இந்தமுறை சந்திரயான்-2 செயற்கைக்கோள் திட்டத்தில் ஈடுபட்டு இருப்பவர்கள் ரிது கரிதல் மற்றும் எம். வனிதா. யார் இந்த இரு பெண்கள்?

ritu vanitha

இந்தியாவின் ராக்கெட் பெண்மணி ‘ரிது’

சந்திராயனின் மிஷன் இயக்குனர் ரிது கரிதல் ‘இந்தியாவின் ராக்கெட் பெண்மணி’ என அழைக்கப்படுகிறார். இவர் செவ்வாய் ஆர்பிட்டர் மிஷனின் போது உதவி இயக்குனராக இருந்தவர். ரிது கரிதல் லக்னோ பல்கலைக்கழகத்தில் விண்வெளித்துறை பொறியியல் படிப்பு முடித்துள்ளார்.

2007ல் அவர் இஸ்ரோவின் இளைய விஞ்ஞானி என்ற பட்டத்தை முன்னாள் குடியரசு தலைவர் ஏ.பி.ஜே அப்துல் கலாமிடமிருந்து பெற்றுள்ளார்.

ரிது அறிவியலில் சிறுவயது முதல் நாட்டம் கொண்டிருந்தார். செவ்வாய் ஆர்பிட்டர் மிஷன் முடிந்ததும் பிபிசியிடம் பேசியபோது, “நிலவின் நளினம் என்னை எப்போதும் ஆச்சரியப்படுத்தும். அதுமட்டுமல்லாமல் இந்த இருண்ட விண்வெளியைத் தாண்டி உள்ள உலகத்தைப் பற்றித் தெரிந்து கொள்ள வேண்டும் என நினைக்கிறேன்” என்றார்.

ரிதுவுக்கு இயற்பியலும், கணக்கும் மிகவும் பிடித்த பாடங்கள் ஆகும். அவர் செய்தித்தாளில் வரும் நாசா மற்றும் இஸ்ரோவின் செய்திகளை சேகரித்து வைத்துக்கொள்வார். அவர் விண்வெளி அறிவியல் குறித்த சிறு சிறு விஷயங்களை புரிந்துகொள்ள முயற்சி செய்வார்.

அறிவியல் மற்றும் விண்வெளியின் மீது அவருக்கு இருந்த காதல் அவரை இஸ்ரோவுக்கு கொண்டு வந்தது.

”என்னுடைய பட்ட மேற்படிப்பு முடித்தவுடன் இஸ்ரோவில் வேலைக்கு விண்ணப்பித்தேன். இவ்வாறு விண்வெளி விஞ்ஞானியாக மாறினேன். இந்த 20 – 21 ஆண்டுகளில் இஸ்ரோவின் நிறையத் திட்டங்களை நிர்வகிக்க வேண்டியிருந்தது. அதில் செவ்வாய் கிரகத்துக்கு அனுப்பிய செயற்கைக்கோள் மிக முக்கியமானது.” என்கிறார் ரிது பெருமிதத்தோடு.

திட்ட இயக்குனர் எம். வனிதா

சந்திரயான்-2 திட்டத்தின் திட்ட இயக்குனர்தான் எம்.வனிதா. வடிவமைப்பு பொறியாளராக பயிற்சியில் ஈடுபட்டு சிறந்த பெண் விஞ்ஞானி என இந்திய வானியல் கழகத்தால் விருதளிக்கப்பட்டார். நிறைய வருடங்களாக அவர் செயற்கைக்கோளுக்காக வேலை செய்துவந்துள்ளார்.

“செயற்கைக்கோளின் முழுப்பொறுப்பும் ஒரு திட்ட இயக்குனரின் தோளில்தான் இருக்கும்” என அறிவியல் வல்லுநர் பல்லவ் பாக்லா கூறியுள்ளார். பொதுவாக, ஒரு மிஷனுக்கு ஒரு இயக்குனரே இருப்பார். ஆனால், சில மிஷன்களுக்கு ஆர்பிட் இயக்குனர், செயற்கைக்கோள் இயக்குனர், ராக்கெட் இயக்குனர் என நிறையப் பேர் இருப்பார்கள்.

இந்த திட்டம் சரியாக வெற்றிகரமாக நடக்கிறதா என்று பார்த்துக்கொள்வது வனிதாவின் வேலை. இந்த திட்டத்தின் எல்லா வேலைகளும் வனிதாவின் மேற்பார்வையில்தான் முடிக்கப்பட்டது. இந்த திட்டத்தின் இரண்டாவது முக்கிய பதவியில் வனிதா இருந்துள்ளார்.

சந்திரயான் – 2 ஒரு சிறப்பு வாய்ந்த செயற்கைக்கோளாக கருதப்படுகிறது. இது ஆர்பிட்டர், ‘விக்ரம்’ என்ற லேண்டர் மற்றும் ‘பிரக்யான்’ என்ற ரோவரை கொண்டுள்ளது. மிகவும் கடினமான ஆய்வாகக் கருதப்படும் நிலவில் தரையிறங்கும் ஆராய்ச்சியை இந்தியா முதன்முதலாக மேற்கொண்டது.

இத்திட்டத்தில், சுமார் 600 கோடி ரூபாய்க்கும் மேலான பணம் செலவிடப்பட்டுள்ளது. 3.8 டன்கள் எடை கொண்ட சந்திரயான்-2, ஜிஎஸ்எல்வி மார்க் III ராக்கெட் மூலம் கொண்டு செல்லப்பட்டுள்ளது.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
Subscribe
Notify of
guest
0 கருத்துகள்
Newest
Oldest Most Voted
Inline Feedbacks
View all comments