அரவிந்த் படுக்கையில் புரண்டு படுத்தான். காலை ஆறு மணி. அலாரம் அடித்தது. அணைத்து விட்டுத் திரும்பவும் தூங்க ஆரம்பித்தான்.
“அரவிந்த், எழுந்திரு சீக்கிரம். இன்னைக்குத் தோட்டத்துக்குப் போகப் போறோம்னு நேத்தே சொன்னேன் இல்லையா? எழுந்து ரெடியாகிக்கோ. அரை மணி நேரத்தில கெளம்பணும்” என்று அம்மா சொல்லப் போர்வையில் இருந்து தலையை நீட்டிய அரவிந்த்,
“நான் வரலைம்மா. நீங்கள்ளாம் போய்க்கங்க. எனக்குத் தூக்கம் தூக்கமா வருது. என்னால இப்ப எந்திரிச்சுக் கெளம்ப முடியாது. நான் வீட்டில தனியாவே இருந்துக்கறேன்” என்று சொன்னான்.
“அண்ணா, வாண்ணா. தோட்டத்தில ஜாலியா வெளையாடலாம். மோட்டார் போட்டுக் குளிக்கலாம். மாங்காய், நுங்கு, பிஞ்சு வெள்ளரிக்காய்லாம் சாப்பிடக் கெடைக்கும். வீட்டில ஒனக்குத் தனியா போரடிக்கும்” என்று அரவிந்தின் தங்கை யாழினி கூப்பிட்டுப் பார்த்தாள். அரவிந்த் அசைவதாகவேயில்லை.
அரவிந்த், யாழினி இரண்டு குழந்தைகள் கண்ணன், ராதா தம்பதிக்கு. விடுமுறைக்காக கிராமத்தில் இருக்கும் பண்ணை வீட்டுக்கு வந்திருக்கிறார்கள். கிராமத்து வீடு மாதிரி இல்லாமல் சகல நவீன வசதிகளுடன் உள்ள வீடு. ஆனால் ஊருக்கு ஒதுக்குப்புறமாக இருப்பதால் அக்கம்பக்கம் யாருமே இல்லை.
யாழினி நன்றாக விளையாடிச் சுற்றிப் பார்த்து அனுபவிக்கிறாள். ஆனால் அரவிந்த் டிவி, வீடியோ கேம் என்று எப்போதும் மூழ்கிக் கிடப்பான். சாப்பாடு, தூக்கம் எதுவுமே நேரத்துக்கு நடக்காது.
இன்று ஆற்றங்கரைக்கு அருகில் இருக்கும் மாந்தோப்புக்குக் குடும்பத்தோடு எல்லோரும் கிளம்பிப் போகிறார்கள். அரவிந்த் தான் கிளம்பவில்லை.
“அம்மா, நீங்க கெளம்பிக்கோங்க. நான் வீட்டிலயே தனியா இருந்துக்கறேன்”
“சரிடா, என்னவோ பண்ணு போ. நாங்க கெளம்பறோம். டைனிங் டேபிள் மேல சாப்பாடு வச்சுருக்கேன். பசிக்கும் போது எடுத்து சாப்பிட்டுக்கோ. நாங்க வர சாயந்திரமாயிடும். நீ எழுந்திருக்க லேட்டாகும். அதுனால கதவையெல்லாம் பூட்டிட்டுப் போறோம். பயப்படாம இரு”
என்று சொல்லி விட்டு அம்மா கிளம்பிப் போனாள். பாதி விஷயம் காதில் வாங்கிக் கொண்டான். பாதிக்கு மேல அரவிந்த் தனக்கிருந்த தூக்கக் கலக்கத்தில் கவனிக்கவேயில்லை.
அவர்கள் கிளம்பிப் போய் நீண்ட நேரம் ஆகியிருந்தது. காலை பத்து மணி வாக்கில் எழுந்திருந்தான். வயிற்றில் பசி கிள்ளியது. இரவும் டிவி பார்த்துக் கொண்டே சிப்ஸ், ஜுஸ்னு கொறித்துக் கொண்டு இரவு உணவும் சாப்பிடாமல் தூங்கி விட்டான்.
எழுந்து பல் தேய்த்து முகம் கழுவிக் கொண்டு வந்தவன் பசியோடு வெளியே வந்தான்.
“அப்பாடா நிம்மதி. இன்னைக்கு நாள் பூரா ஜாலியா டிவில படம் பாக்கலாம். அம்மா, அப்பா இருந்தாத் தான் தொடர்ந்து பாக்கக் கூடாதுன்னு சொல்லுவாங்க. சாப்பிட்டுட்டு டிவி பாக்கலாம். மத்தியானமா கேம்ஸ் விளையாடலாம். சாயந்திரம் வரைக்கும் யாழினி தொந்தரவும் இல்லை” என்று நினைத்துக் கொண்டு வந்தான்.
டைனிங் டேபிள் பக்கத்தில் போனால் அவனுடைய சாப்பாட்டுக்கு அருகில் எலி ஒன்று துள்ளிக் குதித்து ஓடியது. உணவை மூடியிருந்த தட்டு லேசாகத் திறந்திருக்க இன்னொரு எலி துள்ளிக் குதித்து ஓடியது.
“சரி, கிச்சனில பால் இருக்கும். நெறைய ஜீனி போட்டுக் குடிக்கலாம்” என்று போனால், மேடையில் இருந்து பாலைக் கீழே தள்ளி ருசித்துக் கொண்டிருந்த பூனை அங்கிருந்து ஓடியது. சமையலறை ஜன்னல் மூடாமல் திறந்திருந்தது. ஃப்ரிஜ்ஜைத் திறந்து பார்த்தால் ஒரே ஒரு பழம், பழைய ஆப்பிள் மட்டும் கிடைத்தது. அதை எடுத்துக் கடித்துக் கொண்டே டிவியைப் போட்டான்.
பட்டென்று டிவி அணைந்தது. கரண்ட் போயிருந்தது. அன்று மாதத்தின் மூன்றாவது ஞாயிற்றுக் கிழமை. அந்தப் பகுதியில் காலையில் இருந்து சாயந்திரம் வரை அன்று கரண்ட் கட் என்பது அப்போது தான் ஞாபகம் வந்தது. தலையில் கையை வைத்துக் கொண்டு உட்கார்ந்தான்.
“சரி, அம்மா, அப்பாக்கு ஃபோன் செஞ்சா, யாரையாவது அனுப்பிக் கூட்டிட்டுப் போவாங்க. சாயந்திரம் வரைக்கும் பசியோட எப்படி இருக்கறது? கதவும் பூட்டியிருக்கு. வெளியே போக முடியாது. ஞாயித்துக் கிழமைன்னால வேலை செய்யற ஆட்களும் வரமாட்டாங்க” என்று யோசித்துக் கொண்டு ஸெல்ஃபோனை எடுத்தால் அதிலும் சார்ஜ் இல்லை. இரவு சார்ஜ் செய்ய மறந்திருந்தான். பசியால் கோப கோபமாக வந்தது.
ஜன்னல் வழியாக வேடிக்கை பார்த்துக் கொண்டே நின்றான். அவன் சாப்பாட்டைக் கெடுத்த எலி எட்டிப் பார்த்து. அவனைப் பார்த்து கேலியாகச் சிரித்த மாதிரி இருந்தது. அதை விரட்டக் கையை ஓங்கினான்.
“என்னை உன்னால ஒண்ணுமே செய்ய முடியாது. நீ வீட்டுக்குள்ள அடைஞ்சு கெடக்கறே. நான் எப்படி சுதந்திரமாத் திரியறேன் பாரு” என்று பேசிய எலியை ஆச்சர்யத்துடன் பார்த்தான்.
“எப்படிப் பேசறேன்னு ஆச்சர்யமா இருக்கா? கூர்ந்து கவனிச்சிருந்தா முன்னாலயே உனக்குப் புரிஞ்சிருக்கும். என்னை மாதிரி எலியா மாற ஆசையா இருக்கா?” என்று கேட்க அரவிந்த் தலையசைத்தான். ” இந்த இலையைத் தொடு” என்று சின்ன இலையை நீட்டியது. அரவிந்த் தொட்டதும் என்ன ஆச்சரியம்! எலியாக மாறிவிட்டான்.
உடனே சந்தோஷமாக ஜன்னல் கம்பி வழியே வெளியே குதித்தான். எலி நண்பனுடன் சேர்ந்து தோட்டத்தில் ஓடி விளையாடினான். பயங்கர குஷி. ஆனால் பசி திரும்ப வயிற்றைக் கிள்ள ஆரம்பிக்கச் சுற்றிச் சுற்றிப் பார்த்தான். வேப்பம்பழங்களும் கொட்டைகளும் கிடந்தன. கருக் கருக்கென்று கொறிக்க ஆரம்பிக்க, அங்கே பாய்ந்து வந்ததொரு பூனை. பயந்து போய்த் துள்ளிக் குதித்து மரப்பொந்தில் ஒளிந்து கொண்டான். மூச்சு வாங்கியது. பயத்தில் உடம்பெல்லாம் நடுங்கியது. கூடவே இருந்த எலி ஃப்ரண்ட் சிரிக்க ஆரம்பித்தான்.
“என்ன கொஞ்ச நேரத்திலேயே ஓய்ஞ்சு போயிட்டயே?” என்று கேட்க,
“இல்லையில்லை. அதெல்லாம் இல்லை. ஜாலியா இருக்கு” என்று திரும்ப வெளியே வந்து ஓடி விளையாடிக் கொண்டிருந்தான். மேலேயிருந்து ஒரு பறவை வட்டமிட மீண்டும் பொந்துக்குள் பதுங்கினார்கள்.
அப்படியே பயந்து பயந்து உயிரைக் காப்பாற்ற அங்கேயும் இங்கேயும் ஓடி சாயந்திர நேரம் நெருங்குவதற்குள் பலவித அனுபவங்கள். உடம்பு தளர்ந்து வாடிப் போய்விட்டது.
சாயந்திரம் ஆனதும் எலி ஃப்ரண்ட் நடக்க முடியாமல் தள்ளாடின அரவிந்தைக் கஷ்டப்பட்டுக் கூட்டிக் கொண்டு போய் ஜன்னல் வழியே வீட்டுக்கு உள்ளே தள்ளி, அந்த இலையையும் அவன் மேல் போட்டது. இலை உடலில் பட்டதும் திரும்பவும் அரவிந்திற்கு மனித உருவம் வந்தது.
வாசலில் கதவு திறக்கும் சத்தம்.
“என்னடா அரவிந்த்? இன்னுமா தூங்கிட்டு இருக்கே? எழுந்திரு. சாப்பிட்டயா இல்லையா?” என்று கேட்க, அரவிந்த் பதில் சொல்ல முடியாமல் மயங்கி விழுந்தான்.
அவனை எழுப்பிச் சாப்பிட வைத்துப் பாலும் சுடவைத்து அம்மா தந்ததை எதிர்த்துப் பேசாமல் வாங்கிக் குடித்தான்.
“அரவிந்த். இன்னைக்கு நல்லா ஜாலியாப் பொழுது போச்சு. நாளைக்கு நம்ம ஊரு பக்கத்தில இருக்கற அருவியைப் பாக்கப் போறோம். நீ வீட்டில தானே இருக்கப் போறே? சாப்பிட என்ன செஞ்சு வச்சுட்டுப் போணுமா?” என்று அம்மா கேட்க,
“இல்லைம்மா. நானும் ஒங்க கூடயே வரேன். வீட்டில் தனியா இருக்க ரொம்ப போரா இருக்கு” என்று அரவிந்த் வேகமாகச் சொல்ல யாழினி சந்தோஷத்துடன் குதித்தாள்.
அம்மா, அப்பாவிற்கும் அரவிந்தின் மனமாற்றம் மகிழ்ச்சி தந்தது.
அரவிந்துக்குத் தன்னுடைய அனுபவம் நிஜமாகவே நடந்ததா இல்லை கனவா என்று புரியவில்லை. ஜன்னல் பக்கத்தில் தலையை நீட்டிய எலி சிரித்துக் கொண்டே நகர்ந்தது.
வங்கி வேலை, கணித ஆசிரியை அவதாரங்களுக்குப் பிறகு இப்போது எழுத்தாளர். அதுவும் சிறுவர் கதைகள் எழுத மனதிற்குப் பிடிக்கிறது. மாயாஜாலங்கள், மந்திரவாதி கதைகள் எழுத ஆசை. பூஞ்சிட்டு இதழ் மூலமாக உங்களுடன் உரையாடத் தொடர்ந்து வரப் போகிறேன். மகிழ்ச்சியுடன் நன்றி.