பஞ்சாபில் பிறந்த ரொமிலா தாப்பர், இந்தியாவின் முக்கியமான வரலாற்று ஆய்வாளர்களுள் ஒருவர். ஆண்கள் மட்டுமே ஆதிக்கம் செலுத்திவந்த வரலாற்று ஆய்வுத்துறையில், ஒரு பெண்ணாக இவர் சாதனை படைத்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Romila Thapar

ரொமிலா வட இந்தியாவையும், தற்போதைய பாகிஸ்தானையும் உள்ளடக்கிய வடமேற்கு எல்லைப்புற மாகாணத்தில், தம் குழந்தைப்பருவத்தைக் கழித்தார். இவரது தந்தை தயா ராம் தாப்பர், ராணுவ மருத்துவராக இருந்தார். தந்தையின் பணியிட மாற்றம் காரணமாக, சிறுவயதில் இவர் லாகூர், ராவல்பிண்டி, புனே போன்ற வெவ்வேறு நகரங்களில் வசிக்க வேண்டி வந்தது.  

இலண்டன் பல்கலைக்கழகத்தில் உள்ள கீழை ஆப்பிரிக்க ஆய்வுப் பள்ளியில், இந்திய வரலாற்று ஆய்வாளர் ஏ.எல்.பாஷம் தலைமையில் முனைவர் பட்டம் பெற்றார். பல்வேறு விருதுகளுக்குச் சொந்தக்காரரான இவருக்கு, அமெரிக்காவின் உயரிய ‘க்ளஜ்’ (KLUGE) விருது கிடைத்தது.

உலகின் தலை சிறந்த பல்கலைக்கழகங்கள் இவருக்குக் கெளரவ முனைவர் பட்டம் அளித்துள்ளன. கல்வி நிலையங்கள், பல்கலைக்கழகங்கள் ஆகியவை அளிக்கும் விருதுகளை மட்டுமே ஏற்பது என்ற கொள்கை உடையவர். எனவே இருமுறை இந்திய அரசு அளிக்க முன்வந்த பத்ம பூஷண் விருதை வாங்க மறுத்துவிட்டார்.

பழங்கால இந்திய வரலாற்றைக் குறித்து, ரொமிலா ஆய்வு மேற்கொண்டார். கடுமையாக உழைத்துப் பெறப்பட்ட தரவுகளின் அடிப்படையில், முடிவுகளைத் துணிச்சலாக வெளியிட்டார்.     

வரலாறு என்பது ஆதாரங்களின் அடிப்படையில் நிகழ்வுகளைக் கோர்ப்பது; கட்டுக்கதைகளை வைத்தோ புராண இதிகாசங்களை வைத்தோ புனைவது அல்ல என்பது இவரது ஆணித்தரமான கருத்து. மதச்சார்பின்மையே இந்தியாவின் வளர்ச்சிக்கான சரியான தளம் என்று இவர் உறுதியாகக் கூறுகின்றார்.

மன்னர்கள், அவர்கள் வாரிசுகள், படையெடுப்புகள், மதங்களின் படையெடுப்புகள், நுண்கலைகள் என்ற எல்லைக்குள் மட்டுமே ஆராயப்பட்ட பழங்கால இந்திய வரலாற்றை, முதன்முதலாக மக்களின் வாழ்வியலை அடிப்படையாகக் கொண்டு, சமுதாய கண்ணோட்டத்துடன் ஆராய்ந்து எழுதியவர், ரொமிலா தாப்பரே ஆவார்.

‘அசோகரும் மெளரியரின் வீழ்ச்சியும்’, ‘பண்டைய இந்திய சமூக வரலாறு: சில விளக்கங்கள்’, ‘தொடக்க நிலை இந்தியா: தோற்றம் முதல் கி.பி.1300 வரை’ ஆகியவை, இவரது முக்கிய நூல்கள் ஆகும். 

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
Subscribe
Notify of
guest
0 கருத்துகள்
Inline Feedbacks
View all comments