அன்று மிகவும் சோர்வாக இருந்தாள் சிவானி.
பள்ளியில் இன்று அவளது தேர்வு முடிவுகள் சொல்லப்பட்டன. சில பாடங்களில் நல்ல மதிப்பெண் பெற்றிருந்தாலும் சிலவற்றில் மிகக் குறைவான மதிப்பெண்களே பெற்றிருந்தாள்.
ஓரிரு பாடங்களில் தேர்ச்சி அடையவில்லை. சிவானி மிக நல்ல குழந்தை தான். நன்றாக வரைவாள். அழகாகப் பாடுவாள். ஆனால், பாடங்கள் மட்டும் கொஞ்சம் கடினமாகவே இருக்கும் அவளுக்கு.
ஆனால், எப்போதும் அவள் தேர்ச்சியடையாமல் இருந்ததில்லை. இன்றோ பாடத்தில் தோல்வியைத் தழுவியதும் மிகவும் அழுகையாக வந்தது.
ஆசிரியர் வேறு கொஞ்சம் கடினமாகபா பேசி விட்டார்கள். “சிவானி, நாளைக்கு உங்க அப்பாவைக் கூப்பிட்டுத் தான் பள்ளிக்கு வரனும்” எனக் கோபமாக சொல்லிவிட்டார் ஆசிரியை.
அப்பாவும் அம்மாவும் வேறு என்ன சொல்வார்களோ என்று பயமாக இருந்தது அவளுக்கு.
சென்சார் மூலம் அவளது பய உணர்ச்சியைப் புரிந்து கொண்ட அவளது கைக்கடிகாரம், அவளது பயத்தைப் போக்கும் விதமான கனவை அனுப்பியது சிவானிக்கு.
சிவானி இப்போது ஒரு பெரிய காட்டில் ஒரு அகன்ற மரத்தின் பொந்தில் அமர்ந்திருந்தாள்.
அவள் பார்த்துக் கொண்டிருக்கும் போதே, இரை தேடச் சென்ற காகத்தின் கூட்டில் முட்டையிட்டது ஒரு குயில்.
குயில்களுக்குக் கூடு கட்டத் தெரியாது. இருப்பினும் தன் சந்ததிகளை இவ்வுலகிற்கு அறிமுகப்படுத்த அவை கையாளும் உத்தி, காகத்தின் கூட்டில் முட்டையிடுவது. குஞ்சுகள் வளர்ந்த பின், காகம் குயில் குஞ்சுகளை அடையாளம் கண்டு விரட்டிவிடும் எனத் தெரிந்தாலும், தன் பிள்ளை பிழைத்துக் கொள்ளும் என்ற நம்பிக்கையிலேயே காகத்தின் கூட்டில் முட்டையிருகிறது குயில்.
பின், ஒரு பாம்பு அம்முட்டைகளைக் களவாட வந்தது. அதற்குள் கூட்டிற்குத் திரும்பிய காகங்கள் நாகத்திடம் சண்டையிட்டன.
நாகத்திடம் எத்தனை முறை தோற்றாலும் விடா முயற்சியோடு போரிட்டு வெற்றி பெற்றன அக்காகங்கள். தோல்வியால் துவண்டிருந்தால் அவற்றின் குஞ்சுகளைக் காப்பாற்றிருக்க இயலாது.
சில நாட்கள் கழிந்தன.. நடுவில் உயிர் பயத்தோடே உணவு சேகரிக்கும் அணில், முளைக்க முயலும் போதெல்லாம் விளங்குகளால் சேதப்படுத்தப்பட்டு, பின் விடாமல் மீண்டும் துளிர்க்கும் செடிகள், பட்டுப் போன பின்னும் துளிர் விடும் மரங்கள் என தோல்விகளில் இருந்து மீண்ட பல உயிர்களைக் கண்டாள் சிவானி.
காகத்தின் முட்டைகளில் இருந்து குஞ்சுகள் வெளிவந்தன. அவைகளுக்கு இறக்கைள் முளைத்தன. குயில் குஞ்சுகளைக் காகம் விரட்டவே அது தட்டுத் தடுமாறி பறந்து சென்று தன் கூட்டத்தில் இணைந்தது.
காகத்தின் குஞ்சுகள் பறக்கப் பழகின. எத்தனை முறை கீழே விழுந்தாலும், துவண்டு போகாமல் மீண்டும் மீண்டும் பறக்க முயன்றன.
இறுதியாக சுதந்திரப் பறவைகளாகப் பறக்கப் பழகி.. எல்லையற்ற நீல வானில் சிறகடித்தன.
வானிலும் கூட அவை கழுகுகளுக்கு இரையாகலாம். இல்லை அவற்றிடம் இருந்து தப்பி மீண்டும் பறக்கலாம்.
ஆனால், இத்தனைத் தோல்விகளைக் கண்டாலும் இயற்கை துவள்வதில்லை.
இயற்கையிடம் இருந்து பாடம் கற்ற சிவானியின் மனம் தெளிவு பெற்றது.
தேர்வுத் தோல்வியே வாழ்வின் எல்லை இல்லை. வெற்றியை விடவும் வாழ்க்கை முக்கியம் என்பதை உணர்ந்தாள் சிவானி.
சிவானியின் தாய் கூட பத்தாம் வகுப்பு தேர்வில் தோல்வி அடைந்தாராம். பின் மீண்டும் தேர்வு எழுதி வெற்றி பெற்று இன்று உலகமே பாராட்டும் விஞ்ஞானியாக உள்ளார்.
சிவானி கூட படிப்பில் வெற்றி பெறா விட்டாலும் ஒரு நல்ல பாடகியாக ஆகலாம் அல்லவா?
தேர்வுத் தோல்வியில் துவண்டு போகாது, நமக்கு நன்றாக வரும் துறையில் சாதிக்க முயல வேண்டும் குட்டீஸ்.
டாட்டா.. அடுத்த கதைல சந்திப்போம்.
பொறியியல் பட்டதாரி, தற்சமயம் இல்லத்தரசி; இரு சிறார்களின் தாய்; இரண்டு அச்சு புத்தகங்கள் வெளியாகி இருக்கின்றன. என்னைச் சுற்றி நிகழும் சமூக நிகழ்வுகள் கதைகளாக உருப்பெருகின்றன. தொடர்ந்து வாசித்து எழுதி, என்னை நானே மேம்படுத்த முயன்று கொண்டிருக்கும் புதிய எழுத்தாளர் நான்.