முயல்களின் கதை

ஒருமுறை, முயல்கள்  தங்கள் வாழ்வில் படும் கஷ்டங்களைப் பற்றிப் பேசுவதற்காக ஒரு கூட்டம் போட்டன.

“எப்பவுமே நம்மளைச் சாவைக் காட்டிப் பயமுறுத்திக்கிட்டே இருக்காங்க.  மனுஷன்லேர்ந்து நாய், கழுகு, நரி வரைக்கும் நம்மளைப் பயத்திலேயே வைச்சிருக்காங்க.  நமக்கு மகிழ்ச்சிங்கிறதே சுத்தமா இல்ல.  அதுக்குப் பேசாம உடனடியா நாம செத்துப் போயிடுறது நல்லது” என்று அந்தக் கூட்டத்தில், முயல்களின் தலைவன் சொன்னது.

“ஆமாம்.  எப்பப் பார்த்தாலும், ஏதாவது நம்மளைப்  பயமுறுத்திச் சோகமா ஆக்குது.  அதனால, ஒடனடியா,  நம்ம உயிரைப் போக்கிக்கிறது, நல்லது” என்று மற்ற முயல்கள் கூறின. 

பாறையிலிருந்து தண்ணீருக்குள் குதித்து, மூழ்கி விடலாமென்று, முடிவு செய்து எல்லா முயல்களும்,  ஒரு குளத்தை நோக்கி, வேகமாக ஓடத் துவங்கின.

அப்போது குளத்தங்கரையில் அமர்ந்து இருந்த தவளைகள், முயல்கள் புல்வெளியில் வேகமாக ஓடி வருவதைக் கண்டன. அதைப் பார்த்து மிகவும் பயந்த போன தவளைகள் ஒவ்வொன்றாகக் குளத்துக்குள் குதித்தன…

அதைக் கண்ட முயலின் தலைவன், “நில்லுங்க! அந்தத் தவளைங்க நம்மளைப் பார்த்துப் பயப்படுறப்  பார்த்தீங்களா?  நம்மளை விட அதுங்க நெலைமை ரொம்ப மோசம்.  அதனால, நாம இன்னும் கொஞ்ச நாளைக்கு உயிரோட வாழலாம்” என்று சொன்னது.

(ஆங்கில மூலம் – ஜேம்ஸ் பால்டுவின்)

(தமிழாக்கம் – ஞா.கலையரசி)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *