“நிலாக் குட்டி, நிலாம்மா” என்று அழைத்துக் கொண்டே வீட்டுக்குள் வந்தாள் பவித்ரா. அவளுடைய குரலில் பெருமையும், மகிழ்ச்சியும் தெரிந்தன.

“ஹைய்யா! அம்மா வந்தாச்சா?” என்று அம்மாவின் அருகில் வந்தவள் தயங்கியபடி, கொஞ்சம் தள்ளியே நின்றாள். பவித்ரா ஒரு டாக்டர். அரசு மருத்துவமனையில் வேலை பார்க்கிறாள். சாதாரணமாக வெளியே இருந்து வீட்டுக்குள் வரும்போதே உடைகளை மாற்றி விட்டு, முகம், கை, கால் சுத்தம் செய்து வரும் வழக்கம் இருந்தது. இப்போது இந்த கோவிட் பிரச்சினையால் சமூக இடைவெளி அவசியமாக இருக்கிறதே!

அதுவும் பவித்ரா அவளுடைய கணவர் வெங்கட் இருவரும் மருத்துவர்கள். இரண்டு பேரும் கோவிட் நோயாளிகளுக்கு சிகிச்சை தருவதால் வீட்டுக்கு வந்து குளித்து உடை மாற்றிக் கொண்டு தான் நிலாவிடமே பேசுவார்கள்.

நிலாவின் பாட்டி, அதாவது வெங்கட்டின் அம்மா அவர்களுடன் இருந்தார். அன்று பவித்ரா மட்டும் மருத்துவமனையில் இருந்து சீக்கிரம் வந்திருந்தாள். அதுவும் மிகவும் உற்சாகமாகத் தெரிந்தாள். அந்த உற்சாகத்தில் தான் உடை மாற்றிக் கொள்ளக் கூடப் போகாமல் நிலாவை அழைத்தாள்.

“என்னம்மா ஆச்சு பவித்ரா? சீக்கிரம் வந்திருக்கே? முகத்தைப் பாத்தா ரொம்ப சந்தோஷமாத் தெரியுதே?” என்று கேட்ட படி அங்கே வந்தாள் நிலாவின் பாட்டி செண்பகம்.

“ஆமாம் அத்தை. விஷயம் ரொம்ப ரொம்ப நல்ல விஷயம் தான். நம்ப நிலாவுக்குப் பரிசு கெடைச்சிருக்கு. எனக்கு இன்னைக்கு மெயில் வந்திருக்கு‌. போன மாசம் ஸி.பி.எஸ்.சி. காரங்க , ஸ்கூல் குழந்தைங்களுக்காக நிறையப் போட்டிகள் வச்சிருந்தாங்க இல்லையா? அதில நம்ப நிலா எழுதின கட்டுரைக்கு முதல் பரிசு கெடைச்சிருக்கு. அதுவும் அகில இந்திய அளவில். இருங்க! குளிச்சிட்டு வந்து மீதி விவரத்தைச் சொல்லறேன்” என்று சொல்லி விட்டுத் தன்னறைக்குள் சென்றாள் பவித்ரா.

“அப்படியா? கங்கிராட்ஸ் நிலாக்குட்டி” என்று பாட்டி நிலாவைக் கொஞ்சிக் கொள்ள, சிறிது நேரத்தில் வெங்கட்டும் வந்ததும் எல்லோருமாக உட்கார்ந்து இரவு உணவைச் சாப்பிட்டுக் கொண்டே நிலாவைப் பாராட்டினார்கள்.

அடுத்த நாள் காலையில் நிலாவைக் கூட்டிக் கொண்டு பவித்ரா, வெங்கட் இருவரும் பள்ளி அலுவலகத்திற்குச் சென்றார்கள். பள்ளி முதல்வர் அவர்கள் பரிசைப் பெற்றுக்கொள்ள நிலாவுடன் நேரில் வரச்சொல்லி இருந்தார்‌.

“கங்கிராட்ஸ் நிலா. உனக்கு  இந்தப் பரிசு கிடைத்திருப்பதை நினைத்து ஸ்கூல் நிர்வாகம் ரொம்பப் பெருமைப்படுது. இது அகில இந்திய அளவிலான முதல் பரிசு. அதில எங்களுக்குப் பெருமிதம். உனக்கு அடுத்த ஐந்து வருடங்களுக்கு ஸ்காலர்ஷிப்பும், ஆயிரம் ரூபாய்க்குப் புத்தகங்கள் வாங்கித் தரச் சொல்லி அதற்கான பணமும், அதைத் தவிர சான்றிதழும் கொடுத்திருக்காங்க. இவ்வளவு அழகான கட்டுரை எழுதக் காரணமான பெற்றோருக்கும் எனது பாராட்டுகள்” என்றார் பள்ளி முதல்வர்.

“ஆமாம் மேடம். இந்த மோசமான நோய்த் தொற்று நேரத்தில் என்னோட அம்மா, அப்பா மாதிரி டாக்டர்கள், நர்ஸ்கள் அப்புறம் மருத்துவத்துறையைச் சேர்ந்த மற்ற எல்லாரும் ஓய்வேயில்லாம எப்படி மக்களுக்குத் தொண்டு செய்யறாங்கங்கறதைப் பத்தித் தானே நான் கட்டுரையில் எழுதினேன்! அதுனால அவங்களுக்குத் தான் நான் முதலில் நன்றி சொல்லணும்” என்றாள் நிலா.

coronavirus doctor cheers 866x576 1

தங்கள் மகளை நினைத்துப் பெருமைப்பட்டுக் கொண்டே வீடு வந்து சேர்ந்தார்கள் அந்தத் தன்னலமில்லாத மருத்துவர்கள். சின்னக் குழந்தையானாலும் நிலைமையை நிலா சரியாகப் புரிந்து கொண்டிருப்பதை நினைத்துப் பெருமைப்பட்டார்கள் அவர்கள்.

சரியாக ஆறு மாதங்கள் கழிந்தன. இந்தியாவும், அதிவேகமாகப் பரவி வந்த கடும் நோய்த் தொற்றை ஒருவழியாகக் குறைத்து ஓரளவு கட்டுப்பாட்டில் கொண்டு வந்தது. பொதுமக்களும் நிம்மதி அடைந்தார்கள். மருத்துவத் துறையும் தங்கள் முன்னால் பெரிய சவாலாக இருந்த இமாலயப் பணியினை வெற்றிகரமாக சமாளித்ததை எண்ணி நிம்மதி அடைந்தார்கள். 

இந்த நோய்த் தொற்று, அதிவேகமாகப் பரவிய காலத்தில் ஓய்வேயில்லாமல் உழைத்த மருத்துவர்களை கௌரவிக்கும் வகையில் ஒரு பெரிய விழா ஏற்பாடு செய்யப் பட்டிருந்தது.

மாவட்ட அளவில் நடைபெற்ற விழாவில் மாவட்ட ஆட்சியர் கையில் இருந்து சிறந்த சேவைக்கான சான்றிதழ்களைப் பெறுவதற்காக மருத்துவர்களான பவித்ரா, வெங்கட் இருவரும் காத்திருந்தார்கள். அவர்களுடன் நிலாவும், வெங்கட்டின் அம்மாவும் கூட அந்த விழாவைக் கண்டு களிக்க உடன் வந்திருந்தார்கள்.

பரிசு வாங்குவதற்காக  பவித்ராவும், வெங்கட்டும் ஒரே சமயத்தில் மேடையில் ஏறினார்கள். அப்போது மாவட்ட ஆட்சியரிடம் ஏதோ பேசிவிட்டு பவித்ரா, மைக்கைத் தனது கையில் வாங்கிக் கொண்டாள்.

“எங்களால்  வீட்டைப் பற்றிய கவலையில்லாமல் மருத்துவப் பணியில் ஈடுபட முடிந்ததற்கு முக்கியமான காரணம், எங்களுடைய குடும்பங்களின் ஒத்துழைப்பு தான். எங்களுடைய நிலைமையைப் புரிந்து கொண்டு முழு மனதுடன் அவர்களும் ஒத்துழைத்ததால் தான் நாங்களும் இந்தப் பணியை முழுமையாகவும் சிறப்பாகவும் ஆற்ற முடிந்தது. அதனால் அந்தச் செயலைப் பாராட்டும் வகையில், இந்த விருதைப் பெற்றுக் கொள்ளும் இந்தத் தருணத்தை என் குடும்பத்துடன் பகிர்ந்து கொள்ள ஆசைப்படுகிறேன்” என்று சொல்லி நிலாவையும், வெங்கட்டின் அம்மாவையும் மேடைக்கு அழைக்க, அந்தக் குடும்பம் ஒன்றாக நின்று விருதைப் பெற்றது.

அந்த அழகான தருணத்தைப் பார்வையாளர்கள் அனைவரும் எழுந்து நின்று கைதட்டிப் பாராட்டி மகிழ்ந்து போனார்கள்.

அனைவரின் கைதட்டல் ஒலியால் அரங்கமே அதிர்ந்து போனது.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
Subscribe
Notify of
guest
0 கருத்துகள்
Inline Feedbacks
View all comments