சிட்டு கடந்த இரண்டு மாதங்களாக டைனோசர் கதை சொல்ல வராததால் அதற்கு என்ன ஆயிற்றோ என்ற கவலையில், சிறுவர்கள் ஆழ்ந்திருந்தனர்.

“இன்னிக்காவது சிட்டு வருமான்னு தெரியலை?” என்று கவலையுடன் கயல் சொன்னாள்.

“இன்னிக்கு எப்பிடியும் வந்துடும்னு தான் நெனைக்கிறேன்?” என்றான் பாபு நம்பிக்கையுடன்.

“சிட்டுக்கிட்ட மொபைல் இருந்தா எவ்ளோ நல்லாயிருக்கும்! ஏன் வரலைன்னு கேட்டிருக்கலாம்” இது மலர்.

“தோ வந்துட்டேன்!” என்று சொன்னபடி, சிட்டு பறந்து வந்து, கதை சொல்லும் மேடையில் அமர்ந்தது. அதைப் பார்த்தவுடன், சிறுவர்கள் அனைவருக்கும் மகிழ்ச்சி தாங்கவில்லை.

“ஒனக்கு என்னாச்சு? ஏன் ரெண்டு மாசமா வரலே? ஒன்னைப் பார்க்காம எங்களுக்குக் கவலையாயிடுச்சி!  ஒன்னை ரொம்பவே மிஸ் பண்ணினோம்” என்றான் கதிர்.

“திடீர்னு கொஞ்சம் ஒடம்பு சரியில்லாமப் போயிடுச்சி.  ஒங்களைப் பார்க்காம, என்னாலேயும் இருக்க முடியல; நானும் ஒங்க எல்லாரையும் ரொம்ப மிஸ் பண்ணினேன்”. 

“ஒடம்பு இப்ப நல்லாயிடுச்சா?” இது வினோத்.

“ம். நல்லாயிடுச்சி”

“இன்னிக்கு முடிஞ்சா கதையைச் சொல்லு;  இல்லேன்னா, அடுத்த மாசம் பார்த்துக்கலாம்” என்றான் முத்து.

“இல்லயில்லை; சொல்லணும்னு தான், இன்னிக்கு வந்திருக்கேன்”

“ஓகே சொல்லு, சொல்லு” என்று, குழந்தைகள் கதை கேட்கும் ஆவலில் வட்டமாக அமர்ந்தனர்.

“தாவர உண்ணி (Herbivorous) வகையில, நாம அடுத்ததாப் பார்க்கப் போற டைனோசர், அப்பட்டோசரஸ் (Apatosaurus).  இதுக்கு பிராண்டோசரஸூன்னு (Brontosaurus)  இன்னொரு பேரும் இருக்கு”

appatosaurus
Pic Source Thanks – Wiimedia.com

“அதெப்படி? இந்த டைனோசருக்கு மட்டும், ரெண்டு பேரு?” மலர் கேட்டாள்.

“நமக்குப் பள்ளிக்கூடத்துல ஒரு பேரு, வூட்டுல செல்லமாக் கூப்பிட, ஒரு பேருன்னு, ரெண்டு இருக்குல்ல,அது மாதிரியா?” என்றான் கதிர்.

“அப்படியில்ல.  மொதல்ல ஒரு டைனோசரோட புதைபடிவத்தைக் (Fossil) கண்டுபிடிச்சப்ப, அதுக்கு அப்பட்டோசரஸூன்னு, பேரு வைச்சிட்டாங்க.  அதுக்கப்புறம், இன்னொரு டைனோசரோட புதைபடிவம் கிடைச்சுது.  அது வேற வகைன்னு நெனைச்சி, பிராண்டோசரஸூன்னு புது பேரு வைச்சாங்க. இந்தப் பேருக்கு இடி பல்லி (Thunder Lizard) ன்னு அர்த்தமாம்” 

“இடி பல்லியா? அப்படீன்னா, இது கத்தினா,  இடி இடிக்கிற மாதிரி சத்தம் கேட்குமா?” முத்து கேட்டான்.

“இல்ல. இதோட பெரிய ஒடம்பைத் தூக்கிட்டு, அடி எடுத்து வைச்சி நடந்தா, இடி இடிக்கிற மாதிரி சத்தம் கேட்கும்னு நெனைச்சி வைச்சாங்களாம்..  ஆனா அதுக்குப்புறம் நல்லா ஆராய்ச்சி பண்ணிப் பார்த்தப்ப தான், ரெண்டும் ஒரே வகை டைனோசரோட புதைபடிவம்னு தெரிஞ்சுது.  அதனால ரெண்டு பேரையும் ஒன்னாக்கிட்டாங்க.  எனவே இந்த டைனோசருக்கு மட்டும், ரெண்டு பேரு.  ரெண்டாவதா வைச்ச (Brontosaurus) பேரை, முதல் பேருக்குப் பின்னால அடைப்புக்குள்ள போட்டுட்டாங்க”

“ஓஹோ! இப்பப் புரியுது” என்று தலையாட்டினான், வினோத்.

“சரி இதோட சிறப்பு என்ன?  மத்த டைனோசர்லேர்ந்து இது எப்பிடி வேறுபடுது?” என்றாள் கயல்.

“நல்ல கேள்வி கயல்! இதுவும் பிரும்மாண்டமான தாவர உண்ணி டைனோசர் தான். ஜூராசிக் காலத்தோட பின்பகுதியில இது வாழ்ந்திருக்கு.  இதோட தனிச்சிறப்பு, சாட்டை மாதிரியான நீண்ட வால் தான். இந்த வாலுல மட்டும், 80 எலும்பு இருந்துச்சாம்.  இது ஒடம்போட நீளம் 70 அடி! அதாவது 21 மீட்டர்!  6 மீட்டர் உயரம்! அஞ்சு பெரிய யானையோட எடை!  ஆனா தலை ரொம்பச் சின்னது! இந்த நீளமான வால் மூலமாத் தான்,  ‘பாலன்ஸ்’ பண்ணி நடக்க முடிஞ்சிருக்குது..  வால் இல்லேன்னா, தலையையே மண்ணுல இருந்து தூக்க முடிஞ்சிருக்காது!”

“ஏ அப்பா! அதோட உருவத்தைக் கற்பனை பண்ணிப் பார்க்கவே, ரொம்ப பிரமிப்பாயிருக்கு!” என்றான் முத்து.

“டைனோசரோட இடுப்பெலும்பு அமைப்பை வைச்சி, பல்லி இடுப்பு வகை (Lizard-hipped), பறவை இடுப்பு வகை (Bird-hipped) ன்னு, இரண்டு பெரிய பிரிவாப் பிரிக்கிறாங்க. இந்தப் பல்லியிடுப்பு (Lizard hipped dinosaurs)  டைனோசர் வகையோட பேரு சாரிஸ்சியா (Saurischia).

இந்த வகையில ரெண்டு காலால நடக்குற டைனோசருக்கு தெரோபோடு (Theropod) ன்னு பேரு. நாலு காலால நடக்குறதுக்கு, சாரோபோடு (Sauropod) ன்னு பேரு. மற்ற விலங்குகளைக் கொன்னு, இறைச்சியைத் திங்கிற (Meat eating) டைனோசர் எல்லாமே, தெரோபோடு(Theropod) வகையைச் சேர்ந்தது தான்”

“இதெல்லாம் ஏற்கெனவே எங்களுக்குச் சொன்ன விஷயம் தானே?  மறுபடியும் ஏன் சொல்றே?” கயல் கேட்டாள்.

“மறந்திருப்பீங்களோன்னு நெனைச்சி நினைவுபடுத்துறதுக்காகச் சொன்னேன். இந்தப் பறவை இடுப்பு வகையில, ஆர்னித்திசியன் (Ornithischian) (bird hipped) டைனோசர்னு ஒரு வகை இருக்கு.  இதுவும் தாவர உண்ணி தான். பறவை இடுப்பெலும்பு மாதிரி இதுக்கும் இருந்ததால இந்தப் பேரு வைச்சிருக்காங்க. ஆனா இதுக்கும், பறவையினத்துக்கும் சம்பந்தம் இல்ல.  நான் ஏற்கெனவே சொன்ன மாதிரி,  பறவை இனம் தெரோபோடு (Theropod) டைனோசர் வகையிலேர்ந்து தோன்றுச்சுன்னு நினைவு வைச்சிக்கிறது முக்கியம்”      

“அது எங்களுக்கு நல்லா ஞாபகம் இருக்கு,” என்றான் பாபு.

“ஓகே.  இன்னிக்கு இது போதும்.  மத்த விஷயங்களை அடுத்த மாசம் சொல்றேன்.  ‘டாட்டா’, ‘பை பை’ என்று சொன்னபடி, சிட்டாகப் பறந்தது சிட்டு.   

பதிலுக்குக் குழந்தைகளும் டாட்டா காட்டிவிட்டு, அவரவர்கள் வீட்டுக்குக் கிளம்பினர். 

என்ன குழந்தைகளே! சிட்டு சொன்ன டைனோசர் கதை, ஒங்களுக்குப் பிடிச்சிருக்கா?  உங்கள் கருத்துகளை, எழுத வேண்டிய முகவரி:- feedback@poonchittu.com

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
Subscribe
Notify of
guest
0 கருத்துகள்
Newest
Oldest Most Voted
Inline Feedbacks
View all comments