“குமரா, ஸ்கூல் பஸ் வர டயம் ஆச்சு. இன்னுமா ரெடியாகலை நீ? ராகவி, அவனோட ஸ்கூல் பேக்கில லஞ்ச் பாக்ஸ் வச்சுட்டயா?” என்று மகன் குமரனையும் மனைவி ராகவியையும் ஒரே சமயத்தில் கேள்விகள் கேட்டார் மகேந்திரன்.

fathermanthiram

“இதோ ரெடியாயிட்டேன்பா” என்று சொல்லிக் கொண்டே யூனிஃபார்ம் அணிந்த குமரன், மகேசன் எதிரே வந்து நின்றான். ராகவியும் கையில் லஞ்ச்பாக்ஸைக் கொண்டு வந்து குமரன் கையில் தர, அவனும் அதை பேக்கில் வைத்துக் கொண்டு கிளம்பினான்.

குமரன் சிறியவனாக இருந்தாலும் பெரியோர் பேச்சைக் கேட்டு நடக்கும் நல்ல குணம் கொண்ட சிறுவன். நிலைமையைப் புரிந்து கொண்டு நடக்கும் பொறுப்பான குழந்தை.

“அப்பா, ஒரு ஸயன்ஸ் காப்பி வாங்கணும். பணம் தரீங்களா?”

“போனவாரம் தானே வாங்கினே?”

” அது மேத்ஸ் காப்பிப்பா. இது நேத்து தான் தீந்தது”

“சரி, இந்தா பணம் வச்சுக்கோ. மிச்சம் இருந்தா சாயந்திரம் அம்மாட்ட கொடுத்துரு”

“சரிப்பா. பைம்மா. பைப்பா. குட் டே”

என்று சொல்லி விட்டுக் குமரன் ஸ்கூலுக்குக் கிளம்பிச் சென்றான்.

அவன் போனதும் ராகவியும் மகேந்திரனும் குமரனின் ஸ்கூலைப் பற்றிப் பேச ஆரம்பித்தார்கள். நல்ல பள்ளி என்ற காரணத்தால் தீவிர முயற்சி செய்து அட்மிஷன் வாங்கியதோடு ஸ்கூலுக்குப் பக்கத்திலேயே வீட்டையும் அவர்கள் மாற்றிக் கொண்டார்கள். குமரன் ஒரே பையன் என்பதால் அவன் கல்வியில் அதிக அக்கறை எடுத்துக் கொள்கிறார்கள். செலவைப் பற்றி அதிகம் கவலைப்படுவதில்லை. இரண்டு பேரும் வேலைக்குப் போவதால் நன்றாகவே சமாளித்து விடுகிறார்கள். ஆனால் செலவெல்லாம் திட்டமிட்டுத் தான் செய்கின்ற வழக்கம். அனாவசியச் செலவுகள் கிடையாது. சேமிப்பின் அவசியம் தெரிந்து தங்கள் மகனையும் அதற்கு ஏற்றாற் போல் வளர்த்து வருகிறார்கள். இரண்டு பேரும் ஆஃபிஸுக்குத் தயாரானார்கள்.

“ஏங்க, 500 ரூக்குச் சில்லறை இருக்கா? என்னோட பர்ஸில சில்லறையே இல்லை. பத்து ரூ, அஞ்சு ரூபாயாக் கொஞ்சம் வேணும்” என்றாள் ராகவி.

தன்னுடைய பர்ஸையும் பார்த்த மகேந்திரன், “எங்கிட்டயும் கம்மியாத் தான் இருக்கு. ஒரு காரியம் செய்யலாம். குமரனோட உண்டியலைக் கொண்டு வா. அதில நெறைய சில்லறை இருக்கும். சில்லறையை எடுத்துக்கிட்டுப் பணத்தை வச்சுரலாம்” என்று சொல்ல, ராகவி உண்டியலை எடுத்து வர உள்ளே போனாள்.

சேமிப்பின் அவசியத்தை உணர்த்த சிறு வயதில் இருந்தே உண்டியல் பழக்கத்தைக் குமரனுக்கு அவர்கள் ஏற்படுத்தி வைத்திருந்தார்கள். பண்டிகை சமயங்களில் கிடைக்கும் பணத்தையும், தாத்தா, பாட்டி போன்ற வீட்டுப் பெரியவர்கள் தரும் பணத்தையும் உண்டியலில் போட்டு வைக்கும் வழக்கத்தையும் அவனுக்கு ஏற்படுத்தியிருந்தார்கள். கணிசமாகச் சேர்ந்ததும் வங்கியில் அவன் பெயரில் கணக்கு ஆரம்பிப்பதாக ஐடியா.

உண்டியலைக் கொண்டு வந்து திறந்து பார்த்தால் காலியாக இருந்தது. திடுக்கிட்டுப் போனார்கள் இரண்டு பேரும்.

“என்னங்க இது? பணமெல்லாம் எங்கே போயிருக்கும்?  வேற எங்கயாவது வச்சிருப்பானோ? சாயந்திரம் வந்ததும் கேக்கலாமா?” என்று கவலையுடன் ராகவி கேட்க, மகேந்திரன் வேண்டாமென்று கூறினார்.

“இல்லைம்மா. கேக்க வேணாம். அவனாவே சொல்லட்டும். கொஞ்ச நாளா அவன் ஏதாவது காரணம் சொல்லிப் பணம் அடிக்கடி வாங்கற‌ மாதிரி தோணுது. நம்ம பையன் தப்பு பண்ணமாட்டாங்கற‌ நம்பிக்கை மனசில இருந்தாலும் என்னன்னு கண்டுபிடிக்க வேண்டியது அவசியம்” என்றவர் யோசனையில் ஆழ்ந்தார்.

அன்று சாயந்திரம் ஆஃபிஸில் இருந்து வந்ததும் குமரனிடம் 100 ரூயைக் கொடுத்தார் மகேந்திரன்.

“இந்தா குமரா. இந்தப் பணத்தை உன்னோட உண்டியலில போட்டுக்கோப்பா” என்று கொடுத்தவர் அப்போதாவது குமரன் ஏதாவது சொல்லுவானா என்று பார்த்தார். குமரன் பதில் சொல்லவில்லை. அமைதியாகப் பணத்தை வாங்கிக் கொண்டு உள்ளே போய்விட்டான்.

மகேந்திரனுக்கும் ராகவிக்கும் கவலை பெருகியது மனதில். தங்களுடைய நண்பர்களிடம் வெளிப்படையாகக் கேட்காமல் குழந்தைகளுக்காகும் செலவு பற்றிப் பொதுப்படையாகப் பேச அவர்கள் வீட்டிலும் இதே போல நடப்பது தெரிய வந்தது. அவர்களுடைய குழந்தைகளும் குமரன் படிக்கும் அதே ஸ்கூலில் படிப்பவர்கள் தான். இங்கே அருகருகே தான் அவர்களுடைய வீடுகளும் இருந்தன.

இந்தக் குழப்பத்திற்கு முடிவு கட்ட நினைத்த மகேந்திரன் அன்று மாலை ஆஃபிஸில் இருந்து சீக்கிரம் கிளம்பிக் குமரனின் ஸ்கூல் எதிரே ஒரு மரத்தின் கீழ் நின்று கொண்டு பார்த்துக் கொண்டிருந்தார்.

இப்போதெல்லாம் குமரன் ஸ்கூலில் இருந்து வர தினமும் லேட்டாகிறது. மகேந்திரனின் மற்ற நண்பர்களும் அதையே தான் சொன்னார்கள். தங்கள் குழந்தைகளும் சில நாட்களாக சாயந்திரம் லேட்டாக வருவதாகச் சொன்னார்கள்.

குழந்தைகளை அவர்களுக்குத் தெரியாமல் வேவு பார்ப்பது தவறு என்று மனதில் தோன்றினாலும் குழந்தைகள் தவறு செய்தால் திருத்தவேண்டியது பெற்றோரின் கடமையல்லவா என்று மனதை சமாதானப் படுத்திக் கொண்டார் மகேந்திரன்.

குமரனும் அவனுடைய வீட்டுக்கே அருகே வசிக்கும் மூன்று நண்பர்களுமாகச் சேர்ந்து பேசிக் கொண்டே நடக்க ஆரம்பித்தார்கள்.

வழியில் இருந்த ஒரு பூங்காவில் அவர்கள் நுழைய மகேந்திரனும் சற்று இடைவெளி விட்டு அவர்களைத் தொடர்ந்து வந்துகொண்டிருந்தார்.

பூங்காவில் ஒரு பெஞ்சில் உட்கார்ந்து யாருக்காகவோ நான்கு பேரும் காத்துக் கொண்டிருந்தார்கள். ஒரு சிறுவன் ஸ்கூல் பேக்குடன் அவசர அவசரமாக அவர்கள் அருகில் வந்து நின்றான். அவர்கள் பேசுவது கேட்கும் தூரத்தில் மகேந்திரன் நின்று கொண்டு கவனித்தார். சிறிது நேரத்தில் மனதில் இருந்த குழப்பங்கள் தீர்ந்து வீட்டுக்குத் திரும்பினார்.

இரவு உணவை மகேந்திரன் வீட்டில் மூன்று பேரும் முடித்து விட்டு வரவேற்பறையில் உட்கார்ந்து டி.வி. பார்த்துக் கொண்டிருந்தார்கள். வாசலில் காலிங் பெல் சத்தம் கேட்டுக் குமரன் சென்று கதவைத் திறந்தான்.

அவனுடைய மூன்று நண்பர்களும் அவர்களுடைய பெற்றோரும் தான் திடீர் விஸிட். ஆச்சர்யத்துடன் உள்ளே அழைத்து வந்தான். எல்லோரும் சேர்ந்து உட்கார்ந்து பேச ஆரம்பித்தார்கள்.

“குமரா, நீங்க நாலு பேரும் எங்களுக்கெல்லாம் தெரியாம செய்யற காரியம் என்னன்னு நான் இன்னைக்குக் கண்டுபிடிச்சுட்டேன். சாயந்திரம் பார்க்கில உங்களைப் பாத்தேன். என்ன நடக்குதுன்னு உன்னோட வாயாலேயே விளக்கமாச் சொல்லு” என்று கண்டிப்புடன் பேச முதலில் தலை குனிந்த குமரன் தலைநிமிர்ந்து பேச ஆரம்பித்தான்.

“அப்பா, நீங்க பாத்த அந்தப் பையன் பேரு கதிர். அவங்க அப்பாவுக்கு உதவியாக் கதிரும் எங்க ஸ்கூல் கேண்டீனில் வேலை பாத்துட்டிருந்தான். வீட்டில வருமானம் பத்தலைன்னு அவனோட‌ படிப்பை நிறுத்திட்டாரு அவங்க அப்பா. கதிருக்குப் படிக்க ரொம்ப ஆசைப்பா. அதுனால நாங்க நாலு பேருமாச் சேந்து அவனோட அப்பாட்டப் பேசிப் புரிய வச்சோம். அவரும் அவனை கவர்ன்மென்ட் ஸ்கூலில சேக்க ஒத்துக்கிட்டாரு. ஆனா அவங்க குடும்பம் ரொம்ப ஏழைக் குடும்பம். கதிரோட படிப்புக்குன்னு அவங்களால செலவு பண்ண முடியல. நாங்க நாலு பேரும் எங்க கிட்ட உண்டியலில இருக்கற பணத்தைக் கொஞ்சம் கொஞ்சமா அவங்களுக்கு மாசாமாசம் கொடுக்க ஆரம்பிச்சோம். அவனுக்கு எங்களோட பழய ட்ரஸ் எல்லோமே கொடுக்கறோம். ஸ்கூலுக்குத் தேவையான நோட்புக்கெல்லாம் தீந்து போச்சுன்னா நாங்க வாங்கித் தரோம். சாயந்திரம் அவனுக்குப் பாடம் சொல்லிக் கொடுத்துட்டு வீட்டுக்கு வரோம்” என்று சொல்லி முடிக்கப் பெரியவர்களின் கண்கள் கலங்கின. தங்கள் பிள்ளைகளை நினைத்துப் பெருமையாக இருந்தது.

“நாங்க செஞ்சது தப்பாப்பா?” என்று கலங்கிய கண்களுடன் குமரன் கேட்க மகேந்திரன் பதில் சொன்னார்.

“தப்பு தான். உண்மையை எங்க கிட்டச் சொல்லாம மறைச்சது தப்பு. பொய் சொல்லிப் பணம் வாங்கிட்டுப் போனதும் தப்பு தான்” என்றார். நான்கு சிறுவர்களும் வருத்தத்துடன் தலை குனிந்து நின்றார்கள்.

“ஆனா நீங்க செஞ்சது ரொம்ப நல்ல காரியம். அதுக்காக உங்களைப் பாராட்டறோம். இனிமே அந்தக் கதிரோட படிப்புச் செலவை நாம நாலு குடும்பமுமாச் சேந்து ஏத்துக்கறோம். அவனோட படிப்பு தடையில்லாமத் தொடரட்டும். கதிரோட அப்பாவுக்கு எங்க ஆஃபிஸில வேற நல்ல வேலையா வாங்கித் தரேன். ஸ்கூல் காண்டீனில அவங்க அம்மா இனிமே வேலை பாக்கட்டும். இனிமே அவங்க குடும்பத்துக்குத் தேவையான உதவிகளை நாம எல்லோருமாச் சேந்து செய்யலாம். சரியா?” என்று சொல்ல அந்தக் குழந்தைகள் மகிழ்ச்சியுடன் வந்து பெற்றோரைக் கட்டிக் கொண்டார்கள்.

“ஆனா ஒரு கண்டிஷன். நீங்க எல்லோரும் இனி பொய் சொல்லக் கூடாது. அம்மா, அப்பா கிட்டயிருந்து எந்த விஷயத்தையும் மறைக்கக் கூடாது. இதற்கும் சரி சொல்லுவீங்களா?” என்று கேட்க சந்தோஷத்துடன், “யெஸ்” என்று அந்தக் குழந்தைகள் கத்தினார்கள்.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
Subscribe
Notify of
guest
0 கருத்துகள்
Inline Feedbacks
View all comments