“அப்பா அப்பா! இங்க பாருங்கப்பா.. பீமா நகத்தாலே என் கையில கீச்சி விட்டுட்டான் பா” என்றாள் பீமாவின் தங்கை மித்ரா.
“ரெண்டு பேரும் ஒண்ணா தானே டிவி பார்த்துகிட்டு இருந்தீங்க? அப்புறம் என்ன சண்டை?” என்றபடியே அப்பா அருகில் வந்து அமர்ந்தார்.
“வேணும்னே செய்யலப்பா.. தெரியாம அவ கிட்ட இருந்து ரிமோட்டை வாங்கும் போது என் நகம் அவ கையில பட்டிடுச்சு”
“ரொம்ப நீளமா நகம் வச்சிருக்கான் பா பீமா” என்று குற்றம் சாட்டினாள் மித்ரா.

“இவ நகத்தைக் கடிச்சு, கடிச்சு துப்புறா.. அதனால் அவளுக்கு நகம் வளர மாட்டேங்குது” பதிலுக்கு பீமாவும் மித்ராவைப் பற்றிக் குறை கூறினாள்.
“இங்க வாங்க.. ரெண்டு பேர் கையையும் நீட்டுங்க.. ம்.. ஆமா மித்ரா நகத்தைக் கடிச்சுக் கடிச்சு விரல்ல பள்ளம் மாதிரி இருக்கு.. பீமா நகம் நிறைய வளத்திருக்க.. அது போக நகத்தில் அழுக்குகளும் நிறைய இருக்கு.. ஏன் இப்படி? ஞாயிற்றுக்கிழமை தோறும் ஒழுங்கா நகம்வெட்டிப்பீங்க இல்ல? ஏன் இப்ப வெட்டல?” என்று அப்பா கேட்க,
“அதுவாப்பா? ஸ்கூல் இருந்தா திங்கட்கிழமை அன்னிக்கு மிஸ் செக் பண்ணுவாங்க.. இப்ப தான் ஸ்கூல் இல்லையே.. அதான் வெட்டல்” என்றான் பீமா.
“பள்ளிக்கூடத்துல செக் பண்ற பழக்கம் வச்சிருக்கிறது நம்ம ஆரோக்கியத்துக்காகத் தான்.. இவ்வளவு நீளமா நகம் வச்சிருந்தா இதேமாதிரி எங்காவது பட்டு காயமாயிடும். லேசா அரிப்பெடுத்தாக் கூட நீளமான நகத்தால சொரிஞ்சா ரத்தம் வரும். அந்த நகத்துக்குள்ள இருக்குற அழுக்கால பல கிருமிகள் உடம்பைத் தாக்கும். சாப்பிடும் போது இந்த அழுக்கு உள்ள போனா வயித்துக்குள்ள புழுக்கள், வயிற்றோட்டம் இதெல்லாம் ஏற்படும். அதே மாதிரி நகத்தக் கடிச்சாலும் தப்புதான். இதனால உங்க வளர்ச்சி, ஆரோக்கியம் ரெண்டுமே பாதிக்கப்படும். இப்ப நகவெட்டி கொண்டு வா பீமா! நான் நகம்வெட்டி விடுறேன்” என்று அப்பா கூற, பீமா ஓடிப்போய் நகவெட்டி கொண்டு வந்தான்.
“மித்ரா! இன்னிக்கோட நீயும் நகம் கடிக்குற பழக்கத்தை விடணும்.. அடுத்த வாரம் இரண்டு பேரும் இதே நாள் அன்னிக்கு நகம் வெட்டிக்கணும். சரியா?” என்றார் அப்பா.
“சரிப்பா!” என்றனர் மித்ராவும் பீமாவும்.
Nalla karuththu, padiththathum nagam Betta thonrum