இளவரசி ஐயையைப் பற்றிய அடையாளங்களையும் மற்ற விவரங்களையும் மட்டும் எனக்கு எடுத்துச் சொல்லுங்கள்” என்று துருவன் அரசியிடம் வேண்டினான்.

அரசி துருவனிடம் அவனுக்கு வேண்டிய தகவல்களைக் கூறினாள். அரசர் துருவனுக்கும் அரசிக்கும் நடந்த உரையாடலை உன்னிப்பாக கவனித்துக் கொண்டிருந்தார்.

“துருவா, நாங்கள் இளவரசியைப் பிரிந்து இரண்டு வருடங்கள் ஓடி விட்டன. இப்போது இன்னும் கொஞ்சம் வளர்ந்திருப்பாள். அரசி மனதில் அவளை இறுதியாகப் பார்த்த அந்த நினைவுகள் தான் இருக்கின்றன. அந்த விவரங்களை வைத்து நீ கண்டு பிடிக்க முடியாது. இளவரசியின் கழுத்தில் இடது பக்கத்தில் சங்கு வடிவ மச்சம் ஒன்று தெரியும். அதைத் தவிரக் குழந்தைப் பருவத்திலிருந்தே அவளுக்கு மயில் என்றால் மிகவும் பிடிக்கும். இந்தத் தகவல்கள் உனக்குப் பயனுள்ளதாக இருக்கலாம். உனக்கு என்னால் நேரடியாக உதவ முடியாது. ஆனால் வேறோரு உதவி செய்ய முடியும். நீ இங்கிருந்து வெளியே சென்றதும், கோட்டைக்கு எதிரே ஒரு காடு இருக்கிறதல்லவா? அந்தக் காட்டின் உட்பகுதியில் ஒரு முனிவரின் ஆசிரமம் இருக்கிறேன். அவரைச் சென்று சந்தித்தால், அவர் உனக்குத் தேவையான சில பயிற்சிகளைத் தருவார். சில ஆயுதங்களைக் கையாளவும் மற்றும் சில மந்திர தந்திர வித்தைகளையும் உனக்குக் கற்றுத் தருவார். பலவிதக் கலைகளைக் கற்றுத் தேர்ந்தவர். உலக ஞானம் கொண்டவர். அவர் உனக்கு நிச்சயமாக உதவி செய்வார். உனது நோக்கம் தூய்மையானது. வெற்றியுடன் திரும்பி வா. எங்களுடைய ஆசிகள் உனக்கு என்றும் உண்டு” என்று கூற, துருவன் அவர்கள் இருவரையும் வணங்கி விடைபெற்றான்.

அரசி துருவனிடம் இளவரசி ஐயையின் சிறு குழந்தைப் பருவ ஓவியம் ஒன்றை அளித்தாள்.

துருவன் அரண்மனையில் இருந்து கிளம்பிக் கோட்டையை விட்டு வெளியே வந்தான். காட்டுக்குள் அவன் நுழைந்தவுடன், அவனுடன் முதல் நாள் பேசிப் பழகிய பஞ்சவர்ணக்கிளி கிள்ளி உற்சாகத்துடன் வந்து அவன் தோளில் அமர்ந்து கொண்டது.

“அண்ணா, நீங்கள் சென்ற வேலை முடிந்ததா? நாம் கிளம்பலாமா?” என்று கேட்க, துருவன் காட்டின் உட்பகுதியில் இருக்கும் முனிவரின் ஆசிரமத்தைப் பற்றிக் கேட்டான்.

“எனக்குத் தெரியும் அண்ணா. நான் உங்களை அழைத்துச் செல்கிறேன்” என்று சொல்லி விட்டுப் பறந்தது. கிள்ளி பறந்து சென்ற திசையில் துருவனும் தொடர்ந்தான்.

நீண்ட நேரம் நடந்த பின்னர் கண்களுக்கு எதிரே ஒரு சிறிய நதியின் கரையில் அழகான ஆசிரமமும், அதனைச் சுற்றி இருந்த நந்தவனமும் கண்களுக்குத் தெரிந்தன. நந்தவனத்தில் இருந்த செடி, கொடிகளிலும், மரங்களிலும் பூத்துக் குலுங்கிய மலர்களின் நறுமணம் அவர்களுடைய நாசிகளை எட்டியது. சில மூலிகைகளின் மணமும் காற்றில் கலந்திருந்தது. நதியில் ஓடிய நீரில் தவழ்ந்து வந்த தென்றல் காற்று குளிர்ச்சியாக அவர்களுடைய உடல்களை வருடியது.

ஆசிரமத்தை அடைந்ததும் எதிரில் இருந்த மரத்தில் கிள்ளி உட்கார்ந்து கொண்டது. துருவன் ஆசிரமத்தைச் சுற்றிப் போடப் பட்டிருந்த வேலியில் ஓரிடத்தில், திறப்பதற்கு வசதியாகக் கதவு போன்று மரக்குச்சிகளாலும் கயிற்றினாலும் ஆன ஒரு படல் இருந்தது. அதைத் திறந்து கொண்டு உள்ளே சென்றான். சிறிய குடில் ஒன்று நடுவில்; அதைச் சுற்றிலும் நான்கைந்து சிறிய குடில்கள். ஒரு பெரிய மரத்தின் அடியில் ஒரு முனிவர் தியான நிலையில் அமர்ந்திருந்தார். அங்கே அவருக்கு எதிரே விநாயகரின் சிலை ஒன்று இருந்தது. அதன் அருகே ஒரு மரத்தட்டில் மலர்கள் வைக்கப் பட்டிருந்தன. சிறிய தீபம் ஒன்று எரிந்து கொண்டிருந்தது. நந்தவனத்தில் சில சிறுவர்கள் விளையாடிக் கொண்டும், சிலர் வேலைகளைச் செய்து கொண்டும் இருந்தார்கள்.

முனிவரின் எதிரே சென்று பணிவுடன் கைகளைக் கூப்பிக் கொண்டு அவர் தியானத்தை முடித்துக் கண்களைத் திறக்கும் தருணத்திற்காக,  துருவன் பொறுமையுடன் காத்துக் கொண்டிருந்தான்.

malaikottai
படம்: அப்புசிவா

சிறிது நேரத்தில் கண்களைத் திறந்த முனிவர் துருவனைப் பார்த்துப்  புன்னகைத்தார். மலர்களைத் தூவி விநாயகரைத் தொழுது தனது பூஜையை முடித்துக் கொண்டு துருவனிடம் பேசினார்.

“வா துருவா வா! அரசர் அனுப்பினாரா? என்னைச் சந்தித்து விட்டுக் கிளம்பச் சொன்னாரா?” என்று புன்முறுவலுடன் கேட்க, துருவன் வியந்து நின்றான்.

“என்னுடைய  பெயரைச் சொல்வதோடு, அரசர் அனுப்பியதால் நான் இங்கு வந்திருப்பதும் இவருக்குத் தெரிந்திருக்கிறதே! முற்றும் அறிந்த ஞானி என்று இதைத் தான் சொல்வார்களோ?” என்று நினைத்து துருவன் ஆச்சர்யப்பட்டுப் போனான்.

“எப்படி எனக்குத் தெரியும் என்று யோசிக்கிறாயா?” என்று அந்த முனிவர் கேட்க, துருவன் ஆமென்று தலையசைத்தான்.

தொடரும்…

(முனிவரின் பயிற்சி எந்த அளவிற்கு துருவனுக்கு உதவப் போகிறது? துருவன் குறுகிய காலத்தில் கற்றுத் தேர்வானா? அரசரும், அரசியும் துருவன் வெற்றியடைவான் என்று நம்புவதை துருவன் எவ்வளவு தூரம் நிரூபிக்கப் போகிறான்? பொறுத்திருந்து பார்ப்போமா?)

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
Subscribe
Notify of
guest
0 கருத்துகள்
Newest
Oldest Most Voted
Inline Feedbacks
View all comments