கருணை ததும்பும் அந்த முனிவர் பேசியதைக் கேட்டுத் திகைத்துப் போய் நின்ற துருவன் தன்னை ஒருவழியாகச் சமாளித்துக் கொண்டு அந்த முனிவரைப் பணிவுடன் வணங்கினான்.

அறிவும் ஞானமும் சேர்ந்து ஒளி வீசுகின்ற முனிவரின் முகத்தைக் கண்டதுமே துருவனின் மனதில் தன்னம்பிக்கையும் மகிழ்ச்சியும் சேர்ந்து எழுந்தன.

“அரசர், நம்மை ஒரு சரியான குருவிடம் தான் அனுப்பியிருக்கிறார். இவருடைய சொற்களைக் கேட்டுக் குறுகிய காலத்தில் நம்மால் முடிந்த அளவு கலைகளைக் கற்றுக் கொண்டு இங்கிருந்து கிளம்பவேண்டும்” என்று நினைத்தான்.

தன் முன்னே நின்ற அந்தச் சிறுவனை ஏற இறங்கப் பார்த்தார் கௌதம முனிவர். எளிமையான உடையுடன் சிரித்த முகத்துடன் இடுப்பில் ஒரு புல்லாங்குழலுடன் நிற்கும் அந்தச் சிறுவன், பார்த்தவுடன் அவர் மனதைக் கவர்ந்துவிட்டான். அவன் கண்களில் வீசிய ஒளி, அவன் எடுத்த காரியத்தை நிச்சயமாக முடிப்பான் என்று உறுதியாகக் காட்டியது.

“என்ன துருவா? மலைக்கோட்டை மாயாவியை எதிர்கொள்ளத் துணிந்து கிளம்பி விட்டாய்? எப்படி அவனுடன் போர் புரியப் போகிறாய்? மனதில் என்ன திட்டம் போட்டிருக்கிறாய்? உன் கையில் என்ன ஆயுதங்கள் வைத்திருக்கிறாய்? உனக்கு ஆயுதங்களைக் கையாளத் தெரியுமா?” என்று சிரித்துக் கொண்டே கேட்டார்.

“திட்டமெல்லாம் மனதில் ஒன்றுமில்லை. அவனிடம் பயப்படாமல் அவனை எதிர்த்து நின்று போராடி இளவரசியைக் காப்பாற்ற வேண்டும் என்று மனதில் தோன்றியது. எனது புல்லாங்குழல் இசைத்திறனைத் தவிர வேறு எந்தத் தகுதியும் என்னிடம் இல்லை. நான் செய்ய நினைக்கும் காரியம் கடினமானது தான் என்று எனக்குத் தெரியும். ஆனால் துணிவுடன் எந்தச் செயலையும் ஆரம்பித்தால் முடிக்கும் வழிகள் தாமாகவே நமக்குக் கிடைக்கும் என்று என்னுடைய அம்மா சொல்லுவார்கள். செய்ய நினைக்கும் செயல் கடினமே ஒழிய, செய்யவே முடியாத செயல் இல்லையே? உங்களைப் போன்ற பெரியோர் எனக்கு வழி காட்டுவீர்கள் என்று நினைக்கிறேன்” என்று துருவன் சொல்ல, கௌதம முனிவர் புன்னகைத்தார்.

“பரவாயில்லை. நன்றாகவே பேசுகிறாய். வா, என்னுடன். பேசிக் கொண்டே உணவருந்தப் போகலாம்” என்று சொல்லி, அவனைத் தன்னுடன் அழைத்துக் கொண்டு நடுவில் இருந்த தனது குடிலை அடைந்தார். வழியில் தென்பட்ட சிறுவர்கள் பலரும் முனிவரை வணங்கினார்கள்.

குடிலின் உட்புறம் மிகவும் தூய்மையாகவும் தெய்வீகமாகவும் இருந்தது. முனிவரின் மனைவி மேகலை அம்மையார் அவர்களுக்கு வாழை இலைகளில் உணவைப் புன்னகை மாறாத முகத்துடன் பரிமாறினார். துருவனுக்கு மேகலையைப் பார்த்தவுடன் தன்னுடைய தாயின் முகம் நினைவிற்கு வந்தது.

உணவை முடித்ததும் அந்த அன்னைக்கு நன்றி கூறிவிட்டு முனிவருடன் சேர்ந்து துருவன் வெளியே வந்தான். குடிலுக்கு வெளியே இருந்த ஒரு பெரிய மரத்தின் நிழலில் முனிவர் அமர, துருவன் அவர் எதிரே பணிவுடன் நின்றான்.

“துருவா, உனது ஆர்வத்தையும் துணிவையும் மெச்சுகிறேன். நாட்டு மக்களின் நலனிற்காகத் தனது மகளையே தியாகம் செய்த அரசருக்கு உதவ வேண்டியது நமது கடமை. சிறுவனாக இருந்தாலும் நீ அரசருக்கு உதவவேண்டுமென்று எண்ணியதே பெரிய விஷயம். உனக்குக் கண்டிப்பாக நான் உதவுகிறேன். நம்மிடம் இருப்பது மிகவும் குறைந்த கால அவகாசம். அதனால் இந்தக் குறுகிய காலத்தில் உனக்குத் தேவையான சில பயிற்சிகளை விரைவாகக் கற்றுத் தருகிறேன். நீயும் மனம் ஒருமித்துக் கிடைத்த வாய்ப்பை நல்ல முறையில் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். கருத்து முழுவதையும் பயிற்சியில் செலுத்த வேண்டும்” என்று சொல்லி விட்டு அந்த நிமிடமே அவனுக்குப் பயிற்சியை ஆரம்பித்து விட்டார்.

அடிப்படைத் தேவைகளானத் தற்காப்புப் போர் முறைகளில், சில ஆயுதங்களைக் கையாளக் கற்றுக் கொடுத்தார். குறுவாளைக் குறி பார்த்து ‌எறியவும், வில்லை நாணேற்றி அம்புகளை இலக்கை நோக்கி எய்வதற்கும் அன்று பயிற்சி கொடுத்தார்.

கற்றுக் கொள்வதில் அவனுக்கு இருந்த ஆர்வமும், அவனுடைய புத்திக் கூர்மையும் அவனை விரைவிலேயே தேர்ச்சி பெற வைத்தன. வாளைச் சுழற்றி யுத்தம் செய்வது சிறுவனான அவனால் முடியுமோ என்று கௌதம முனிவர் தயங்கினார்.

 ஆனால் துருவன் வாளைக் கையாளவும் கற்றுக் கொள்ள முனைந்த தீவிரத்தால் கவரப்பட்ட முனிவர், அதையும் அவனுக்குக் கற்றுத்தர முன்வந்தார். அவனுடைய உயரத்திற்கு ஏற்ற வாளையும் அவனுக்குப் பரிசாக அளித்தார். ஆயுதங்கள் தவிர புரவியில் ஏறவும் யானையில் ஏறவும் துருவன் தன்னால் முடிந்த அளவு கற்றுக் கொண்டான். 

வயலில் இறங்கிப் பெற்றோரோடு உழைத்த உழைப்பு அவன் உடலில் வலுவையும் சுறுசுறுப்பையும் தந்திருந்தது. அவனுடைய பணிவு அவனைப் புதிய விஷயங்களைக் கற்றுக் கொள்ளும் போது கவனமாகக் கேட்டு உள்வாங்கிச் செயல்படுத்த வைத்தது.

இரண்டு வாரங்கள் முடிந்தன. ஆயுதங்களைக் கையாள்வதில் இருந்த அடிப்படையான விஷயங்களில் அவன் முழுமையாகத் தேர்ந்தான். கௌதம முனிவர் அவனைத் தன்னருகில் உட்கார வைத்து ஒருநாள் மாலையில் பேச ஆரம்பித்தார்.

“துருவா, நான் நினைத்ததை விட நீ வேகமாகக் கற்று வருவது எனக்கு மகிழ்ச்சி தருகிறது. அதனால் நீ முதலில் நினைத்ததை விட இன்னும் சில புதிய கலைகளைக் கற்றுத்தர முடிவு செய்திருக்கிறேன். சில மந்திர வித்தைகளையும், சில மாயாஜாலங்களையும், அவற்றில் உதவும் சில பொருட்களைக் கையாளும் விதங்களையும் உனக்குக் கற்றுத்தரப் போகிறேன்” என்றார் கௌதம முனிவர்.

அந்தக் காலத்தில் இன்று இருப்பது போலப் பள்ளிகளோ, கல்லூரிகளோ இல்லை ஆராய்ச்சி சாலைகளோ கிடையாது. கௌதம முனிவர் போன்று பல்வேறு கலைகளில் கற்றுத் தேர்ந்த முனிவர்களும், ரிஷிக்களும் நாட்டு எல்லைகளில் அல்லது நகரத்தை விட்டு விலகி ஒதுக்குப்புறமாக இருக்கும் வனப்பகுதிகளில் தங்களது ஆசிரமங்ளை அமைத்துக் கொண்டு தங்களிடம் வரும் மாணவர்களுக்குக்

கல்வி கற்பிக்கும் பணியைச் செய்து வந்தார்கள்.

இது போல ஆசிரமத்தில் தங்கி எளிமையான வாழ்க்கை வாழ்ந்து கொண்டு கல்வி கற்கும் அந்த வாழ்க்கை,  ‘குருகுல வாசம்’ என்றே அழைக்கப்பட்டது. அரச குலத்தில் பிறந்தவர்களோ இல்லை ஏழை எளியவர்களோ, யாராக இருந்தாலும் எந்த ஏற்றத்தாழ்வும் காட்டப்படாமல் கல்வி கற்பிக்கப்படும். எளிமையான உணவு உண்டு, எளிமையான ஆடைகளை உடுத்து ஆசிரமத்து அன்றாட வேலைகளைப் பகிர்ந்து கொண்டு தான் வளர்ந்தார்கள்.

இலக்கியமோ, மொழித் திறனோ, வணிகமோ, மருத்துவமோ, போர்முறைகளோ, அரசியல் தந்திரங்களோ இல்லை பொருளாதாரமோ எதுவாக இருந்தாலும் குருகுல வாசத்தில் தான் கற்றுக் கொள்ள வேண்டும். அதே போலத் தொழிற்கல்வி கற்றுக் கொள்ள விரும்புவர்கள் அந்தத் தொழிலைச் செய்து கொண்டிருப்பவர்களிடம் உதவியாளராகச் சேர்ந்து வேலை செய்து கொண்டே கற்றுக் கொள்ள வேண்டும். தொழிற்கல்வி கற்பிக்கவோ இல்லை மருத்துவம் மற்றும் வணிகம் பற்றிச் சொல்லித் தரவோ தனித்தனியே  கல்லூரிகள் இருந்ததில்லை.

இந்தக் காரணங்களால் தான் கௌதமரைப் போன்ற முனிவர்களின் வாழ்க்கை கல்விப்பணியிலேயே கழிந்தது. முற்றும் துறந்த முனிவர்களாகவோ, காட்டின் நடுவே தவம் செய்து வாழ்பவர்களாகவோ  இல்லாமல் கல்வி கற்பிக்கும் ஆசான்களாகச் சிலர் கடமைகளைச் செய்தார்கள்.

முனிவர்களாக இருந்தாலும் ஆயுதங்களைக் கையாளவும், யுத்தத்தில் பயன்படுத்தும் மிருகங்களைத் தன்வசப் படுத்தவும் தெரிந்து வைத்துக் கொண்டிருந்தார்கள். பல்வேறு கலைகளிலும் தேர்ச்சி பெற்றுப் பிரதிபலன் எதிர்பாராமல் கற்றுத் தருவது ஒன்றே தங்களுடைய இலட்சியமாக ஏற்று நின்றார்கள்.

அப்படிப்பட்ட முனிவர்கள் மந்திரதந்திரங்களையும், மாயாஜாலங்களையும் கற்றிருந்தாலும் எல்லோருக்கும் சொல்லித் தருவதில்லை. ஏனென்றால் அவற்றைத் தவறான எண்ணங்களோடு பயன்படுத்தினாலோ, இல்லை தன்னல நோக்கத்தோடு பயன்படுத்தினாலோ பேரழிவை உண்டாக்கி விடும். அதனால் மாயதந்திரங்களைக் கற்றுத் தருவதற்கு முன்னால் தன்னுடைய மாணவர்களிடம் தேவையான உறுதிமொழிகளை ஆசான் பெற்றுக் கொள்வார்.

அதனால் மாயமந்திர வித்தைகளைக் கற்றுத்தரப் போவதாக ஆசான் கூறியவுடன் துருவன் குழம்பிப் போனான்.

“என்னை மன்னியுங்கள் குருவே! நேரடியாக வீரத்துடன் போரிட்டு  எதிரியை வீழ்த்துவது தானே போரின் தர்மம்? தமிழரின் வீரம் அதில் தானே சிறப்படைகிறது? மாயாஜாலங்களையும் மந்திரவித்தைகளையும் உபயோகித்து எதிரியை வீழ்த்துவது தந்திரமான செயல் அல்லவா? அவற்றின் அவசியம் தான் என்ன? ” என்று தன் மனதில் தோன்றியதை மறைக்கத் தெரியாமல் உடனடியாகக் கேட்டு விட்டான்.

சிறுவனின் கேள்வியால் திகைத்துப் போன கௌதமர், புன்சிரிப்புடன் அவனுக்குப் பதில் சொல்ல ஆரம்பித்தார்.

“துருவா, நீ எதிர்கொள்ளப் போகும் எதிரியொன்றும் சாமானியமானவன் அல்ல. உடல் வலிமை மிக்கவன். மாயாஜாலங்களில் சிறந்தவனாக இருப்பதால் தான் மாயாவி என்ற பெயரே அவனுக்கு இடப்பட்டது. யுத்தம் செய்வதிலும் தேர்ந்தவன். படை பலத்தோடு சென்ற அரசரே அவனுடன் போரிட்டு அவனை வெல்வது கடினம் என்பதால் தான் தனது மகளையே அவனிடம் கொடுத்து விட்டுப் போரைத் தவிர்த்தார். தனது நாட்டுமக்களைப் பேரழிவிலிருந்து காப்பாற்றினார். அவர் செய்தது கோழைத் தனமான செயலல்ல. விவேகமான செயல். துணிவுடன் ‌அவனை எதிர்த்து அவர் போர் புரிந்திருந்தால் போரிலும் தோற்று நாட்டையும் இழந்திருப்பார். நாட்டு மக்களும் அவனிடம் சிக்கித் தவித்திருப்பார்கள். அத்தனை படைபலத்துடன் சென்ற மன்னரே அந்த முடிவு எடுத்தார் என்றால் நிச்சயமாக அதற்குப் பின்னர் வலுவான காரணம் இருக்கும் இல்லையா? அந்தக் காரணத்திற்காகத் தான் உன்னை மந்திரதந்திரங்களைக் கற்றுக் கொள்ளச் சொல்கிறேன். சிறுவனான உன்னை யுத்தத்தில் ஒரு நொடியில் கொன்று விடுவான் அந்த அரக்கன். அதனால் நீ அவனுக்குத் தகுந்த வலிமை மிக்க எதிராளியாக உன்னை மாற்றிக் கொள்ள மந்திரதந்திரங்களைக் கற்பது அவசியம். காலதாமதம் செய்யாமல் உடனே கற்றுக் கொள். தயங்காதே! தவறேயில்லை” என்று அறிவுரைகளைத் தந்து உடனடியாக அவனுக்கு அந்தக் கல்வியையும் ஆரம்பித்தார்.

“நான் இந்தக் கலைகளை மனிதகுலத்துக்குக் கேடு விளைவிக்கும் வகையிலோ இல்லை தன்னலத்திற்காகவோ எந்த நிலையிலும் உபயோகிக்க மாட்டேன்” என்ற உறுதிமொழியை அவனிடமிருந்து பெற்றுக் கொண்டு மாயமந்திரக் கலை என்ற புதிய உலகத்திற்கு அவனை கௌதம முனிவர் அழைத்துச் சென்றார். இந்தக் கல்வியுடன் சேர்ந்து ஏற்கனவே கற்ற ஆயுதங்களின் பயிற்சியும் தொடர்ந்தது. அவற்றோடு பறவைகளின் மொழியும், விலங்குகளின் மொழியும் கூடப் புரிந்து கொள்ளச் சில யுக்திகளை கௌதம முனிவர் துருவனுக்குக் கற்றுத் தந்தார். மருத்துவம் பற்றியும் சில மூலிகைகள் பற்றியும் சொல்லிக் கொடுத்தார்.

துருவனின் நண்பனான கிள்ளியென்ற பஞ்சவர்ணக்கிளி தினமும் மாலையில் தனது நண்பனைச் சந்தித்துப் பேசி மகிழ்ந்தது. ஆனால் இப்போது துருவனுக்கு அளிக்கப்பட்ட பயிற்சிகள் அதிகத் தீவிரம் அடைந்து வந்ததால் தினமும் கிள்ளியைச் சந்திப்பது துருவனுக்கு இயலாத காரியமாகி விட்டது. ஒரு நாள் துருவனை நேரில் சந்தித்த கிள்ளியும்,

“அண்ணா, நீங்கள் பயிற்சியை முடித்து விட்டு இங்கிருந்து கிளம்பியதும் வனத்தில் நாம் முதன்முறையாக சந்தித்த மரத்தடிக்கு வாருங்கள். இன்னும் சில நண்பர்கள் உங்களுடன் பயணம் செய்ய ஆவலாக இருக்கிறார்கள். நான் சென்று அவர்களிடம் பேசி அவர்களைத் தயாராக வைக்கிறேன். வெற்றிகரமாகப் பயிற்சியை முடித்து விட்டு வாருங்கள்” என்று சொல்லி விட்டுத் தன்னுடைய இருப்பிடத்திற்குப் பறந்து சென்றது.

-தொடரும்.

( துருவன் தனது பயிற்சிகளை முடித்ததும் மாயாவியை எதிர்க்கும் அளவு அவனுக்குத் தகுதிகள் கூடுமா? துருவன் மற்றும் பேசும் கிளி கிள்ளியுடன் பயணிக்கப் போகும் மற்ற வினோத விலங்குகளைப் பற்றித் தெரிந்து கொள்ள வேண்டுமா? அடுத்த பகுதியில் பார்க்கலாமா செல்லங்களே? தவறாமல் படியுங்கள். மலைக்கோட்டை மாயாவி உங்கள் மனங்களை நிச்சயமாக மகிழ்விப்பான்.)

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
Subscribe
Notify of
guest
0 கருத்துகள்
Newest
Oldest Most Voted
Inline Feedbacks
View all comments