சோளமாவு அல்வா ( பாம்பே அல்வா)
‘தாத்தா என்ன பண்றீங்க?’ என்றவாறே வந்தாள் சுனிதா.
“என்னடா கண்ணு, எதுக்கு என்னய தேடுறீங்க”..
“இந்த ராமுவையும் பாட்டியையும் காலைலேர்ந்து தேடுறேன்.. எங்க இருக்காங்கனே தெரியலையே..
“அவங்க ரெண்டு பேரும் வயலுக்குப் போயிருக்காங்க… நீங்க இப்படி வந்து உட்காருங்க… நம்ம ஸ்வீட் எதாவது செஞ்சு சாப்டலாமா? நீங்க சோளமாவு (corn flour) அல்வா சாப்ட்டு இருக்கீங்களா என்றார்.
“சாப்பிடலாம் தாத்தா…அல்வா சாப்ட்டு இருக்கேன். இது என்ன புதுசா இருக்கே தாத்தா. எங்க செஞ்சு குடுங்க பார்ப்போம்”
சரி.. என்றபடி தாத்தா அல்வா செய்ய ஆயத்தமானார்.
* சோளமாவு (corn flour) ஒரு கப் எடுத்துக்கணும். அதுக்கூடவே ரெண்டு கப் தண்ணீர் ஊற்றிக் கரைத்து தனியா வச்சிடனும்.
* அதே அளவு கப்பால இரண்டரை கப் சர்க்கரை வாணலியில் சேர்த்து இரண்டு கப் நீர் ஊற்றி அடுப்பில் வைக்கனும்.
* சர்க்கரை நல்லாக் கரைந்து லேசான பிசுபிசுப்பு வரவும், சோளமாவு கரைசலை அதில் சேர்த்து கலந்து விடவும்.
* அதில் அரை ஸ்பூன் எலுமிச்சைச் சாறு சேர்த்து கலக்கவும். பார்க்க கண்ணாடி போல் வரும். அதை நன்றாக கலந்து விடவும்.
* அதனுடன் food கலர் சேர்த்து கலக்கவும்.. அதைச் சோளமாவுடன் நன்றாகக் கலந்து விடவும்.
* கால் கப் நெய் ஊற்றி அதை நன்றாகக் கலக்கி விடவும். நெய் உள்ளிழுத்துக் கொண்டதும் ஏலக்காய் தூள் சேர்த்து கிளறவும். அதனுடன் மேலும் அரை கப் நெய் சேர்த்துக் கிளறவும்.
* வாணலியில் ஒட்டாமல் சுருட்டி வரும் போது முந்திரி பாதாம் பிஸ்தா போன்றவற்றை சேர்த்து நன்கு கிளறி இறக்கவும்.
* சற்று ஆழம் குறைவான அகலமான பாத்திரத்தில் மாத்தி ஆறியபின், நமக்கு பிடித்த வடிவத்தில் அதை கட் செய்து சாப்பிடலாம்.
ம்ம் இதோ ரெடியாகிட்டு… இந்தாங்க சுனிதா கண்ணு சாப்டு பாருங்க.. எப்படி இருக்கு.
ரொம்ப சுவையாக இருக்கு தாத்தா.. எப்பவும் சாப்டற அல்வாவை விட இது வித்தியாசமா இருக்கு.. என்றபடி இருவரும் உண்டனர்.
பிரதிலிபி தளத்தில் சிறுகதைகள் , குறுநாவல் எழுதிக்கொண்டு இருக்கிறேன். தமிழ் முதுகலை பட்டம் பெற்றுள்ளேன்.