அன்று குழந்தைகள் அனைவரும் மாலை 5 மணியளவில் பூங்காவுக்கு வரவும், சிட்டு பறந்து வந்து மரக்கிளையில் அமரவும், சரியாக இருந்தது.  கொரோனா இரண்டாவது அலை பரவல் பற்றி, எல்லோரும் கவலையோடு சிறிது நேரம் பேசிவிட்டு, இடைவெளி விட்டு வட்டமாக அமர்ந்தனர்.

“இன்னிக்கு உங்களுக்குச் சொல்லப் போற டைனோசர் பேரு, இக்வாநடான் (Iguanodon).  இதுவும் தாவரவுண்ணி (Herbivorous) தான். ஜூராசிக் காலத்தோட பிற்பகுதியிலும், கிரிட்டேஷியஸ் காலத்தோட முற்பகுதியிலும் வாழ்ந்திருக்கு.  ஐரோப்பா, வட அமெரிக்கா, வட ஆப்பிரிக்கா, ஆஸ்திரேலியா, ஆசியான்னு பல கண்டங்கள்ல இதோட புதைபடிவம் (Fossils) கெடைச்சிருக்கு.  இதுவும் 30 அடி நீளமுள்ள பெரிய டைனோசர் தான்.   தாவரவுண்ணி டைனோசர், ஊனுண்ணி (Carnivorus) டைனோசரை விட, ஏன் உருவத்துல பெருசாயிருக்குன்னு, ஏற்கெனவே ஒங்களுக்குச் சொல்லியிருக்கேன்.”  . 

Iguanodon new NT

“ஆமாமாம்.  இலை தழை திங்கிற யானை. உருவத்துல ரொம்ப பெருசாயிருக்கு; வேட்டையாடித் திங்கிற சிங்கம், ஏன் யானையை விட  சின்னதாயிருக்குன்னு, ஏற்கெனவே சொல்லியிருக்கே.  அதெல்லாம் எங்களுக்கு நல்லா ஞாபகமிருக்கு.  நீ மேலே சொல்லு” என்றாள் கயல்.

“ஓகே.  சும்மா ஞாபகம் இருக்கான்னு, டெஸ்ட் பண்ணத்தான் கேட்டேன் இதால ரெண்டு காலால நடக்க முடியும்.  ஆனா பெரும்பாலும் நாலு காலால தான் நடக்கும். பின்னங்கால் முன்னங்காலை விட, நீளம் அதிகம்”.

“இதோட ஸ்பெஷாலிட்டி என்ன? மத்த டைனோசருக்கும் இதுக்கும் என்ன வித்தியாசம்?” என்றான் கதிர்

“இதோட முன்னாடி இருக்குற முன்னங்கால், அதாவது கையில இருக்குற கட்டை விரல் தான் விசேஷம்.  கட்டைவிரல் கூம்பு வடிவில, நுனியில ரொம்ப கூரா இருக்கும். நடுவுல இருக்கிற மூனு விரல் மாடு, குதிரையோட குளம்பு மாதிரி இருக்கும்.  இன்னொரு விரல் பக்கவாட்டுல இருக்கும்.  கூரா இருக்குற கட்டை விரலைக் கொண்டு, தன்னைத் தாக்க வர்ற எதிரிக்கிட்டேயிருந்து தப்பிச்சிருக்கலாம்.  இல்லேன்னா  இலை, தழைகளைக் கெட்டியாப் பிடிச்சிட்டுத் திங்கிறதுக்கும் பயன்பட்டிருக்கலாம்னு ஆராய்ச்சியாளர்கள் நினைக்கிறாங்க”

“இதுக்கு ஒடம்பு மேல கூர் கூராக் கவசம் எதுவும் இல்லே; அதனால தாக்க வர்ற மத்த விலங்குகள்கிட்டேயிருந்து தன்னைக் காப்பாத்திக்கத் தான், இந்த விரல் இப்படிக் கூரா இருந்திருக்கும்” என்றாள் மலர். 

“இருக்கலாம் மலர். நீ நினைக்கிறது சரியாயிருக்க வாய்ப்பிருக்கு. அடுத்து உங்களுக்குச் சொல்லப் போற டைனோசர் பேரு, பேராசொராலபஸ்” (Parasaurolophus)

640px Parasaurolophus walkeri 1

“அச்சச்சோ! பேரே வாயில நுழையாம, ரொம்ப வித்தியாசமாயிருக்கே?” என்றான் முத்து

“ஆமாம் முத்து.  பேரு மட்டுமில்லே; இதோட உருவமும் வித்தியாசமானது தான்.   இதை எளிதா அடையாளம் கண்டுக்கலாம்.  தலைக்கு மேலே கொம்பு மாதிரி, மூக்குத் துவாரத்துலேர்ந்து மூச்சுக்குழாயை இணைக்கிற குழாய் இருக்குது. இதுவழியாக் காத்து மூக்குலேர்ந்து நுரையீரலுக்குப் போகுமாம்.  இதோட முன் தாடைப் பகுதி வாத்தோட தாடை மாதிரி இருக்கிறதால, இதை duck-billed டைனோசர்னு சொல்றாங்க”.

“இப்ப இருக்குற வாத்துக்கும், இதுக்கும் சம்பந்தம் இருக்கா?” என்றான் பாபு.

“ஹூகும்.  பல் இருக்கிற முன் தாடை அமைப்பு வாத்து மாதிரி இருக்கிறதால, அப்படிச் சொல்றாங்க.  மத்தபடி வாத்துக்கும், இதுக்கும் எந்தச் சம்பந்தமும் இல்ல.  நான் ஏற்கெனவே சொன்ன மாதிரி பறவைகளோட மூதாதையர், இறைச்சி தின்ன தெரோபோடு டைனோசர் வகை தான். இந்த பார்க்கிபேராசொராலபஸ் டைனோசர், தாவரவுண்ணி தான். இலை தழை தான் தின்னும்.

பிளாடிபஸ்னு ( Platypus) ஆஸ்திரேலியாவுல ஒரு வித்தியாசமான பாலூட்டி விலங்கு இருக்கு. அதைப் பத்திக் கேள்விப்பட்டிருக்கீங்களா?  அதோட முக அமைப்பும் வாத்து மாதிரி இருக்கும். அதை duck-billed  பிளாடிபஸ்னு சொல்றாங்க”.

“இல்ல சிட்டு. இப்ப தான் கேள்விப்படறேன்”;  என்றான் வினோத்.

“இது மான் கொம்பு மாதிரி இருக்கே. தாக்க வருகிற மத்த விலங்கைக் குத்துறதுக்கும், இது பயன்பட்டிருக்குமா?” என்றாள் கயல்.

“ஆரம்பத்துல ஆராய்ச்சியாளர் அப்பிடித்தான் நினைச்சாங்க.  ஆனா அதுக்கப்புறம் ஆராய்ச்சி செஞ்சு, இல்லேன்னு சொல்லிட்டாங்க. இன்னும் சிலர் தண்ணிக்கடியில இது உயிர் வாழ்ந்திருக்கும்.  அதனால தண்ணிக்கு மேலே இந்தக் குழாயை வைச்சிக்கிட்டு, அது மூலமா வெளிக்காத்தைச் சுவாசிச்சிருக்கும்னு நம்புனாங்க”. 

“தண்ணிக்கடியில நீச்சல் அடிக்கிறவங்க, நீருக்கு மேல வர்றது மாதிரி, சுவாசிக்கிறதுக்கு ஒரு குழாய் மாட்டியிருப்பாங்களே, அது மாதிரின்னு நெனைச்சாங்களோ?” என்றான் பாபு.

“ஆமாம்.  அந்தச் சுவாசக் குழலுக்கு ஆங்கிலத்துல Snorkel னு பேரு. அது மாதிரி இது பயன்பட்டிருக்கும்னு நெனைச்சாங்க.  ஆனா அதுவும் தப்புன்னு ஆராய்ச்சியில தெரிஞ்சிடுச்சாம்.  ஒடம்பு உஷ்ண நிலையைச் சீரா வைக்கப் பயன்பட்டிருக்கலாம்னு, சிலர் சொல்றாங்க.  எல்லாம் யூகம் தான்.  எதுவும் உறுதிப்படுத்தப் படலே” என்றது சிட்டு

“அப்பிடியா?” என்றான் பாபு.

“இன்னிக்கு இது போதும்.  நேரமாயிடுச்சி. டைனோசர் வகையில, நெறையாப் பார்த்தாச்சு.  அந்த இனம் ஏன் அழிஞ்சுதுன்னு, அடுத்த மாசம் பார்ப்போம்.  எல்லாம் பத்திரமாக இருங்க” என்று சொல்லி, டாட்டா காட்டிவிட்டுப் பறந்தது சிட்டு. .குழந்தைகளும் சிட்டுவுக்கு டாட்டா காட்டிவிட்டு வீட்டுக்குக் கிளம்பினர். 

என்ன குழந்தைகளே!  சிட்டு சொல்ற டைனோசர் கதை, ஒங்களுக்குப் பிடிச்சிருக்கா? ஒங்க கருத்துக்களை எங்களோடு பகிர்ந்து கொள்ள முகவரி:-

feedback@poonchittu.com

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
Subscribe
Notify of
guest
2 கருத்துகள்
Newest
Oldest Most Voted
Inline Feedbacks
View all comments