முயல் குட்டி அம்முவுக்கு அன்று பிறந்தநாள். முதல் நாள் மாலையில் மற்ற விலங்குகளோடு விளையாடிக் கொண்டிருந்த போது வருத்தப்பட்டுக் கொண்டது அம்மு.

“நாளைக்கு என்னோட பர்த்டே. என்னோட குழிக்குள்ள நான் மட்டும் தனியாத் தான் இருக்கேன். பர்த்டே கொண்டாடணும்னு ரொம்ப ஆசையா இருக்கு. எனக்கு அம்மா, அப்பா, அண்ணன், அக்கா, தம்பி, தங்கச்சின்னு உறவுகள் யாருமே இல்லை. நான் மட்டும் தனியா என்ன செய்யப் போறேன்? எப்பயும் போல ஒரு கேரட்டைக் கடிச்சுக்கிட்டு அதோட சந்தோஷப் பட்டுக்க வேண்டியது தான்” என்று வருத்தத்துடன் தன்னுடைய நண்பர்களிடம் சொல்லி விட்டுத் தூங்கப் போனது.

அம்முவின் நண்பர்களுக்கு மிகவும் வருத்தமாக இருந்தது. பாவம் அம்மு, பிறந்ததில் இருந்து அந்த வனத்தில் அவர்களுடன் தனியாகத் தான் வசிக்கிறது. காட்டுக்கு வெளியே சின்னக் குழந்தையாக அழுது கொண்டு கிடந்த அம்முவை, யானை மாமா அப்பு தான் காட்டுக்குத் தூக்கி வந்தார். காட்டில் இருந்த மற்ற விலங்குகளின் குழந்தைகளோடு சேர்ந்து வளர்ந்து வந்தாள் அம்முக் குட்டி.

“நாளைக்கு அம்முவுக்கு நெறைய ஸர்ப்ரைஸ் தரணும். அவளை நாளைக்குப் பூரா சந்தோஷமா இருக்க வைக்கணும். இப்ப எதுவும் அவ கிட்ட சொல்ல வேணாம்” என்று குட்டி மயில் சொன்னது.

“சரி, நாளைக்குக் காலையில் யார் யார் என்னென்ன செய்யலாம்னு வாங்க, பேசி முடிவு பண்ணிக்கலாம்” என்று கிளிக் குஞ்சு, கீச் கீச்சென்று கத்தியது.

காட்டில் ஒரு குறும்புக்காரக் குரங்குக் குட்டி இருந்தது. கபீர் என்று பெயர். பயங்கரச் சுட்டி. யோசிக்காமல் எதையாவது செய்து எல்லோரையும் வம்பில் மாட்டி விடுவதில் கில்லாடி அது.

‘எல்லோரும் என்னல்லாமோ கிஃப்ட் கொடுக்கத் திட்டம் போடறாங்களே! நாம மட்டும் வேற யாரும் யோசிக்காததாப் புதுசா ஏதாவது செஞ்சு எல்லாரையும் ஆச்சர்யப் பட வைக்கணும்’ என்று யோசித்து ஒரு முடிவெடுத்தது கபீர்.

கபீர் மட்டும் அடிக்கடி காட்டுக்குப் பக்கத்தில் இருக்கும் ஊருக்குள்ளே போய்விட்டு வரும். அங்கே வசிக்கும் மனிதர்களின் பழக்க வழக்கங்களை ஒளிந்திருந்து பார்த்து விட்டு மற்ற குட்டிகளுக்குத் தான் பார்த்ததையே மிகைப்படுத்திச் சொல்லி, அவர்களை வியப்படைய வைக்கும்.

சமயம் கிடைக்கும் போது மனிதர்கள் வசிக்கும் வீடுகளில் இருந்து திருட்டுத்தனமாக சாமான்களை வேறு தூக்கி வந்து விடும்.

அம்முவின் பிறந்தநாளுக்கு முதல் நாள் மாலையில் பக்கத்து ஊருக்குச் சென்று தான் நினைத்ததை நடத்தியது. தான் தேடி வந்த சாமான்களை ஒரு மூட்டையில் கட்டிக் கொண்டு வந்தது.

அடுத்த நாள் காலையில் அம்மு முயல் குட்டி எழுந்து தனது இருப்பிடத்தில் இருந்து வெளியே வந்தது. அதனுடைய இருப்பிடத்தைச் சுற்றியிருந்த இடம் காலியாக இருந்தது. சத்தமே இல்லை.

அம்முவிற்கு அழுகை அழுகையாக வந்தது. ‘சே, நான் நினைவு படுத்திக் கூட எல்லாரும் என்னோட பர்த் டேயை மறந்தே போயிட்டாங்க. ரொம்ப மோசம்’ என்று வருத்தத்துடன் உள்ளே போகத் திரும்பியது.

அப்போது திடீரென்று ஒரே ஆரவாரம். சுற்றியிருந்த மரங்களில் இருந்து அம்முவின் நண்பர்கள் எல்லாரும் பொத் பொத்தென்று குதித்தார்கள்.

“ஹேப்பி பர்த்டே; ஹேப்பி பர்த்டே” என்று கத்திக்கொண்டே எல்லோரும் அம்மு முயலைச் சூழ்ந்து நின்றார்கள்.

கேரட் வடிவத்தில் கேக், கேரட் வடிவத்தில் பிஸ்கட்டுகள் விதவிதமாக அந்த நண்பர்கள் தங்களுடைய அம்மாக்களிடம் சொல்லிச் செய்து கொண்டு வந்திருந்தார்கள்.

கேரட் பாயாசம், கேரட் அல்வா என்று ஒரே கேரட் மயம். அதைத் தவிர அம்மு முயலுக்கு விளையாடுவதற்கு கிச்சன் செட், பில்டிங் பிளாக்ஸ், பார்பி பொம்மைகள், கழுத்தில் கட்டிக் கொள்ள ஸ்கார்ஃப் என்று பல்வேறு அன்பளிப்புகள்.

தனக்கு வந்த பரிசுகளை அம்முக் குட்டி தனது நண்பர்களுக்கே பகிர்ந்து கொடுத்தது. எல்லோருமாகச் சேர்ந்து உட்கார்ந்து சாப்பிட்டார்கள். அதற்குப் பின்னர் , அங்குமிங்கும் ஓடி விளையாடிக் கொண்டிருந்தார்கள். ஆடிப் பாடி மகிழ்ந்தார்கள்.

IMG 20210615 WA0054

“கபீரைக் காணோமே? எங்கே? நாளைக்கு உங்க எல்லாருக்கும் பெரிய ஸர்ப்ரைஸ் தரப் போறதாச் சொன்னானே? என்ன ஆச்சு? எங்கே போனான்?” என்று எல்லோரும் கபீரைத் தேட ஆரம்பித்தபோது, கபீரே அங்கு வந்துவிட்டது. கையில் தூக்கமுடியாமல்  ஒரு மூட்டையைத் தூக்கிக் கொண்டு வந்து அம்மு முயலின் எதிரே போட்டது.

“இங்கே பாரு அம்மு. நான் தான் எல்லாரையும் விட பெஸ்ட் கிஃப்ட் உனக்காகக் கொண்டு வந்திருக்கேன். உன்னால என்னன்னு கெஸ் பண்ணவே முடியாது. அவ்வளவு நல்ல கிஃப்ட். பாக்கறியா ?” என்று எல்லோருடைய ஆர்வத்தையும் தூண்டி விட்ட கபீர் மூட்டையைப் பிரித்தது.

மூட்டைக்குள் ஒரே மத்தாப்பு, பூச்சட்டி, பட்டாசு, வெடி வகைகள்.

“இதெல்லாம் என்ன? புதுசா இருக்கே?” குயில் கேட்டது.

“இதுவா? இங்கே பாரு, நான் பத்த வைச்சுக் காமிக்கறேன். ரொம்ப ஜாலியா இருக்கும்” என்று சொன்ன கபீர், கம்பி மத்தாப்பு ஒன்றை எடுத்துப் பத்த வைத்தது.

பளீரென்று பிரகாசத்துடன் பூக்களாக வெடித்துச் சிதற, முதலில் பயப்பட்ட விலங்குகள் கொஞ்ச நேரத்தில் மகிழ்ச்சியுடன் குதிக்க ஆரம்பித்தன.

உற்சாகம் கரை புரண்டு ஓட, ஆளுக்கு ஒரு மத்தாப்பு, வெடி, பூச்சட்டியென்று எடுத்து இஷ்டத்துக்கு யோசிக்காமல் பற்ற  வைக்கத் தொடங்கின. கொஞ்ச நேரத்தில் அங்கே ஒரே ரகளை. காதைப் பிளக்கும் படியாக ஒரே சத்தம்.

என்னவாயிற்று என்றால் யாரோ தவறுதலாக மூட்டைக்கு அருகிலேயே மத்தாப்பைப் பற்ற வைத்து விட்டார்கள். தீப்பொறி மூட்டையில் பட்டு வெடிகள் எல்லோமே வெடித்துச் சிற ஆரம்பித்தன.

குட்டிகள் பயந்து அங்குமிங்கும் ஓடி ஒன்றின்  மேல் ஒன்றாகத் தடுமாறி விழ ஆரம்பித்தன. 

பறவைகள் பயந்து போய் கீச்கீச்சென்று கத்திக் கொண்டு கூடுகளை விட்டுப் பறந்தன. காய்ந்த சருகுகளில் தீப் பிடித்துக் கொண்டு எரிய ஆரம்பித்து விட்டது. பெரிய விலங்குகள் எல்லாம் ஓடி வந்தன.

நடந்ததைப் புரிந்து கொண்டு அங்கே வந்த சிங்கராஜா, யானைகளை அழைத்து ஏதோ கட்டளையிட்டது. யானைகள் விரைந்து சென்று அருகில் இருந்த நதியில் இருந்து தும்பிக்கையால் நீரை உறிஞ்சிக் கொண்டு வந்து தீயில் தெளித்துத் தீயை அணைக்க முயற்சி செய்தன. மற்ற விலங்குகள் மண்ணைத் தோண்டித் தோண்டித் தீயின் மேல் போட்டன.

ஒரு வழியாகத் தீயை அணைத்து விட்டார்கள். புத்திசாலித்தனமாக உடனே செயல்பட்டதால் தீயை அணைத்து அதிக சேதாரமில்லாமல் நிலைமை கட்டுக்குள் வந்தது. பெரிய தீ விபத்தில் இருந்து அவர்கள் தப்பித்தார்கள். அங்கே ஒரே புகை மயம். எல்லோருமே இரும ஆரம்பித்தார்கள்.

சிங்கராஜா, “யார் இந்தப் பட்டாசுகளைக் காட்டுக்குள் கொண்டு வந்தது. மனிதர்களே இப்போது இவற்றை அதிகம் உபயோகிக்கக் கூடாது என்று நினைக்கும் போது இயற்கையோடு ஒன்றி வசிக்கும் நமக்கு எதற்கு இவை? மகிழ்ச்சியை வெளிப்படுத்த எத்தனையோ வழிவகைகள் இருக்கும் போது இந்தச் செயற்கையான பட்டாசுகள் நமக்கெதற்கு?” என்று கோபத்துடன் உறுமியது.

கபீர் குரங்கு தலைகுனிந்த படி வந்து தனது தவறை ஒத்துக் கொண்டது.

“சரி, சரி, இந்தத் தடவை அம்முவின் பிறந்த நாள் என்பதால் மன்னித்து விட்டு விடுகிறேன். இனிமேல் பெரியவர்களைக் கேட்காமல் எதுவும் இந்த மாதிரி அபாயகரமான வேலையில் இறங்கக் கூடாது” என்று சொல்ல, கபீரும் மகிழ்ச்சியுடன் தலையை ஆட்டியது.

யானைகள் அங்கிருந்த குட்டிகளைத் தங்கள் முதுகில் ஏற்றிக் கொண்டு காட்டை வலம் வந்தன. பயத்தில் இருந்து வெளியே வந்த குட்டிகளும் அன்றைய தினத்தைச் சிறப்பாகக் கொண்டாடி மகிழ்ந்தார்கள். அம்மு முயலுக்கும் பிறந்த நாள் கொண்டாட்டம் மறக்க முடியாதபடி சிறப்பாக முடிந்தது.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *