ரொம்ப காலத்துக்கு முன்னாடி சூரியனும், தண்ணியும் நெருங்கிய நண்பர்களா இருந்தாங்க. ரெண்டு பேருமே பூமியில வாழ்ந்தாங்க.
சூரியன் அடிக்கடித் தண்ணியைப் பார்க்க, அது வூட்டுக்குப் போகும். ஆனா தண்ணி சூரியன் வூட்டுக்கு வந்ததே இல்லை..
ஒரு நாள் “என் வூட்டுக்கு, நீ ஏன் வரவே மாட்டேங்கிறே?”ன்னு, சூரியன் தண்ணியைக் கேட்டுச்சு.
“நானும், என்னோட சொந்தக்காரங்களும் வர்ற அளவுக்கு, ஒன் வூடு பெரிசா இல்ல; நாங்க எல்லாரும் அங்க வந்தா, ஒன்னை அந்த வூட்டுலேர்ந்து துரத்திடுவோம்; அப்பிடியும் நான் வரணும்னு, நீ ஆசைப்பட்டா, ரொம்ப பெரிய மதில் சுவரும், வீடும் கட்டி வை. என் மக்கள் நெறைய பேரு இருக்கிறதால, அறையெல்லாத்தையும் எடுத்துக்குவாங்க ஜாக்கிரதை!” அப்படீன்னு தண்ணி சொன்னுச்சு.
‘கண்டிப்பா நான் பெரிய மதில் சுவரும், வீடும் கட்டி வைக்கிறேன்’னு சொல்லிட்டு, சூரியன் வீட்டுக்குப் போச்சு.. அதோட மனைவி, நிலா தான் புன்சிரிப்போட வந்து கதவைத் தொறந்துச்சு.
தன்னோட நண்பன்கிட்ட சொன்னதை, நிலாக்கிட்ட சொல்லிட்டு, மறுநாள்லேர்ந்து, சூரியன் பெரிய மதில் சுவரு கட்ட ஆரம்பிச்சிது.. அது முடிஞ்சவுடனே, வீட்டுக்கு வரச் சொல்லி, சூரியன் தண்ணியைக் கூப்பிட்டுச்சி.
தண்ணி அங்கு வந்தவுடனே, “நான் உள்ளாற வந்தா, ஒனக்குப் பாதுகாப்பா இருக்குமா?”ன்னு சூரியனைக் கேட்டுச்சு.
“வரலாம்; வா”ன்னு, சூரியன் பதில் சொன்னுச்சு.
அதுக்கப்புறம் தண்ணி உள்ள வர ஆரம்பிச்சிது.. அதோட சேர்ந்து தண்ணியில இருந்த மீன், விலங்கு எல்லாம் சேர்ந்து, வீட்டுக்குள்ளாற வந்துடுச்சு.
முழங்கால் அளவு தண்ணி வந்தவுடனே, மறுபடியும் தண்ணி கேட்டுச்சு.. “மேற்கோண்டு நான் வந்தா, ஒனக்குப் பாதுகாப்பா இருக்குமா?”
“ஒன்னும் பிரச்சினையில்ல; உள்ள வா”ன்னு, சூரியன் பதில் சொல்லுச்சு.
மனிதனோட தலையைத் தொடற அளவுக்கு, தண்ணி நிரம்பிடுச்சு. “இனிமேலேயும் என் மக்கள் உள்ள வரணும்னு, நீ விரும்புறியா?”ன்னு தண்ணி கேட்டுச்சு..
“ம். வரலாம்”னு, சூரியன் பதில் சொன்னுச்சு.
அதுக்கப்புறம் தண்ணி வீட்டோட கூரையைத் தொடற வரைக்கும் நிரம்பிடுச்சு.. தண்ணியிலிருந்த மீன், விலங்கு எல்லாம் சேர்ந்து உள்ளாற வந்துடுச்சு.
வீட்டோட கூரைக்கு மேல, தண்ணி போயிட்டதால, அங்க இருக்க முடியாம சூரியனும், நிலாவும் வானத்துக்குப் போயிடுச்சாம். அதுக்கப்புறம் பூமிக்கு வரவேயில்லியாம்; வானத்திலேயே தங்கிடுச்சாம்.
(நைஜீரிய நாட்டுப்புறக்கதை)
(தமிழில் ஞா.கலையரசி)
பெயர் ஞா.கலையரசி. ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியாவில் வேலை செய்து ஓய்வு. புதுவையில் வாசம். ஊஞ்சல் unjal.blogspot.com என் வலைப்பூ. புதிய வேர்கள் எனும் சிறுகதைத் தொகுப்பு வெளியிட்டுள்ளேன்.