முன்பு ஒரு காலத்தில், இரண்டு நாய்கள் நண்பர்களாக இருந்தன.  ஒரு நாய் சின்னது, இன்னொன்று பெரியது.  சின்னதாக இருந்ததைச் சின்ன நாய் என்றும், பெரிதாக இருந்ததைப் பெரிய நாய் என்றும் எல்லோரும் அழைத்தார்கள். அதனால் அவைகளுக்கு வேறு பெயர்களே இல்லை.

சின்னது எதைப் பார்த்தாலும் குரைக்கும். பூனையைப் பார்த்துக் குரைக்கும் அதன் குட்டிகளைப் பார்த்துக் குரைக்கும். பசு மாட்டைப் பார்த்துக் குரைக்கும் அதன் கன்றுக்குட்டியைப் பார்த்துக் குரைக்கும். தன்னுடைய நிழலைப் பார்த்துக் குரைக்கும்; வானத்து நிலாவைக் கூடப் பார்த்து, ‘லொள் லொள்’ என்று, குரைத்துக் கொண்டே இருக்கும்.

பெரிய நாயால் ‘லொள் லொள்!’ என்று அதிக சத்தத்துடன் குரைக்க முடியும்.    ஆனால் ஏதாவது சொல்ல வேண்டுமென்றால் மட்டுமே, அது குரைக்கும். அதனால் அது சொல்வதை, எல்லோரும் காது கொடுத்துக் கேட்டார்கள்.

2dogs
படம் : அப்புசிவா

ஒரு நாள் இரண்டும் வெயிலில் உட்கார்ந்திருந்த போது,  “நம் நண்பனான அரசரைப் பார்க்கப் போகலாம், வா” என்று பெரிய நாய்  கூப்பிட்டது.  இது நல்ல திட்டமாயிருக்கிறது என்று சின்ன நாய் நினைக்கவே, இரண்டும் உடனே அரசரைப் பார்க்கக் கிளம்பின. 

பெரிய நாய் தெருவில் நடந்த போது, தலையை நிமிர்த்திக் கொண்டு வாலை முதுகின் மேல் சுருட்டி வைத்துக் கொண்டு நடந்தது. அவசரமாக  ஓட வேண்டிய அவசியமில்லை என அது சொன்னது. ஆனால் வேகமாகப் போக வேண்டும் என சின்னது நினைத்தது.

“நான் மொதல்ல, அங்க போவேன்” என்று சொன்னபடி, வேகமாக ஓடிய அது போன வேகத்தில் திரும்பி வந்தது.

“பெரிய நாயே! நாம அரசரைப் பார்க்க போக முடியாது” என்றது.

“ஏன் முடியாது? வீட்டுலேர்ந்து அவர் வெளியில போயிட்டாரா?” என்று கேட்டது பெரிய நாய்.

“அதைப் பத்தி எனக்கு ஒன்னும் தெரியாது. ஆனா கொஞ்ச தூரத்துக்கு அப்பால ஒரு பெரிய ஆறு இருக்குது; அதைத் தாண்டி நம்மால போக முடியாது” என்று சின்னது பதில் சொன்னது.

ஆனால் பெரிய நாய் திரும்பிப் போகவில்லை. “அந்தப் பெரிய ஆற்றை நான் பார்க்கணும்” என்று சொல்லிவிட்டு, பழைய மாதிரியே அமைதியாக நடந்தது. சின்ன நாய் அதைப் பின் தொடர்ந்தது.

ஆறு வந்தவுடனே, பெரிய நாய் அதில் தொபுக்கென குதித்து நீந்த ஆரம்பித்தது.

தன்னைப் பெரிய நாய் விட்டுவிட்டுப் போய்விடுமோ என்று மிகவும் பயந்து சின்ன நாயும் ஆற்றில் குதித்தது  பெரிய நாய் நீந்துவதைப் பார்த்து, நாலு கால்களால் தானும் துடுப்பு போடுவது போல் நீந்தியது.  அது நினைத்ததை விட, ஆற்றின் அகலம் குறைவாகவே இருந்தது.  ஆற்றைக் கடந்து கரைக்குப் பத்திரமாக வந்தவுடனே, தான் பயப்படவில்லை என்பது போல, லொள் லொள் என்று குரைத்தது. 

பெரிய நாய் கரையேறித் தன் உடம்பிலிருந்த நீரை உதறுவதற்குள், “நாங்க அரசர்க்கிட்ட போறதை நீ தடுக்க முடியாது” என்று ஆற்றிடம் சொன்னபடி சின்ன நாய் வேகமாக ஓடியது. போன வேகத்தில் வாலையும் காதுகளையும், சோர்வாகத் தொங்க விட்டுத் திரும்ப வந்தது.

“நாம அரசரைப் போயி பார்க்க முடியாது; ஏன்னா வழியில காட்டுல ஒரு கரடி இருக்கு. அது நம்ம ரெண்டு பேரையும், ராத்திரி சாப்பாட்டுக்குத் தின்னுடும்.  அது சொன்னதை, நான் கேட்டேன்” என்றது சின்ன நாய்.

உடனே பெரிய நாய், வேகமாகக் காட்டுக்குள்ளே போய், பயங்கரமான  சத்தத்துடன் குரைத்தது. “லொள்! லொள்! நான் பயப்பட மாட்டேன். நான் பயப்பட மாட்டேன்” என்றது.

அந்தச் சத்தத்தைக் கேட்டுப் பயந்து போன கரடி, எவ்வளவு வேகமாக ஓட முடியுமோ, அவ்வளவு வேகமாக, அதன் வீட்டுக்குள் ஓடி விட்டது.

“ராத்திரி சாப்பாட்டுக்குத் தேன் குடிச்சிக்கலாம்” என்றது கரடி. அதனால் வழியில் இண்டு நாய்களும், கரடியைப் பார்க்கவேயில்லை.

சின்ன நாய் வேகமாக ஓடியதாலும், குரைத்துக் கொண்டே இருந்ததாலும் களைப்பாகிச் சோர்ந்து விட்டது.  “நான் அரசரைப் பார்க்கப் போக விரும்பலை” என்று சொல்லிவிட்டு, தெருவிலேயே முன்னங்கால் பாதங்களுக்கிடையே, தலையை வைத்துப் படுத்துக் கொண்டது.

“எங்கேயோ எலும்பு வாசனை அடிக்குது” என்று பெரிய நாய் சொன்னவுடனே, சின்னது வேகமாகத் துள்ளிக் குதித்து எழுந்தது. இரண்டும் தரையில் மூக்கை வைத்து, வாசனை எங்கிருந்து வருகிறது என மோப்பம் பிடித்தன.  தெருவின் திருப்பத்தில், ஒருவன் கரியில் ரொட்டியையும், ஆட்டுக்கறியையும் சுட்டுத் தின்று கொண்டிருந்தான்.

சின்ன நாய் அவனிடம் ஓடிக் கெஞ்சிக் கேட்க ஆசைப்பட்டது. ஆனால் பெரிய நாய் அதனுடன் போகாமல், “நாம காத்திருப்போம்” என்று சொல்லிவிட்டுத் தெருவின் இன்னொரு பக்கத்தில் உட்கார்ந்தது.  சின்ன நாய் அதன் பக்கத்தில் அமர்ந்து இரண்டும் காத்திருந்தன, காத்திருந்தன, காத்துக் கொண்டேயிருந்தன. கடைசியில் அந்த மனிதன் கறியைத் தின்று முடித்துவிட்டு, எலும்பு துண்டுகளைத் தூக்கி, நாய்களிடம் வீசினான்.  அவன் அதைச் செய்வான் என்று தான் பெரிய நாயும் நம்பிக்கையுடன் எதிர்பார்த்திருந்தது. “ஆஹா! அந்த எலும்புத் துண்டுகள்,  எவ்ளோ ருசி?”

தனது பங்கைத் தின்று முடித்துவிட்டு, “ராத்திரி நாம எங்க தூங்குறது?” என்று கேட்டது சின்ன நாய்.

“பயப்படாதே; ஒரு இடத்தைக் கண்டுபிடிப்போம்” என்று பெரிய நாய், பதில் சொன்னது.

அவைகள் சென்ற காட்டு வழியில், கொஞ்ச தூரத்திலேயே ஒரு வீடு இருந்தது.  கதவு திறந்தே இருந்தது.  பெரிய நாய் தலையை உள்ளே நீட்டி யாராவது இருக்கிறார்களா என்று பார்த்தது. யாருமே அங்கே இல்லை. அது தானியங்களைச் சேமித்து வைக்கும் பத்தாயம். . இரண்டும் உள்ளே சென்று, ஓரத்தில் இருந்த வைக்கோலின் மேலே, படுத்துக் கொண்டன.

“காலையில சீக்கிரம் எழுந்திருக்கணும்” என்று பெரிய நாய் சொன்னது.    ஆனால் மறு நாள் காலையில் கண் விழித்த போது, கதவு இறுக்கமாகச்  சாத்தியிருந்தது இரவு அடித்த காற்றில், கதவு நன்றாக அழுந்தி மூடிவிட்டது.  பெரிய நாய்க்கு, அதைப் பார்த்தவுடன், மிகவும் கவலையாகிவிட்டது.

“ஏ! சின்ன நாயே! சின்ன நாயே! நாம அரசரைப் போயி, பார்க்கவே முடியாதுன்னு பயப்படுறேன்; ஏன்னா கதவு நல்லா சாத்தி மூடிடுச்சு.   தொறந்து விடுறதுக்கு யாருமில்ல” என்றது.

“ஆனா இந்தக் கதவுக்கு அடியில இருக்குற ஓட்டை வழியா, நாம வெளியில போகலாம்” என்று சின்னது சொன்னது.  பெரிய நாய் பார்த்த போது, கதவு அடியில் இருந்த பகுதி, உளுத்துப் போய் வீணாகி, குட்டி நாய் நுழையக் கூடிய அளவுக்கு, ஒரு ஓட்டையிருந்தது. அந்த ஓட்டையின் வழியாகச் சின்னது தன் மூக்கை நுழைத்து, தலையை நெளித்து நுழைத்து ஒரு வழியாக வெளியே வந்து, மகிழ்ச்சியாகக் குரைத்தது.

“நீயும் வெளியே வா” என்று பெரிய நாயை கூப்பிட்டது ஆனால் அதனால்  தலையைக் கூட, அந்த ஓட்டைக்குள் விட முடியவில்லை.

“நீ மட்டும் தான் தனியாப் போகணும்; அரசரோட அரண்மனைக்குப் போயி என்னைப் பத்தி சொன்னா, அவரு ஏதாவது உதவி அனுப்புவாரு” என்றது பெரிய நாய்.

ஆனால் சின்ன நாய் அரசருடைய அரண்மனைக்குப் போய், உதவி கேட்கும்  வரைக்கும் பொறுத்திருக்கவில்லை.  தெருவில ஓடும் போதே, “நான் சொல்றதைக் கேளுங்க! என்னோட நண்பன் பெரிய நாய், காட்டுல இருந்த ஒரு வீட்டுல மாட்டிக்கிட்டான்; அரசரைப் பார்க்க போக முடியலை. லொள் லொள்!” என்று குரைத்துக் கொண்டே சென்றது

முதலில் பறவைகள் மட்டுமே, அது சொன்னதைக் கேட்டன.  பிறகு தோளில் கோடரியுடன் இருந்த ஒரு மரவெட்டியைப் பார்த்தது.

“நான் சொல்றதைக் கேளுங்க! என்னோட நண்பன் பெரிய நாய், காட்டுல இருந்த ஒரு வீட்டுல மாட்டிக்கிட்டான்; அரசரைப் பார்க்க போக முடியலை. லொள் லொள்!” ஆனால் அநத மரவெட்டிக்கு, நாய் பேசிய ஒரு வார்த்தையும் புரியவில்லை.

அவன் “என் பின்னாடி வா” என்று சீட்டியடித்துக் கூப்பிட்டான். ஆனால் சின்ன நாய்க்கு அப்போது விளையாட நேரமில்லை.

அது எவ்வளவு வேகமாக ஓட முடியுமோ, அவ்வளவு வேகமாக ஓடியது. வழியில் மரவெட்டியின் மனைவியைச் சந்தித்தது.  அவள் தன் கையில் முட்டைகள் நிறைந்த கூடையை எடுத்தபடி, நகரத்துக்குப் போய்க் கொண்டிருந்தாள்.

“நான் சொல்றதைக் கேளுங்க! என்னோட நண்பன் பெரிய நாய், காட்டுல இருந்த ஒரு வீட்டுல மாட்டிக்கிட்டான்; அரசரைப் பார்க்க போக முடியலை. லொள் லொள்!” என்றது நாய்.  ஆனால் அவளுக்கும், அது பேசிய ஒரு வார்த்தையும் புரியவில்லை.

“நீ கத்திப் பயமுறுத்துனதுல, என் கூடையிலிருந்த ஒரு முட்டை கூட உடையாம இருந்தது ஆச்சிரியம் தான்” என்று அதைத் திட்டிவிட்டு,   விலகிச் சென்றாள்.

‘யாருமே நான் சொல்றதைக் கேட்க மாட்டேங்கிறாங்க’ என்று நினைத்த சின்னது,  ஒரு குட்டிப் பையனைப் பார்த்தது அவன் முதுகில் சுள்ளிக்கட்டு ஒன்றை வைத்திருந்தான். அவன் மரவெட்டியின் குட்டிப்பையன். என்ன ஆச்சரியம்! நாய் சொன்ன ஒவ்வொரு வார்த்தையையும், அவன் புரிந்து கொண்டான். நாயைத் தொடர்ந்து, அந்த வீட்டுக்குச் சென்றான்.

அவர்கள் வீட்டை நெருங்கிய சமயம், பெரிய நாய் உதவிக்குக் கத்திக் கொண்டிருந்தது. 

“லொள் லொள்! யாராவது வந்து, என்னை வெளியில விடுங்க”

“லொள் லொள்! நாங்க வர்றோம்” என்று பதில் சொன்னது சின்னது.

“நாங்க வந்துக்கிட்டே இருக்கோம்” என்று பதில் சொன்னான், குட்டிப்பையன். அடுத்த நிமிடம், பெரிய நாய் வெளியே வந்துவிட்டது.

அந்தக் காட்டிலிருந்து அரசரின் அரண்மனை, அதிக தூரத்தில் இல்லை.  சீக்கிரமே அவர்கள் பயணம் முடிவுக்கு வந்தது  இரண்டு நாய்களையும் சந்தித்ததில் அரசருக்கு மிகவும் மகிழ்ச்சி. பெரிய விருந்து கொடுத்தார். அவைகளின் நண்பனான மரவெட்டியின் குட்டிப் பையனையும், விருந்துக்கு அழைத்தார். விருந்து முடிந்து, தம் சொந்த வண்டியில், இரண்டு நாய்களையும், அவைகளின் வீட்டுக்கு அனுப்பி வைத்தார் அரசர். 

அதற்குப் பிறகு இரண்டு நாய்களும், பயணம் கிளம்புவதற்கு முன்பு இருந்ததை விட, மிகவும் நெருக்கமான நண்பர்களாக வாழ்ந்தன.


ஆங்கில மூலம்:-MAUD LINDSAY

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
Subscribe
Notify of
guest
0 கருத்துகள்
Newest
Oldest Most Voted
Inline Feedbacks
View all comments