அம்மு முயல் குட்டியின் பிறந்த நாள் அன்று பட்டாசு கொண்டு வந்து அதில் தீப்பிடித்து அமர்க்களம் நடந்ததால் கபீர் குரங்கு, சிங்க ராஜாவிடம் நிறையத் திட்டு வாங்கி இருந்தது.

வாலைச் சுருட்டிக் கொண்டு அமைதியாக இருந்த கபீர், தனது விளையாட்டுத் தனத்தைக் கொஞ்ச நாட்களுக்கு மூட்டை கட்டி வைத்திருந்தது. கூட இருந்த மற்ற நண்பர்களுக்கு ஒரே ஆச்சர்யம். கபீர் குரங்கு திருந்தி விட்டதாக நினைத்தன.

“சிங்கராஜா கிட்ட நல்லாத் திட்டு வாங்கினதுல கபீருக்கு நல்ல பொறுப்பு வந்துருச்சு. நல்லது தான். கபீர், வெட்டியா ஏதாவது வில்லங்கம் செய்யாம இருந்தாக் காடே அமைதியாத் தான் இருக்கும்” என்று நினைத்து மற்ற பெரிய விலங்குகள் சந்தோஷப் பட்டன.

அன்றைக்குக் காலையில் சிங்கராஜாவின் குகை எதிரே காட்டு விலங்குகளுக்காக மீட்டிங் இருப்பதாகக் குயில்கள் கூவிக் கூவி எல்லோருக்கும் அறிவித்தன. ஏதோ முக்கியமான விஷயம் என்று சிங்கராஜா சொன்னதால், எல்லா விலங்குகளும் ஆர்வத்துடன் சிங்க ராஜாவின் குகையின் எதிரே கூடின.‌

சிங்கராஜாவுடன் மந்திரியான புலியாரும், தளபதியான சிறுத்தையாரும், காட்டின் தலைமை மருத்துவரான ஒட்டகச்சிவிங்கி டாக்டரும்

கொள்கைப் பரப்புச் செயலரான காக்கையாரும் கூட இருந்தன.

“நிச்சயமாக ஏதோ பெரிய விஷயம் தான். முக்கியமான எல்லாருமே வந்திருக்காங்களே” என்று காட்டு விலங்குகள் எல்லாம் ஆர்வத்துடன் காத்துக் கொண்டிருந்தன.

மீட்டிங்கை நடத்தும் உதவியாளராகக் கிளியார் கூவிக் கூவி விலங்குகளைக் கூப்பிட்டு அட்டென்டன்ஸ் (attendance) எடுத்துத் திருப்தியடைந்ததும், சிங்கராஜா தனது உரையை ஆரம்பித்தார்.

virus
படம் : அப்புசிவா

“காட்டை அடுத்து வெளியே இருக்கற ஊர்களில் மனுஷங்களுக்கு நடுவில ஏதோ வைரஸ் பரவியிருக்காம். பயங்கரமான வைரஸாம். நிறையப் பேருக்கு பாதிப்பு இருக்கறதுனால யாருமே வெளியே வராம வீட்டுக்குள்ளேயே அடைஞ்சு கெடக்கறாங்க. நம்ம காட்டுக்குள்ளயும் வந்து மனுஷங்க நம்மைத் தொந்தரவு செய்யலை.

அவங்க இதுனால நம்ம காட்டுக்குள்ள வரலைன்னு மனசு சந்தோஷப்பட்டாலும் மத்தவங்க துன்பத்தில இருக்கறதைப் பாத்து சந்தோஷம் அடையறது தப்பு. அவங்க பிரச்சினை சீக்கிரம் தீந்து அவங்களும் சந்தோஷமா இருக்கணும்னு நெனைச்சு வேண்டிக்குவோம். ஆண்டவன் படைச்ச உலகத்தில எல்லா உயிரினங்களும் அவங்கவங்க இடத்தில நிம்மதியா வாழறது தான் எல்லோருக்குமே நல்லது‌.

நாட்டுக்குள்ள ஸ்கூல், காலேஜ்லாம் சரியா நடக்கலை. வீட்டுக்கு வெளியே வந்து படிக்கற மாணவர்கள்ளாம் எக்ஸாம் எழுதறது கஷ்டம்னு எல்லாரையும் பரீக்ஷை இல்லாமலேயே பாஸ் போட்டுட்டாங்களாம். அதுனால நம்ம காட்டுலயும் இந்த வருஷம் எக்ஸாமை ரத்து செய்யறேன். எல்லாரும் பாஸ் பண்ணி அடுத்த கிளாஸுக்குப் போயாச்சு” என்று சொன்னதும், குட்டி விலங்குகளுக்கு ஒரே சந்தோஷம். படபடவென்று கை தட்டி மகிழ்ந்தன.

ஆட்டமும் பாட்டமுமாகக் கொண்டாட்டத்தைத் தொடர அவர்களுடைய மனங்களில் ஆசை எழுந்தாலும், சிங்கராஜாவின் மீது இருந்த மரியாதையால் அமைதியுடன் இருந்தன. மீட்டிங் முடிந்ததும் பார்த்துக் கொள்ளலாம் என்று நினைத்து ஆசையை அடக்கிக் கொண்டு அமைதியாக இருந்தன. சிங்கராஜா, தனது உரையைத் தொடர்ந்தது.

“அடுத்த முக்கியமான விஷயத்துக்கு வரேன். நாட்டுல பரவியிருக்கற வைரஸ் காட்டுக்குள்ள வரதுக்கு அதிக நேரம் பிடிக்காது‌. அதுனால நாமும் ரொம்ப ரொம்ப எச்சரிக்கையோட இருக்கணும். மனுஷங்க தான் வெளியே வரலையே. நாம போயி இஷ்டத்துக்கு  வேட்டையாடிட்டு வரலாம்னு யாரும் திருட்டுத்தனமா ஊருக்குள்ள போகக் கூடாது. ஸ்ட்ரிக்டாச் சொல்லறேன். சாப்பாட்டைத் திருடறது, சாயத் தொட்டில எட்டிப் பாக்கறதுன்னு யாரும் ரகளை செய்யக் கூடாது” என்று சொல்லிக் கொண்டே நரியைப் பார்க்க, நரியார் வெட்கத்துடன் தலை குனிந்தார். மற்ற மிருகங்கள் சிரித்தன.

“அப்படி யாராவது என்னை மீறி ஏதாவது செஞ்சீங்கன்னா, ஒட்டச்சிவிங்கி டாக்டர் கிட்ட சொல்லி அவரோட கழுத்தை விட நீளமான இஞ்செக்ஷன் ஸிரிஞ்சைக் கொண்டு வரச் சொல்லிடுவேன், ஆமா, பாத்துக்குங்க” என்று சொல்லி, சிங்கராஜா உரையை முடித்தார்.

ஒரு விலங்குக்குத் தொற்று வந்தால் காடு முழுவதும் பரவும் அபாயம் இருந்ததால், எல்லா விலங்குகளும் நிலைமையைப் புரிந்து கொண்டு, அமைதியாகக் காட்டுக்குள் இருந்தன. பறவைகள் கூட ஜாக்கிரதையாக வானத்தில் வட்டமடித்து விட்டு, நீர்நிலைகளைச் சுற்றி விட்டு வந்து சேர்ந்தன.

இந்த விஷமத்தனமான நரியால் மட்டும் சும்மா இருக்க முடியவில்லை. கொஞ்சம் அடங்கியிருந்த கபீரையும் கிளப்பி விட்டது.

“இது தான் நமக்கு நல்ல சான்ஸ். ஊருக்குள்ள பகல் நேரத்துலயே தைரியமாப் போகலாம். நாம ரெண்டு பேருமாப் போயி ஐஸ்கிரீம் பார்லரில ஐஸ்கிரீம் நெறைய சாப்பிட்டுட்டு வரலாம். இந்த வெயிலுக்கு நல்லா குளுகுளுன்னு இருக்கும்” என்று திரும்பத் திரும்பச் சொல்லிக் கிளப்பி விட்டது.

அடி மேல் அடி வைத்தால் அம்மியும் நகரும் என்பது போல, கபீர் குரங்கும் நரியின் பேச்சில் மயங்கி விட்டது. இரண்டுமாக ஊருக்குள் போய் நிறைய விதவிதமான ஐஸ்க்ரீம்களை விழுங்கி விட்டு வந்தன.

அடுத்த நாள் இரண்டுக்கும் ஒரே தும்மல், இருமல், ஜலதோஷம் வந்ததில் அவர்களுடைய திருட்டுத்தனம் வெளியானது. அவர்கள் இருவரையும் ஒரு குகைக்குள் போட்டு அடைத்து வைத்தார்கள். யாருமே அந்த குகைப் பக்கம் போகக்கூடாது என்று உத்தரவு போடப்பட்டது.

ஒட்டகச்சிவிங்கி டாக்டர் மட்டும் முகத்தில் கழுத்து வரை நீளமான மாஸ்க் போட்டுக் கொண்டு தலையை மட்டும் குகைக்குள் நீட்டி அவற்றிற்கு மருத்துவம் பார்த்தது. வெறும் மூலிகைகள் தான் சாப்பாடு. பாவம் கபீரும், நரியும் காய்ச்சல் வந்து வாடி வதங்கிப் போயின. கிட்டத்தட்ட ஒரு மாதம் கழித்து இரண்டும் வெளியே வர  உடம்பு பாதியாக இளைத்துப் போய் பலவீனமாக நடந்து வந்தன. நல்லவேளையாக முதலிலேயே அவற்றைத் தனிமைப்படுத்தி விட்டதால், காட்டில் வைரஸ் பரவவில்லை.

அடுத்த வாரம் யானை தும்பிக்கையில் ஆற்று நீரைக் கொண்டு வந்து பாயாசம் செய்து எல்லோருக்கும் கொடுத்தது. நரிக்கும், கபீருக்கும் மட்டும் கொடுக்கவில்லை. எல்லோரையும் பார்த்துப் பார்த்து அவை ஏக்கத்துடன் நிற்கக் கடைசியில் சிங்க ராஜா மனம் இரங்கி அவர்களுக்கும் கொடுக்கச் சொல்லி சைகை காட்ட, இரண்டுக்கும் பாயாசம் பரிமாறப்பட்டது.

“இவங்களைப் பாத்தவங்க எல்லாரும் புரிஞ்சுக்கங்க. இனிமே யாரும் பெரியவங்க பேச்சை மதிக்காம இருந்து தப்பு செய்யக்கூடாது” என்று சொல்ல, எல்லா விலங்குகளும் தலையை ஆட்டின. யானைக்குட்டி தனது  தும்பிக்கையை வானத்தை நோக்கி உயர்த்திப் பிளிறித் தன் சம்மதத்தைத் தெரிவித்தது.

What’s your Reaction?
+1
1
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
Subscribe
Notify of
guest
0 கருத்துகள்
Inline Feedbacks
View all comments