“முன்னொரு காலத்தில் ஓட்டப்பந்தயத்தில் கலந்துக்கிட்ட முயலுக்கும், ஆமைக்கும் ரொம்ப வயசாகிப் போச்சாம். அந்த வயசான முயலுக்கு ஆமைகிட்ட போய் தோத்துட்டமேன்னு ரொம்ப வருத்தமா இருந்துச்சாம், அதனால அந்த முயல் என்ன செஞ்சுதாம்!” என்று பாட்டி நிறுத்த, கதை கேட்டுக் கொண்டிருந்த பேரன் அஷ்வின், “அப்புறம் என்னாச்சு பாட்டி?” என்றான் ஆவலோடு.

“நீ ரெண்டு வாய் சாப்பிட்டா தான் கதை சொல்லுவேன்” என்று பாட்டி சொல்ல, ஆ வென்று பெரிதாக வாயைத் திறந்தான் அஷ்வின்.

இரண்டுக்கு மூன்று உருண்டைகளை அவன் வாயில் ஊட்டியதும், பாட்டி மறுபடியும் தன் கதையினைத் தொடர்ந்தார்.

அந்த தாத்தா முயல், தன் பேரன் முயலைக் கூப்பிட்டு, “நீ என்ன பண்ணுவியோ தெரியாது பிங்கு, அந்த ஆமையோட பேரன்‌ அப்புவை ஓட்டப்பந்தயத்துல தோக்கடிச்சே ஆகணும். அதுவும் அடுத்த வாரத்துலயே போட்டி நடக்கணும், இது தான் என் கடைசி ஆசை” என்று சொன்னது.

தாத்தாவைப் பார்க்க பாவமாக இருந்தாலும் குட்டி முயல் பிங்குவிற்குத் தங்கள் முயல் குடும்பத்தின் ஓடும் திறனும், ஆமைக் குடும்பத்தின் நகரும் திறனும் நன்றாகவே தெரிந்திருந்தது. ‘முயல் தாத்தாவும், ஆமை தாத்தாவும் பழையபடி ஃப்ரெண்ட்ஸ் ஆகணும், அதே சமயம் ஓட்டப்பந்தயமும் நடக்கணும், என்ன செய்யலாம்!’ என்று யோசித்த பிங்குவிற்கு ஒரு அருமையான யோசனை பிடிபட்டது.

அந்த யோசனையின் படியே அப்பு ஆமையை சந்தித்து, ஓட்டப் பந்தயத்திற்கான நாளையும், இடத்தையும் குறித்தது. வரும் வாரம் ஞாயிற்றுக்கிழமை ஓட்டப்பந்தயம் நடக்க இருப்பதாகவும், காட்டின் ஒரு முனையில் இருந்து மறுமுனை வரை வேகமாக ஓடி யார் முதலில் வருகிறார்களோ அவரே வெற்றியாளர் என்ற அறிவிப்பை பிங்கு முயலும், அப்பு ஆமையும் காட்டில் உள்ள அனைத்து விலங்குகளுக்கும் தண்டோரா போட்டன.

போட்டி நாள் அன்று காலையில் அனைத்து விலங்களும் காட்டின் ஒரு முனையில் கூடின. முயல் தாத்தாவும், ஆமைத் தாத்தாவும் மர நிழலில் அமர்ந்து கொள்ள, யானை அண்ணன் கொடி அசைக்க, குரங்கு சித்தப்பா விசில் ஊத ஓட்டப்பந்தயம் ஆரம்பம் ஆனது.

பிங்கு முயல் ட்ராக் பேண்டோடும், அப்பு ஆமை ஸ்டைலான தொப்பியோடும் ஓடத் தொடங்கின. முன்னரே பேசி வைத்தது போல், அந்தக் காட்டிற்கு நடுவே இருந்த பெரிய ஆலமரத்தின் அடியே முயல் காத்துக் கொண்டிருக்க, அதே இடத்திற்கு ஆமையும் வந்தது‌.

“அப்பு! சீக்கிரம் என் தோள் மேல ஏறு!” என பிங்கு சொல்ல, அப்புவும் அதன்படியே செய்தது. இவர்களை நோட்டம் பார்க்க வந்த பச்சைக் கிளி பட்டுவும், காக்கா கீதாவும் ஆச்சரியத்துடன் பின் தொடர்ந்தன.

அப்புவைத் தோள் மேல் ஏற்றிக் கொண்ட பிங்கு ஒரே பாய்ச்சலாகப் பாய்ந்து காட்டின் மறுமுனையில் இருந்த பெரிய குளத்தை எட்டியது.

குளத்தை அடைந்ததும், பிங்குவின் முதுகில் இருந்து இறங்கிய அப்பு, இப்போது பிங்குவைத் தன் முதுகில் ஏற்றிக் கொண்டது. பிறகு குளத்தில் இறங்கி மெதுவாக நீச்சல் அடித்து, குளத்தின் மறுமுனையை அடைந்தது.

அதன் பிறகு இருவரும் ஒன்றாகக் கைக்கோர்த்துக் கொண்டு ஓட்டப்பந்தயத்தின் முடிவு கோட்டினைத் தொட்டனர். இக்காட்சியை வியந்து பார்த்த பட்டுவும், கீதாவும் பறந்து கொண்டிருந்ததை நிறுத்திவிட்டு தரையிறங்கி அவர்களிடம் வந்தன.

tortoisewin
படம் : அப்புசிவா

“பிங்கு! என்ன நடக்குது இங்க?” என்று பட்டு கேட்க, “பட்டு, ஆமைக் குடும்பமே ஸ்லோவா தான் நடக்கும்னு உலகத்துக்கே தெரியும், நான் போய் வேகமா ஓடுற பிங்குவை ஜெயிக்க முடியுமா? அதே போல பிங்குவால நீச்சல் அடிக்க முடியுமா?” என்று அப்பு கேள்வி கேட்டது.

அதற்குப் பதிலாக கீதாவும், பட்டுவும் இல்லை என்று ஒருசேரக் கூறினர்.

“அதனால தான் நாங்க ஒரு ஐடியா செஞ்சோம். ஒருத்தரோட ஸ்ட்ரெங்க்தை இன்னொருத்தர் பயன்படுத்தி ரெண்டு பேரும் சேர்ந்து ஜெயிச்சுட்டோம்” என்று குதூகலத்தோடு சொன்னது முயல் பிங்கு.

“நம்மால் முடியாத விஷயம்னா தயங்காம உடனே நம்ம நண்பர்கள்கிட்ட உதவி கேட்டோம்னா முயலாமையை வென்று விடலாம்!” என்று முயலும், ஆமையும் ஒருமித்துச் சொன்னார்கள்.

What’s your Reaction?
+1
0
+1
1
+1
0
+1
0
+1
0
+1
0
Subscribe
Notify of
guest
0 கருத்துகள்
Newest
Oldest Most Voted
Inline Feedbacks
View all comments