அப்பா ஏதோ புத்தகத்தை படித்துக்கொண்டிருந்தார். அவரை நெருங்கிய  விஸ்வா அவர் படிப்பதை எட்டிப்பார்த்தான்.

“என்ன கண்ணா?” என்றார் அப்பா.

“எனக்கும் ஏதாவது புத்தகம் தாங்க. படிக்கறேன்” என்றான் விஸ்வா.

அவன் அப்படி சொன்னதும் அப்பாவுக்கு முகமெல்லாம் மகிழ்வான சிரிப்பு படர்ந்தது. எழுந்தவர் அவரது அலமாரியில் தேடி ஒரு புத்தகம் எடுத்துத்தந்தார். அதில் கட்டம் கட்டமாக போட்டு படங்கள் வரையப்பட்டிருந்தன.

Chithirakadhai

“இதென்னப்பா… படமா இருக்கு. நீங்க படிக்கறது எழுத்தா இருக்கு”

“அதுவந்து கண்ணா… நான் பெரியவங்க… இது வேகமா படிப்பேன். நீ இப்பதான் கதை படிக்கக் கேட்கற… மூணாவதுதானே படிக்கற… இது உனக்கு நல்லாருக்கும்”

“ஆமாப்பா..‌ கம்மியா எழுத்து இருக்கு. படம் இருக்கு. படிச்சா ஜாலியா இருக்கும்போல”

“இதை சித்திரக்கதைனு சொல்லுவாங்க. இது குழந்தைகளுக்குப் படிக்க ஈஸி”

“நீங்க இதெல்லாம் படிக்க மாட்டீங்களா?” என்று விஸ்வா கேட்க, அப்பா ஏதோ யோசித்தார். பின்னர் அவனை அருகில் அழைத்து தோள்மீது கைபோட்டு பேச ஆரம்பித்தார்.

“விஸ்வா… மனிதர் எல்லாம் எப்படி பேசுவோம்?”

“வாயாலதான்”

அப்பா சிரித்துவிட்டார்.

“அதில்ல கண்ணா… நாம பேசறது தமிழ்மொழி… இல்லையா”

“ஆமாம்… ஸ்கூல்ல இங்லீஸ்ல பேசணும்”

“ம்… ஆமா.. இதெல்லாம் நாம நினைக்கிறதை மத்தவங்ககிட்ட சொல்றதுக்கு. அதே சமயம் மனிதர்கள் ஆரம்ப காலத்தில்…இந்த மொழியெல்லாம் கண்டுபிடிக்க முன்னால எப்படிப பேசியிருப்பாங்க?”

“ஆமாப்பா…. சைகை காட்டுவாங்களோ”

“இருக்கும்… அதோட, வேட்டைக்குப் போறது, சாப்பிடறது, மிருகங்களைக் குறிக்கிறதுது இதெல்லாம் பாறைகளில்… குகைகளில் படமா வரைஞ்சு ஈஸியா பேசிக்கிட்டாங்க”

“ஹை… அப்போ படம் வரையறது பழைய காலத்தில் இருந்தே இருக்குதா?”

“ஆமா…அதான் முதல் கலை. அப்புறம் பேச ஆரம்பிச்சு பின்னாடியும் ஓவியம், சிற்பம்னு வரைஞ்சு கருத்துகளைச் சொன்னாங்க. நம்ம பழைய கோவில்கள், பிரமிடுகள் எல்லாம் பாத்தா யார் வேணா அவங்க சிற்பமா ஓவியமா செய்ததைப் புரிஞ்சுக்க முடியும்”

“ம் ஆமாப்பா! வெள்ளக்காரங்க கூட அதைப் பாத்து ரசிப்பாங்க. டிவில பாத்துருக்கேன்”

“அதான்! அதைக் கொஞ்சம் மாத்தி சித்திரக்கதைன்னு இது போல செஞ்சிருக்காங்க. இதப் பாத்தேன்னா படம் மட்டுமே இருக்கிறமாதிரியும் இருக்கு. சிலது அவங்க பேசற மாதிரி எழுத்து போட்டு வரும். ஆனா நல்லாப் புரியும்”

“கொஞ்சமா படிச்சு… நெறயா கதை தெரிஞ்சுக்கலாம்”

“இது குழந்தைகளுக்கு முதல்ல படிக்க வைக்க ஆர்வம் தரும். பெரிசான பின்னாடி.. பெரியவங்க படிக்கவும் நாவல்… இலக்கியங்களனு சித்திரக்கதை வடிவத்தில் வருது”

“இது எப்படி படிக்கறதுபா”

“இதோ இது முதல் கட்டம். கதை ஆரம்பம். அடுத்து பக்கத்தில்…முடிச்சு கீழ”

“நாம எழுதறதுபோலவே”

“யெஸ்….அதோட…இந்த பேச்சு வருது இல்ல..அதை பலூன்னு சொல்வாங்க”

“ஆமாப்பா! இது பாக்க பலூன் போலவே இருக்கு”

“இது யார் பேசறாங்கன்னு சொல்லும். அதே வட்டவட்டமா சோப்பு நுரை போல பலூன் இருந்தா அவங்க மனசில் நினைக்கறாங்கன்னு அர்த்தம்”

“இது பாருங்க….பெரிசா ஸ்டார் போல போட்டு…பெரிய எழுத்தா இருக்கு”

“இது சத்தமா கத்தறது”

“ஹைய்யா…நான்கூட இது வரையலாமா”

“தாராளமா…ஒரு பேப்பர்ல கட்டம்போட்டு  தரேன். வரிசையா படம் வரை. கதையை பலூன்ல எழுது. பாக்கறேன்”

“ம்ம்…கதை வந்து….பாட்டி வடைசெய்ற கதை”

“சரி…நீ படிச்சதை வரைஞ்சு பாரு. அப்புறம் நீயே ஒரு கதையை எழுதி எனக்குச் சொல்லு”

விஸ்வாவுக்கு வெட்கம் வந்துவிட்டது. இருந்தாலும் தனியாகக் கதை எழுதி அதைச் சித்திரக்கதையாக மாற்றி அப்பாவிடம் காட்ட வேண்டுமென்று ஆசை வந்துவிட்டது.

அப்பா கொடுத்த சித்திரக்கதைப் புத்தகத்தை வரிசையாகப் படிக்க ஆரம்பித்தான் விஸ்வா.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
Subscribe
Notify of
guest
4 கருத்துகள்
Newest
Oldest Most Voted
Inline Feedbacks
View all comments