நரியும் சேவலும்

ஒரு ஊரில் ஒரு நரியும், சேவலும் வாழ்ந்து வந்தன.  இரண்டுமே தந்திரத்துக்குப் பெயர் போனவை.  அவை இரண்டும் ஒரு நாள் சந்தித்துப் பேசத் துவங்கின.  

“ஒனக்கு எத்தனை தந்திரம் தெரியும்?” என்று நரி, சேவலிடம் கேட்டது.

“முயன்றால், நான் மூன்று செய்வேன்.  உன்னால் எத்தனை முடியும்?” என்று சேவல் கேட்டது.

“நான் 63 செய்வேன்,” என்றது நரி.

“அதுல கொஞ்சம் சொல்லு, பார்ப்போம்,” என்றது சேவல்.

“நான் என்னோட இடது கண்ணை மூடிக்கிட்டு, சத்தமாக் கத்துவேன்.  எல்லா மிருகத்தாலேயும், அந்த மாதிரி செய்ய முடியாது” என்றது நரி. .

“ஃபூ. இவ்ளோ தானா? இது ரொம்ப சுலபம்” என்றது சேவல்.

“எங்கே செஞ்சு காட்டு; ஒன்னால செய்ய முடியுதான்னு, நான் பார்க்கிறேன்” என்றது நரி.

சேவல் அதன் இடது கண்ணை மூடிக் கொண்டு, ‘கொக்கரக்கோ,’ என்று சத்தமாகக் கூவியது.

படம் : அப்புசிவா

ஆனால் நரி பக்கமிருந்த தன் கண்ணைச் சேவல் மூடிக்கொண்டு கத்தியதால், யோசிப்பதற்குள்,  நரி அதன் கழுத்தைத் தன் வாயில் கவ்விப் பிடித்துக் கொண்டு, அதன் குகைக்குப் போகக் கிளம்பியது.

விவசாயியின் மனைவி, அதைப் பார்த்துவிட்டு,  “அந்தச் சேவலை விடு.  அது என்னோடது!” என்று நரியைப் பார்த்துக் கத்தினாள்.

“நான் ஒனக்குத் தான் சொந்தம்னு, அவக்கிட்ட சொல்லு,” என்று சேவல் நரியிடம் சொன்னது.

நரி அதைச் சொல்ல வாயைத் திறந்தது.  அவ்வளவு தான்.  சேவல் அதன் வாயிலிருந்து விடுபட்டு,  வேகமாக பறந்து போய், ஒரு மரத்து மேல், நரிக்கு எட்டாத தூரத்தில் அமர்ந்தது.

ஏமாந்த நரி புதருக்கிடையில் போய் மறைந்த பிறகு, சேவல் ஒரு கண்ணை மூடியபடி பெருமிதத்துடன்,  ‘கொக்கரக்கோ!’ எனச் சத்தமாகக் கூவியது.

(ஆங்கிலமூலம்- ஜேம்ஸ் பால்டுவின்)

(தமிழாக்கம் – ஞா.கலையரசி)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *