வடிவங்கள் அறிவோம்

கணிதம் சொல்லும் பாடமொன்று

இனிதாய் கற்றிடலாம் இன்று

கண்மணிக் குழந்தைகள் வாருங்கள்

கவனித்துக் கேட்டு அறிந்திடுங்கள்.

வட்டம் சதுரம் முக்கோணம்

கோளம் கூம்பு கனசதுரம்

வடிவம் பலவும் இருந்தாலும்

வடிவாய்க் கற்றுப் பயனடைவோம்.

வட்டத்துக்கு உதாரணம்

சொல்வது மிகவும் எளிதாகும்

வளையல் வளையம் குறுந்தகடும்

கலயத்தின் வாயும் கருவிழியும்

தோசையும் ஆப்பமும் நாணயமும்

சக்கரமும் வட்ட வடிவமாகும்.

சதுரத்துக்கு உதாரணம்

சொல்வது மிகவும் எளிதாகும்

சதுரங்கப் பலகை, தாயக்கட்டம்

கேரம் பலகை, கடலை மிட்டாய்

குறுக்கெழுத்து சுடோகு கட்டம்

பட்டமும் சட்டென நினைவுவரும்.

செவ்வகத்துக்கு உதாரணம்

சொல்வது மிகவும் எளிதாகும்

மேசை, கூடம், கணினித் திரை

புகைப்படம், காகிதம், கரும்பலகை

கதவு, கட்டில், மிதியடியென்று

எத்தனை இருக்குது பாருங்கள்.

முக்கோணத்துக்கு உதாரணம்

சொல்வது மிகவும் எளிதாகும்

கப்பல் விரித்த பாய்மரமும்

பிஸ்ஸா துண்டும் முக்கோணம்

சுவரில் சாய்த்த ஏணியும்

முக்கோணத்தை உருவாக்கும்.

வாழ்க்கையில் நம்மைச் சுற்றியுள்ள

வடிவங்கள் பலவும் கற்றறிந்தோம்

கணிதமும் நமக்குக் கண்ணாகும்

கற்றதை மறவோம் எந்நாளும்!

2 Comments

  1. Avatar

    எத்தனையெத்தனை பொருத்தமான உதாரணங்கள் ‌!மிக நன்று.

    1. Avatar

      தங்கள் வருகைக்கும் பாராட்டுக்கும் நெஞ்சம் நிறைந்த நன்றி!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *