ஒரு அடர்ந்த காட்டுக்கு ராஜாவான சிங்கத்துக்கும், ராணிக்கும் அழகான குட்டி இளவரசன் இருந்துச்சாம். தவமாய் தவமிருந்து பெத்ததால அந்த குட்டி இளவரசனுக்கு ரொம்ப செல்லம் குடுத்து வளத்தாங்களாம். அதீத செல்லத்தோடவும், கண்டிப்பே இல்லாமலும் வளர்ந்ததால குட்டி இளவரசனான லிங்காவுக்கு ஆணவம் ரொம்பவே அதிகமாயிருந்துச்சாம். தன்னை சுத்தி இருக்குறவங்களை, நண்பர்களை எல்லாம் இழிவா பேசுமாம். இப்பக் கூட பாருங்களேன் அப்படித்தான் பண்ணிக்கிட்டு இருக்கு.

“ஏய் ஒட்டகச்சிவிங்கி! உன் கழுத்து ஏன் இவ்வளவு நீளமா அசிங்கமா இருக்கு, யானையே நீ கூட குண்டு தான், குரங்கே உனக்கு மரத்துக்கு மரம் தாவுறதுல போரே அடிக்கலியா?” என தன் சக நண்பர்களை கேலி செய்து கொண்டிருந்தது.

“ரொம்பப் பேசாத லிங்கா, கடவுள் ஒவ்வொருத்தரையும் காரணத்தோட தான் படைச்சிருக்காரு!” என்று புத்தி சொன்ன யானைக்குட்டியைக் கண்டு சிரித்தது லிங்கா.

“தம்பிங்களா அந்த பக்கம் மனுஷங்க நடமாட்டம் இருக்கு போகாதீங்கப்பா!” என்று வயதான ஓநாய் ஒன்று இவர்களைப் பார்த்து எச்சரித்துவிட்டு சென்றது.

“தாத்தா நான் இந்த காட்டுக்கே இளவரசன், என்னைப் பாத்து தான் மனுஷங்க பயப்படணும், நான் ஏன் அவங்களைப் பாத்து பயப்படணும்!” என்று சொன்னது லிங்கா.

“வேணாம் லிங்கா, தாத்தா சொன்னா கேக்கணும். வா திரும்பிப் போயிடுவோம்!” என்றது குட்டிக் குரங்கு.

“உங்களுக்கு பயமா இருந்தா நீங்க யாரும் வர வேண்டாம், நான் மட்டும் போறேன்” என்று சொல்லிவிட்டு, மனிதர்கள் இருக்கும் இடத்திற்குச் சென்றது லிங்கா.

மற்ற நண்பர்கள் மூவரும் வந்த வழியே திரும்பிச் செல்ல, சற்று நேரத்திற்கெல்லாம் குட்டி சிங்கத்தின் அபாய ஒலி அவர்களை எட்டியது.

“போச்சு! நம்ம லிங்கா மனுஷங்ககிட்ட மாட்டிக்கிட்டான் போல” என சரியாக கணித்த யானை மற்ற நண்பர்களுடன் லிங்காவைக் காப்பாற்ற ஓடியது.

மனிதர்கள் மிருகங்களைப் பிடிப்பதற்காகத் தோண்டியிருந்த பெரிய குழியில் லிங்கா விழுந்திருந்தது.

“ஃப்ரெண்ட்ஸ் என்னை எப்படியாவது காப்பாத்துங்க! எனக்கு ரொம்ப பயமாயிருக்கு” என அழுதது.

குட்டிக் குரங்கை அருகிலிருந்த மரத்தின் மீது ஏறி, மனிதர்கள் எவரேனும் தங்கள் அருகில் வருகிறார்களா என்று பார்த்துக் கொள்ளச் சொன்ன யானை, தன்னால் அந்தக் குழியில் இறங்கி, மறுபடி ஏற முடியாது என்று கண்டறிந்து, ஒட்டகச்சிவிங்கியை குழிக்குள் இறங்கும் படி சொன்னது.

ஒட்டகச்சிவிங்கி குழிக்குள் இறங்கியதும், “லிங்கா, நம்ம ஒட்டகச்சிவிங்கியோட கழுத்து மேல ஏறி அப்படியே குழிக்கு வெளிய குதிச்சுடு” என்று கட்டளையிட்டது யானை.

லிங்காவும் அப்படியே செய்ய, குழிக்குள் இருந்த ஒட்டகச்சிவிங்கியை, தன் தும்பிக்கையால் பிடித்து தூக்கி வெளியே விட்டது யானை.

serukku
படம் : அப்புசிவா

பிறகு குரங்கும் மரத்திலிருந்து இறங்கி வர, நான்கு நண்பர்களும் பத்திரமாக வீடு போய் சேர்ந்தனர்‌. தன் நண்பர்களின் எந்தத் தோற்றத்தை வைத்து கேலி செய்ததோ, அதே தோற்றத்தால் தான் காப்பாற்றப்பட்டதை அறிந்து லிங்கா வெட்கித் தலைகுனிந்தது.

What’s your Reaction?
+1
0
+1
2
+1
0
+1
0
+1
0
+1
0
guest
0 கருத்துகள்
Inline Feedbacks
View all comments