ராமுவிற்கு அன்று இரவு புரண்டு புரண்டு படுத்தும் தூக்கமே வரவில்லை. எப்படி வரும்? அவனது அப்பா கௌதம்  தானாக இயங்கும் கியர் கொண்ட பேட்டரி காரை வாங்கி இருக்கிறார். பாட்டி தாத்தாவோ தேர்த்திருவிழாவைக் காண ஊருக்கு வரச் சொல்லி இருக்கிறார்கள். காலையில் எழுந்தவுடன் புதிய காரில் தாத்தா பாட்டியின் வீட்டிற்குப் பயணம். இந்த மகிழ்ச்சி தான்.வேறொன்றும் அல்ல.

வழக்கமான காலைப் பொழுதில் ராமுவும் அவனது அம்மா அப்பாவும் கிராமத்திற்குச் செல்ல தயாரானார்கள். புதிய காரை ஓட்டுவது எளிது என்று ராமுவுக்கு தெரிந்திருந்ததால் அதனை அப்பா எப்படி இயக்கப் போகிறார் என்பதையும் காண அவனுக்கு ஆசை.

இனி…

ராமு: அம்மா! இன்றைக்கு நான் காரில் முன்னாடி உட்காருகிறேன். அப்பா கார் ஓட்டுவதை நான் பார்க்கணும்.

கௌரி: சரிடா சமத்துக் குட்டி! ஆனா அப்பா கிட்ட பேசிக்கிட்டே வந்தா கார் ஓட்டுவதில் கவனம் போயிடும். அது பாதுகாப்பு இல்லை. பேச்சு கொடுக்காமலேயே ஓட்டுவதை மட்டும் கவனி ராமு. வீட்டுக்கு போன பிறகு கேட்டுக்கலாம்.

ராமு: ஹைய்யா! அம்மான்னா அம்மாதான்.

கௌதம்: ராமு! நான் இந்த காரை ஓட்டுறது ஒன்னும் பெரிய விஷயமே இல்லை. நாம இப்ப பாட்டி தாத்தா ஊருக்கு தேர் திருவிழாவை பார்க்கப் போறோம் அல்லவா? அந்த மிகப்பெரிய தேரை ஊர் மக்கள் எல்லோரும் சேர்ந்து தெருவில் இழுத்து வருவாங்க. அதனை பாக்குறதுக்கு சுலபமா தெரிஞ்சாலும், அடிப்படையில் மக்களோட அனுபவ அறிவியல் அறிவு அதில் இருக்கு. அதை நீ அம்மாவிடம் கேட்டு தெரிஞ்சுக்கோ. இந்தப் பயணமும் உனக்கு உபயோகமா இருக்கும்.

ராமு: சரிங்க அப்பா. நீங்க காரை ஓட்டும்போது எந்த கியரில் வச்சு ஓட்டுறீங்க, எப்போ ஆக்சிலேட்டர் கொடுக்குறீங்க, எப்ப பிரேக் போடுறீங்க, ஹாரன் கொடுக்குறீங்க இது எல்லாம் நான் கொஞ்ச நேரத்துல பார்த்து விட்டேன். தேர் ஓட்டுவது பற்றியும் தெரிஞ்சுக்குறேன். அம்மா நீங்க சொல்லுங்க.

கௌரி: முதலில் தேர் திருவிழா எதற்கு நடத்துறாங்கன்னு சொல்றேன் ராமு. நல்லா கேட்டுக்கோ. கடவுளை மையமா வச்சு இந்த திருவிழா என்றாலும் மக்களோட ஒற்றுமைக்காகத் தான் இந்த பண்டிகைகளெல்லாம். நம்ம கோவில்களை ஒத்த உருவம் தேருக்கு இருக்கும். கோவில் கருவறையில் கடவுள் இருக்கிற மாதிரி, தேர் பீடத்திலும் கடவுளின் சிலை இருக்கும்.

நம்ம இந்திய நாட்டுல தொழிலின் அடிப்படையில் பிரிந்த ஜாதியின் ஏற்றத்தாழ்வு மக்களிடையே இன்னும் முழுசா ஒழிக்கப்படல. அனைவரும் ஒவ்வொரு தொழிலை பார்ப்பதால் தான் உலகமே இயங்குகிறது என்பதை உணர்த்துவதாகவும் இந்த பண்டிகை அமைந்திருக்கு.

மரவேலை செய்கிற தச்சர், கொல்லர், கொத்தர், துணிகளை வெளுத்துக் கொடுக்கிற வண்ணார்கள், பூஜை செய்பவர்கள், கயிறு திரிப்பவர்கள் என எல்லோர்கிட்டயும் அறிவியலும் கணிதமும் அனுபவ அறிவா தேரின் ஆற்றலை விட அதிகமா இருக்கும். இவர்கள் ஒன்றிணைந்தால் தான் ஊர் மக்களோடு சேர்ந்து தேரை இயக்க முடியும்.

ther

ராமு: அறிவியலும் கணிதமும் மட்டும் தெரிஞ்சா போதுமா? நான் ஸ்கூல்ல இன்னும் நிறைய படிக்கிறேனே!

கௌரி: சுட்டி பையனாச்சே நீ! உன் கிட்ட தப்பிக்க முடியுமா? மற்ற தொழில் செய்பவர்களும் இதுல இருக்காங்க. பூமாலை கோர்க்கிறவங்க, நடனக் கலைஞர்கள், விழாவின் போது வியாபாரம் செய்யும் வியாபாரிகள், சமையல் கலைஞர்கள், வானவேடிக்கை பட்டாசுகளின் தயாரிப்பு, வெளியூரிலிருந்து உறவினர் வருகைக்கான தங்கும் வசதி, காவல்துறை கண்காணிப்பு, மின்சாரம் தாக்கி விபத்து நேராமல் இருக்க மின்துறையை சேர்ந்தவர்களின் பணி என இப்படியெல்லாம் சேர்ந்து தான் ஒரு பண்டிகை.

ராமு: அப்படியா அம்மா? அப்போ எங்க ஸ்கூல்ல நடக்கிற விளையாட்டுப் போட்டிகளும் கலை நிகழ்ச்சிகளும் கூட அதற்கு தான் நடத்துறாங்களா?

கௌரி: ஆமாம் ராமு. மக்களெல்லாம் ஒருவரோடு ஒருவர் பழகுவது தான் முக்கியமான நோக்கமே (aim). புராணக் கதைகள்ல அசுரர்களும் தேவர்களும் தங்களுடைய ஆணவத்தை ஒழித்து ஒற்றுமையானதை அடிப்படையா வச்சு தான் இந்த தேர் திருவிழா நடக்குது.

அதேபோல ஊரிலும் உயர்வு தாழ்வு இல்லாமல் எல்லோரும் சமம் என்பதை அனைவரும் கூடி நடத்துற இந்த விழா உணர வைக்குது ராமு.

ராமு: ஊர் கூடி தேர் இழுக்குறதோட நன்மை நல்லாவே புரியுது அம்மா‌. அதில் இருக்கிற அறிவியலும் கணிதமும் கூட சொல்றீங்களா?

கௌரி: அதை நீ தாத்தா பாட்டி கிட்ட கேட்டுக்கோ! அவங்க உனக்கு இன்னும் நல்லாவே சொல்லுவாங்க.

கௌதம்: ஆமாம் ராமு. நாம பேசிகிட்டு வீட்டுக்கே வந்துட்டோம். தாத்தா பாட்டியை பார்த்தவுடனே அவங்க கிட்ட ஆசீர்வாதம் வாங்கிக்கோ. அவங்களுக்காக வாங்கின பொருள் எல்லாம் பையில் இருக்கு. அதையும் எடுத்துகிட்டு கீழே இறங்கு பார்க்கலாம்.

பாட்டி: கௌரி வாம்மா! வாங்க கௌதம்! ராமு குட்டி! நீ கொஞ்சம் உயரமாயிட்ட செல்லம் (dear). பயணம் எளிதாக இருந்ததா? ஊர்ல திருவிழாக் கோலம் கலை கட்டுது. இப்பத்தான் நானும் கோயிலுக்கு போயிட்டு வந்தேன். நீங்க எல்லாரும் கை கால் அலம்பிட்டு முதலில் சாப்பிட வாங்க. நாளைக்கு இழுக்கப் போற தேரை அலங்காரத்தோட தயாரா நிறுத்தி வச்சிருக்காங்க. போய் பாத்துட்டு வரலாம்.

தாத்தா: ஆமாம். எல்லாரும் முதல்ல சாப்பிடுங்க. புதுசா கடைகள் எல்லாம் நிறைய போட்டிருக்காங்க. ராமுவை கூட்டிகிட்டு அங்க போயிட்டு வரலாம்.

கௌதம்: மாமா! ராமுவுக்கு கடையில வாங்குற பொருளை பத்தி எல்லாம் ஒன்னும் ஆசை இல்லை. தேர் ஓடுவதுல இருக்கிற அறிவியலும் கணிதமும் வேணுமாம். அதை கொஞ்சம் அவனுக்கு சொல்லிடுங்க.

தாத்தா: ஓ! அப்படியா!! என் பேரன் அவ்வளவு வளர்ந்துட்டானா? முதல்ல எல்லோரும் சாப்பிடுங்க. சாயங்காலம் தேரைப் பார்க்கும்போது நான் எல்லாத்தையும் சொல்றேன்.

(அனைவரும் ஒன்றாக உணவருந்தி விட்டு, மாலை நேரம் தேரைக் கண்டு வர மகிழ்ச்சியாக பேசிக் கொண்டு      கோவிலுக்குச் செல்கிறார்கள்.)

பாட்டி: ராமு அங்கே நிற்கிற தேரை கவனிச்சியா? நம்ம ஊரு தேருக்கு ரெண்டு இரும்பு அச்சுகளால் இணைத்த ஆறு சக்கரங்கள் இருக்கு. இதன் மேல் இருக்கும் தேரின் மரப்பகுதியில புராணக் கதைகள்ல வர சிற்பங்கள செதுக்கி வச்சிருக்காங்க.

தேரை இழுப்பதற்கு நீண்ட சங்கிலியும் தேங்காய் நாரில் செய்த வடங்களும் தயாரா இருக்கு. கால்களை தூக்கியவாறு இருக்கிற பெரிய குதிரை பொம்மைகளை முன்பக்கமாக தேரில் கட்டி வச்சுருக்காங்க.

தேரின் பீடத்தில் ஒவ்வொரு மூலையிலும் துவாரங்கள் அமைந்து, அதில் குறிப்பிட்ட எண்களில் கால்கள் பொருத்தி இருக்காங்க. இதுல உள்பக்கமா கனமான இரும்பு வளையம் இருக்கும். இதில் பனைமர கால்களை செதுக்கி செருகுவாங்க.

பனை மரத்தின் மேல் பக்கமும் கூரா (sharp) இருக்கும். இதன் மீது தேரின் மேல்புறத்தை கட்டியிருக்காங்க. இந்த கூரைதான் அலங்காரங்களையெல்லாம் தாங்கி நிற்கும். இரும்பு வளையங்களில் செருகி இருக்கிற கால்கள் தான் பாரத்தை சுமக்கும்.

தேரின் மேல்புறத்திற்கும் மேலே விமானம் போன்ற அமைப்பு மர சட்டங்களால் அமைச்சிருக்காங்க. அதன் உச்சியில் கலசம் வச்சிருக்காங்க. கூம்பு போன்ற விமான அமைப்பை துணிகளால் அலங்கரிச்சு இருக்காங்க.

முன்புறத்தில் கட்டி இருக்கிற குதிரை பொம்மைகள், யாளி பொம்மைகள், அலங்கார தட்டிகள் என எல்லாமே எடை கணக்க கணக்கிட்டு செஞ்சு வச்சிருப்பாங்க.

இது மட்டுமில்லாம கயிறு திரிக்கிற தொழிலாளர்கள் தயாரிக்கிற தடிமனான தேங்காய் நாராலான வடங்களையும் அதன் அளவையும் எடையையும் கணக்கிட்டு தான் செய்வாங்க.

அந்த கயிருக்கு பக்கத்துல ஒரு முட்டுக்கட்டை இருக்கு பாத்தியா ராமு? இதை தான் ஓடும் தேரை நிறுத்துவதற்கு பயன்படுத்துறாங்க. இந்த கட்டைய நிறைய எண்ணிக்கையில செஞ்சு வச்சிருப்பாங்க. ஏன்னா பாரம் தாங்காமல் உடைந்து போகலாம் இல்லையா? அதனால.

இங்க பாரு! ரயில்வே ஸ்லீப்பர் கட்டை மாதிரி இங்க கொஞ்சம் கட்டைகள் இருக்கு. இதை பரப்பு கட்டைகள்னு சொல்லுவாங்க. தேர் சக்கரம் தரையில் பதிந்திடாம இருக்க, அதன் ஓடும் பாதையில சக்கரத்துக்கு கீழ இந்த கட்டைகளை பரப்பி வைப்பாங்க.

ராமு: பாட்டி நீங்க சொல்றதெல்லாம் கேக்குறதுக்கு மிகவும் ஆச்சரியமா இருக்கு. எனக்கு இப்போ ஒரு சந்தேகம் வருது. அப்பா கார் ஓட்டும் போது இடது பக்கமோ வலது பக்கமோ திரும்பனும்னா ஸ்டியரிங்க அதுக்கு ஏத்த மாதிரி திருப்புவாரு. இந்த தேருக்கு எங்க ஸ்டியரிங் இருக்கு?

தாத்தா: ராமு குட்டி! நீ புத்திசாலி பையன் டா! நல்லதொரு கேள்வியை கேட்டிருக்க! அந்த அறிவியல நான் சொல்லட்டுமா? நல்லா கவனிச்சுக்கோ!

நான்கு வீதிகள் சந்திக்கிற இடத்துல தான் தேர் திரும்பும். நீளம், அகலம், பருமன் என கணக்கிட்டு செய்த பெரிய இரும்புத் தகடு மேல கிரீஸைக் கொட்டி தயாரா வச்சிருப்பாங்க.

தேரை வலது பக்கம் திருப்பணும்னா, இடது பக்க தேரின் சக்கரத்தை ஜாக்கியால் தூக்கி சாரடிக் கட்டையில தாங்கி வைப்பாங்க. வலது பக்க சக்கரத்தை முட்டுக்கட்டையை போட்டு ஓட்டத்தை தடை செஞ்சு வைப்பாங்க.

பிறகு இடது பக்க சக்கரங்களை கிரீஸ் மேல சுலபமா வழுக்கி போகற மாதிரி பின்புறமா புல்டோசர் மூலமா இடிப்பாங்க. இடது பக்க வடங்களை மட்டும் முன்புறமாய் இழுப்பாங்க. இதனால் சட்டென்று தேர் குலுங்கியவாறு 90 டிகிரி கோணத்துல திரும்புவதை வேற எங்கேயுமே பார்க்க முடியாது.

ராமு: தாத்தா இதை எல்லாம் எனக்கு கற்பனை செய்து பார்க்கும்போதே ஆசையா இருக்கு. நாளைக்கு நம்ம வீடு இருக்கிற தேரடி வீதியில தேர் இழுக்கறதை முழுசா பாக்கணும்.

கௌதம்: அதற்கு தானே வந்திருக்கிறோம் ராமு‌. தாராளமா பார்க்கலாம். மக்கள் கூட்டம் அதிகமா இருக்கும் போது நீ பாதுகாப்பாகவும் இருக்கணும். சில நேரங்களில் திருவிழா காலங்களில் விபத்தும் நடக்கிறது உண்டு. இப்படி இருக்கிற தேர் கூட கீழ சாஞ்சு விழுந்து மக்கள் இறந்து போயிருக்காங்க.

தாத்தா: ஆமாம். தேர் இழுக்கிற அறிவியல்ல பிசகு ஏற்பட்டால் விபத்து தான் நடக்கும். அப்படி நடக்கிறது மிகவும் அரிது ( rare). தேரின் விமானத்தில போர்த்துற தேர் சீலைகள் கூட எத்தனை சதுர அடி இருக்கணும்னு கணக்கு இருக்கு. நான்கு வாசல் மாலைகளும் தொம்பைகளும் கூட கணக்கு தான்.

 முட்டுக்கட்டைகள், பரப்பு கட்டைகள், சாரடிக்கட்டைகள், தேரில் தூண்களா இருக்கிற பனை மரங்கள், சவுக்கு மரங்கள், மூங்கில்கள், என இவற்றிற்கும் கணக்கு இருக்கு. சக்கரத்தின் அளவும் பீடத்தின் அளவும் தேர் இருக்க வேண்டிய உயரமும் கணக்கிட்டு தான் செய்யறாங்க.

ஒரு தேரை உருவாக்கி வீதியில் ஓட வைக்க, கூடி வேலை செய்யும் தொழிலாளர்களின் கணக்கு பிசகுவதே இல்லை. பல்லவர் காலத்துலேயே  தேர் ஓடியதா வரலாறு  இருக்கு. அந்த காலத்துல முட்டி தள்ளுறதுக்கு புல்டோசரோ, சக்கரத்தை உயர்த்த ஹைட்ராலிக் ஜாக்கியோ கிடையாது. முழுக்க முழுக்க மனித சக்தியால் மட்டுமே இயங்கியது. அதுவும் மிகப்பெரிய தேரான திருவாரூர் தேர் உனக்கு தெரியும் தானே? அது இப்ப இருக்கும் அளவைவிட அந்த காலத்தில் மிகப் பெரியதா இருந்தது.

தஞ்சாவூரை ஆண்ட சரபோஜி மன்னர் காலத்துல அவர் உத்தரவின் பேரில் தமிழ்நாட்டின் பல பகுதிகளிலிருந்து தேரை இழுக்க 25 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்களை கணக்கிட்டு வரச் சொல்லி குறிப்பிட்டிருக்கிற ஆவணம் கூட சரஸ்வதி மகால்ல இருக்கு. இதைப் பார்த்தாலே தேர் இழுக்கறதோட பிரம்மாண்டம் புரியும் நமக்கு.

கௌரி : அப்பப்பா! ஊர் கூடி தேர் இழுக்குறதுல எத்தனை பலம்??!! கற்பனை செய்து பார்க்கவே வியப்பாக இருக்கு. ‘ஒற்றுமையே பலம்’ எனும் பழமொழி எத்தனை உண்மை!! ஊருக்கும் பொருந்தும் வீட்டிற்கும் பொருந்தும்.

ராமு: தாத்தா பாட்டியை பார்ப்பதற்காக ஊருக்கு வந்தாலே என்னுடைய ஸ்கூல் புத்தகத்தில் இல்லாத தகவல் எல்லாம் கிடைக்குது. நாளைக்கு தேர் இழுக்கும் போது எனக்கு தெரிஞ்ச விஷயத்தை எல்லாம் கண்ணுல பார்க்க போறேன். எங்க மிஸ் தினம் ஒரு புதிய தகவலை ஒவ்வொருத்தரையும் சொல்ல சொல்லுவாங்க. நான் தேரை பத்தி பேசப் போறேன்.

கௌதம்: ராமுன்னா சும்மாவா? சமத்து பையனாச்சே! இப்போ வீட்டுக்கு போவோம். நேரமா தூங்கி காலையில சீக்கிரம் எழுந்திருக்கலாம். தேர் திருவிழாவுக்கு தயாராகலாம்.

(அனைவரும் மகிழ்ச்சியோடு அடுத்த நாளின் விடியலை எதிர்பார்த்து வீட்டிற்குச் சென்றார்கள்.)

__________&&&&&&__________

What’s your Reaction?
+1
0
+1
1
+1
0
+1
0
+1
0
+1
0
Subscribe
Notify of
guest
0 கருத்துகள்
Inline Feedbacks
View all comments