அந்த அரசு பள்ளியின் ஐந்தாம் வகுப்பு ‘ஏ ‘ பிரிவில் தமிழாசிரியர் நல்லசிவம் நுழைந்தார். அவர் தான் அவர்களுடைய  வகுப்பாசிரியரும் கூட. மாணவர்களிடம் தேவையான சமயங்களில் கண்டிப்பு காட்டினாலும், அன்பையும் பாகுபாடில்லாமல் காட்டும் நல்லாசிரியர்.

 தனது கண்டிப்பைக் குரலை உயர்த்தி மட்டுமே காட்டுவார். குழந்தைகளைப் பிரம்பால் அடிப்பது போன்ற வன்முறைச் செயல்களை என்றுமே செய்ய மாட்டார். அவருடைய தமிழைப் போல குணமும் மிகவும் இனிமை.

” மாணவர்களே! உங்களுக்காக ஒரு முக்கியமான அறிவிப்பு. இந்த மாதக் கடைசியில் கொடைக்கானலுக்குக் கல்விச் சுற்றுலா போகலாமென்று பள்ளி நிர்வாகம் முடிவு செய்துள்ளது. வீட்டில் கலந்து பேசிவிட்டு நாளை வந்து பெயர் கொடுக்கலாம். அடுத்த வாரம் சுற்றுலாவுக்காகத் தங்களுடைய பேரைப் பதிபவர்கள் ஐநூறு ரூபாய் முழுப்பணத்தையும் அலுவலகத்தில் வந்து செலுத்தி விடுங்கள்” என்று நல்லசிவம் அறிவித்ததும் மாணவர்களுக்கு பயங்கரக் கொண்டாட்டம்.

அவர்களுடைய அரட்டை, வகுப்பில் சலசலப்பை ஏற்படுத்த, ஆசிரியரும் மாணவர்கள் தங்களுக்குள் குதூகலமாகப் பேசிக் கொள்வதைப் பார்த்து ஆனந்தம் அடைந்தார்.

இந்த வருடம் இது தான் முதல் சுற்றுலா என்பதால் மாணவர்களுக்கு மிக அதிகக் கொண்டாட்டம்.‌ அனைவரும் வீட்டில் பெற்றோரிடம் பேசி ஒப்புதல் வாங்கி விட்டார்கள்.

அன்புச் செல்வனும் அன்று தன் தாயிடம் சொல்லி இருந்தான்.‌ அவனுடைய அப்பா கட்டிடம் கட்டுமிடத்தில் சித்தாள் வேலை பார்க்கிறார். அம்மா, வீடுகளில் வேலை பார்க்கிறாள். மூன்று வயதில் ஒரு தங்கை. அவர்கள் இருவருடைய வருமானமும் சேர்ந்து ஏதோ சாப்பாட்டுச் செலவுக்கும் மற்ற மேற் செலவுகளுக்கும் சரியாக இருக்கிறது. வேறு அதிகப்படியான வசதிகள் எதுவும் நினைத்துப் பார்க்க முடியாத ஏழைக் குடும்பம். மகனை நன்றாகப் படிக்க வைக்க வேண்டும் என்று கஷ்டப்பட்டுத் தான் பெற்றோர் படிக்க வைக்கிறார்கள். அன்புச் செல்வனும் பொறுப்பை உணர்ந்து நன்றாகவே படிக்கிறான். வகுப்பில் முதல் மூன்று ரேங்கிற்குள்ளும் எப்போதும் வந்து விடுவான்.

அது மட்டுமல்லாமல் எல்லோருக்கும் ‌உதவும் குணம் அவனுக்கு உண்டு. அதனாலேயே அவனை எல்லோருக்கும் பிடிக்கும்.

picnic

அன்புவின் அம்மா, அவன் சுற்றுலா போவதற்கு ஆசைப்படுவதைப் புரிந்து கொண்டாள். பாவம் குழந்தை தானே அவனும்!

” அம்மா, உங்களை ரொம்பக் கஷ்டப்படுத்தறேனா நான்?” என்றான் அன்பு வருத்தத்துடன்.

” சேச்சே, அதெல்லாம் இல்லைடா. நாளைக்கு நான் வேலை பாக்கற வீட்டில அட்வான்ஸ் கேட்டு வாங்கிட்டு வரேன். நீ சந்தோஷமாப் போயிட்டு வா” என்றாள்.

” சம்பளத்தை அட்வான்ஸா வாங்கினா அடுத்த மாசம் கஷ்டமில்லையாம்மா?”

” இல்லைடா, கொஞ்சம் கொஞ்சமாக் கழிச்சு சமாளிக்கலாம். நீ கவலைப்படாதே” என்று சமாதானம் செய்தாள்.

அன்புவும் அடுத்த நாளே மகிழ்ச்சியுடன் தனது பெயரைப் பதிவு செய்தான்.

அன்புவின் அம்மா, அடுத்த நாளே வெற்றிகரமாகப் பணம் வாங்கிக் கொண்டு வந்தார். ஆனால் அன்புவின் தங்கைக்குக் காய்ச்சல் திடீரென்று வந்ததில் மருத்துவச் செலவில் அந்தப் பணம் செலவாகி விட்டது.

அடுத்த வாரம் வகுப்பில் எல்லோருமே பணம் கட்டி விட, அன்புவால் மட்டும் பணம் தரமுடியவில்லை. அன்புவின் வகுப்புத் தோழர்கள் எல்லோரும் வருத்தமடைந்தார்கள்.

” நாம எல்லோரும் ஆளுக்குப் பத்து ரூபாய் போட்டு அன்புச்செல்வனுக்காகப் பணம் கட்டலாமா?” என்றான் ஹரி.

” இல்லைடா. அன்புச்செல்வனுக்கு அது பிடிக்காது . ஒத்துக்க மாட்டான். நாம் அவனோட வறுமையைப் பாத்து இரக்கப் பட்டா, அவனுக்குப் பிடிக்காது” என்றாள் சாந்தி.

எல்லோருமாகச் சேர்ந்து வகுப்பு ஆசிரியரான தமிழ் ஆசிரியரிடம் சென்று கலந்தாலோசித்தார்கள்.

” சரி, நீங்க போங்க. நான் பாத்துக்கறேன். அன்புச் செல்வனைச் சுற்றுலாவுக்குக் கூட்டிட்டு வர வேண்டியது என்னோட பொறுப்பு” என்று சொல்லி அவர்களை அனுப்பி வைத்தார்.

அடுத்த நாள் வகுப்பிற்கு நல்லசிவம் வந்தார்.

” மாணவர்களே! ஒரு மகிழ்ச்சியான செய்தி. கல்விச் சுற்றுலாவிற்கு வர முடியாத குழந்தைகளில் மூன்று பேரைக் குலுக்கல் முறையில் நமது பள்ளி நிர்வாகமே தேர்ந்தெடுத்திடுக்கிறது. அந்த மூன்று பேரில் நமது வகுப்பைச் சேர்ந்த அன்புச்செல்வனும் ஒருத்தன்” என்று சொல்ல, அனைவரும் மகிழ்ச்சியுடன் கை தட்டினார்கள்.

” அவர்கள் மூன்று பேரைத் தவிர மீதமிருந்த ஐந்து பேருக்கும் பள்ளி ஆசிரியர்களும் அலுவலகத்தில் வேலை செய்பவர்களுமாகச் சேர்ந்து பணம் கட்டி விட்டதால் இப்போது எல்லோருமே சுற்றுலாவில் கலந்து கொள்ளப் போகிறோம்” என்று அறிவிக்க, ஒரே கொண்டாட்டம் தான் வகுப்பில்.

பிரச்சினையை சரியானபடி தீர்த்து வைத்த தமிழாசிரியருக்கு மட்டற்ற மகிழ்ச்சி. மனம் நிறைந்தது. தனது மாணவர்களை எண்ணிப் பெருமை கொண்டார்.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
Subscribe
Notify of
guest
1 கருத்து
Newest
Oldest Most Voted
Inline Feedbacks
View all comments