முன்னொரு காலத்தில், சிறுமி ஒருத்தி, சீனா பொம்மை ஒன்றை வைத்திருந்தாள். அதன் பெயர், ஜென்னி புளூபெல். அந்தப் பொம்மைக்குக் கருப்பு முடியும், நீலக் கண்களும், ரோஜா நிறக் கன்னங்களும், புன்னகை பூக்கும், வாயும் இருந்தன. கால்களில் இருந்த செருப்புகளில் பூசப்பட்டிருந்த வண்ணம், தங்கம் போலப் பிரகாசித்தது..
அவளுக்கு மற்றெல்லாப் பொம்மைகளையும் விட இந்தப் பொம்மை தான் மிகவும் பிடிக்கும். அதனால் எங்கு சென்றாலும், அதைத் தன் கூடவே எடுத்துச் செல்வாள். தெருவில் நடக்கும் போதும், வண்டியில் சவாரி செய்யும் போதும், அதை எடுத்துக் கொண்டே செல்வாள்.
ஒரு நாள் தன் தம்பியுடன் புல்வெளிக்குப் பூக்கள் பறிக்கச் சென்ற போது, அந்தப் பொம்மையையும் தன்னுடன் எடுத்துச் சென்றாள். அம்மா குழந்தையை வைத்திருப்பது போல, சிறுமியும் அந்தப் பொம்மையைக் கைகளில் தூக்கிக் கொண்டு சென்றாள். புல்வெளியை அடைந்ததும், பூக்களைப் பறிப்பதற்காக, கையிலிருந்த பொம்மையை உயரமாக வளர்ந்திருந்த புற்களுக்கிடையே படுக்க வைத்தாள். பொம்மைக்கு அழகான பஞ்சுமெத்தையாகப் புல்படுக்கை இருந்தது.
“நான் பூ பறிச்சிட்டு திரும்பி வரேன்,” என்று பொம்மையிடம் சொல்லிவிட்டுச் சென்றாள். வீட்டுக்குப் போக வேண்டிய நேரம் வந்த போது, புல்வெளி முழுக்க, ஒரே மாதிரியான புற்கள் வளர்ந்திருந்ததால் தன் பொம்மையை எங்கு வைத்தோம் என்று, அவளுக்குத் தெரியவில்லை..
“இங்க தான் வைச்சேன்னு, நெனைக்கிறேன்; என் பொம்மை, எங்க போச்சு?”
என்று கத்தியபடி, புற்களைக் கைகளால் அசைத்து, அசைத்து ஏக்கத்துடன் கீழே பார்த்தபடி, புல்வெளி முழுக்க ஓடி ஓடித் தேடினாள்.
அவளுடைய குட்டித் தம்பியும் தேடினான். ஆனால் “ஏன் இவ்ளோ நேரம், வீட்டுக்கு வராம இருக்கீங்க?” என்று அவர்களுடைய அம்மா கேட்டவுடன், அவர்கள் பொம்மை இல்லாமல், வீட்டுக்குத் திரும்பும்படி ஆனது
“ஒரு வேளை தேவதைகள், அதைத் தூக்கிட்டுப் போயிருக்கும்” என்று சிறுமி, அழுது கொண்டே சொன்னாள்..
“அல்லது ஒரு முயல் தூக்கிட்டுப் போயிருக்கும்; அப்பா நேத்தி வயல்ல ஒரு முயலைப் பார்த்தாராம்” என்றான், குட்டிப்பையன்
ஆனால் தேவதைகளோ, முயல்களோ, ஜென்னி புளூபெல்லைத் தொடவில்லை. காற்றில் உயரமாக வளர்ந்திருந்த புற்கள், காற்றில் அப்படியும், இப்படியுமாக சாய்ந்து ஆடியதில், பார்வையிலிருந்து பொம்மை மறைந்து போனது சிறுமி எந்த இடத்தில் வைத்தாளோ, அந்த இடத்தை விட்டு, அது நகரவேயில்லை வெயில் காய்ந்து கொண்டிருந்த அந்தப் பிற்பகல் முழுதும் தன்னை யாராவது கண்டுபிடித்துவிடுவார்கள் என்று நம்பிக் கொண்டிருந்தது, ஜென்னி. ஆனால் இருட்டத் துவங்கிய பிறகும் யாரும் வரவில்லையென்றவுடன் தனிமை அதை வாட்டியது.
“நான் இரவு முழுவதும், என் கண்களை மூடவே மாட்டேன்” என்று ஜென்னி சொல்லிவிட்டு, அப்படியே விழித்திருந்தது. காலையில் பண்ணையில் சேவல் வந்து கூவிய போதும், அதன் கண்கள் விரியத் திறந்திருந்தன. வானில் முதல் நாள் இரவு, முதல் விண்மீன் மின்னிய போது, அதன் கண்கள் எப்படி விரிய திறந்திருந்ததோ, அப்படியே தான் காலையில் சேவல் கூவிய போதும் இருந்தன.
காலையில் வெளிச்சம் வந்தவுடன், புல்வெளியில், ‘ஸ்விஷ்! ஸ்விஷ்!’ என்ற சத்தம் கேட்டது. அந்தக் குழந்தைகளின் அப்பா, கூரிய அரிவாளால் புற்களை வெட்டிக் கொண்டிருந்தார் அவர் பொம்மையைச் சுற்றி வளர்ந்திருந்த புற்களை வெட்டி, அதன் மேல் குவியலாகப் போட்டவுடன், அவ்வளவு தான்; தனக்கு முடிவு வந்து விட்டது என்று ஜென்னி நினைத்தது.
“என்ன நடக்குது ஒலகத்துல?” என்று புல் குவியலுக்குள் விழுந்துவிட்ட வெட்டுக்கிளியிடம், ஜென்னி கேட்டது.
“அதைத் தான் நானும், தெரிஞ்சிக்கணும்னு விரும்புறேன்” என்று சொன்ன வெட்டுக்கிளி கஷ்டப்பட்டு வெளியில் வந்து வெயிலை நோக்கிப் பறந்து சென்றது. அதற்குப் பிறகு அது திரும்பி வரவேயில்லை.
குழந்தைகள் அன்று முழுதும், பொம்மையைத் தேடி வரவேயில்லை; மறுநாளும் வரவில்லை. தன்னைக் கண்டுபிடிப்பார்கள் என்ற நம்பிக்கை ஜென்னிக்குப் போய்விட்டது.
“அவங்களோட பாட்டி, தாத்தா வீட்டுக்குப் போயிருப்பாங்க; அதைப் பத்தி அவங்க பேசிக்கிட்டிருந்ததை, நான் கேட்டேன். அவங்க என்னை மறந்துட்டாங்க. நான் மறுபடியும் அவங்களைப் பார்க்கவே போறதில்லை” என்று பொம்மை சொன்னது.
ஆனால் அன்று பிற்பகல், அவர்கள் தம் அப்பாவிற்கு உதவி செய்வதற்காகப் புல்வெளிக்கு வந்தார்கள். அவர் வெட்டிப் போட்டிருந்த புல் குவியல், வெயிலில் நன்கு, காய்ந்து, நல்ல வாசனையான வைக்கோலாக மாறி இருந்தது வைக்கோலைச் சேகரித்துக் கொண்டே, தாத்தா வீட்டில் நடந்தவற்றைப் பற்றி, அவர்கள் பேசிக் கொண்டிருந்தார்கள். அவர்கள் பேசியது முழுக்க ஜென்னிக்கு நன்றாகக் கேட்டது.
“தாத்தாவின் குதிரைக்குத் தண்ணீர் தருவதற்காக, நானே இருமுறை ஓட்டிச் சென்றேன்” என்றான் குட்டிப்பையன்
“நான் தான் பாட்டியின் கோழிகளுக்குத் தினமும், சோளத் தீனி வைத்தேன்” என்றாள் சிறுமி.
“தாத்தா வயலில் சோளம் பயிரிடுகிறார்; அதன் வைக்கோலை அறுத்துச் சேகரிக்க வேண்டும்” என்றான் தம்பி.
“எனக்கு வைக்கோலை அறுத்துச் சேகரிக்கப் பிடிக்கும். இந்த இடத்தை முழுக்க சுத்தம் செஞ்ச பிறகு, ஜென்னி கிடைக்கலாம்னு, அம்மா சொன்னார்” என்றாள் சிறுமி.
ஆஹா! அவள் அப்படிச் சொன்னதைக் கேட்ட போது, ஜென்னியின் இதயம் மகிழ்ச்சியில் துள்ளிக் குதித்தது. நீங்கள் நம்புவீர்களா? அடுத்த நிமிடம் அவளை மூடியிருந்த வைக்கோல் குவியல், பக்கத்தில் சரிந்து விழுந்து, சிறுமியின் கண்களுக்கு முன்னால், நேராக பொம்மை படுத்திருந்தது, தெரிந்தது.
“ஓ! ஓ! இதோ என்னோட விலை மதிப்பில்லாப் பொம்மை! என் வாழ்க்கையில, இதை விட மகிழ்ச்சியான நேரம் வேற இல்ல” என்று கத்தினாள் சிறுமி.
வாயைத் திறந்து, ஒரு வார்த்தை சொல்லாவிட்டாலும், ஜென்னியும் மகிழ்ச்சியாகப் புன்முறுவல் பூத்தது.
ஆங்கில மூலம்:- மாட் லிண்ட்ஸே (MAUD LINDSAY)
பெயர் ஞா.கலையரசி. ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியாவில் வேலை செய்து ஓய்வு. புதுவையில் வாசம். ஊஞ்சல் unjal.blogspot.com என் வலைப்பூ. புதிய வேர்கள் எனும் சிறுகதைத் தொகுப்பு வெளியிட்டுள்ளேன்.